> குருத்து: எழுத்து!

October 25, 2020

எழுத்து!


கேள்வி : //படிக்கின்ற விசயங்கள் மற்றும் தோன்றும் எண்ணங்களை வார்த்தை வடிவில் கொண்டுவர தடுமாற்றம் தோன்றுகிறது.. எழுத நினைக்கும் போது எண்ணங்கள் மறந்துவிடுகிறது ஏன்?//

– நவநீதன்

அன்புள்ள நவநீதன்,

எழுதுவதற்கு முன்னர் நாம் நிறைய படிக்க வேண்டும். அந்த படிப்பையும் ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில் குறிப்புகளோடு படிப்பது அவசியம். குறிப்பிட்ட நூலில் இருந்து நாம் என்ன புதிதாக கற்றுக் கொண்டோம், அந்த நூலில் நம் மனம் கவர்ந்தது எது – ஏன், கவராதது எது – ஏன்? என்பதை நம் சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.

எழுத்துக்கு திட்டமிட்ட செயல்பாடும், திட்டமிடாத கற்பனை வளம் இரண்டும் வேண்டும். அதற்கு இந்த செயல்முறை உதவுமென நம்புகிறோம். நீங்கள் குறிப்பாக இன்னதுதான் எழுதப் போகிறீர்கள் என்பதறியாமல் இந்த கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது.

நன்றி!

நன்றி : வினவு

0 பின்னூட்டங்கள்: