கதை. நாயகன் தன் ஆறு பிள்ளைகளுடன் (6 வயது முதல் 18 வயது வரை) பசிபிக் வடமேற்கு ஆழமான காட்டிற்குள் ஒரு கூட்டை கட்டி, சமூகத்திலிருந்து முற்றிலுமாக தன்னை துண்டித்துக்கொண்டு வாழ்கிறார். அவருடைய துணைவியாருக்கு மனநிலை பிரச்சனை இருந்ததால், நாயகியின் பெற்றோர் பராமரிப்பில், மருத்துவம் பார்த்துவருகிறார்.
முறையான உடற்பயிற்சி, மலையேற்றம், வேட்டையாட பயிற்சி, இலக்கியம், அரசியல், அறிவியல், மொழிகள் கற்றுத்தருவது என எல்லாவற்றையும் பயிற்றுவிக்கிறார். வாழ்வதற்கு தேவையான எல்லாமும் காட்டிலிருந்து பெறுகிறார்கள். நகரத்திற்கு வந்து போக ஒரு பேருந்து வைத்திருக்கிறார். தேவையான பொழுது வந்து போகிறார்.
இதற்கிடையில் மருத்துவம் பார்த்து வந்த நாயகனின் துணைவியார் தற்கொலை செய்துகொள்கிறார். துணைவியார் இறப்புச் சடங்குக்கு நாயகன் வந்தால், "போலீசில் புகார் செய்து உள்ளே தள்ளுவேன்" என மிரட்டுகிறார் நாயகனின் மாமா. போனால் பிரச்சனை வரும். ஆகையால் செல்லவேண்டாம் என நினைக்கிறார். ஆனால் பிள்ளைகள் போகவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் நாயகன் பிள்ளைகளோடு கிளம்புகிறார்.
இறந்த தன் மகளை தனது கிருத்துவ முறைப்படி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இறந்தவரோ புத்த பழக்கவழக்கங்களை பின்பற்றியவர். சடங்குகளை எதிர்ப்பவர். ஆகையால், தனது உடல் புதைக்கப்பட கூடாது. எரிக்கப்பட வேண்டும். எரித்த சாம்பலை சடங்குகள் ஏதும் இல்லாமல், ஒரு டாய்லட்டில் போட்டுவிடவேண்டும் என தன் கணவரிடம் உயில் போல எழுதி தந்திருக்கிறார்.
சர்ச்சில் இறந்தவரை சாந்திப்படுத்த சடங்குகள் செய்கிறார்கள். நாயகன் அங்கு வந்து, நாயகி தன்னிடம் எழுதிக்கொடுத்ததை அனைவரின் முன்னிலும் வாசிக்கிறார். தனது செல்வாக்கால், நாயகியின் அப்பா அவர்களை வெளியே துரத்திவிடுகிறார். புதைத்தும்விடுகிறார்.
மூத்த பையனுக்கு கல்லூரிக்கு சென்று படிக்கவேண்டும் என விரும்புகிறான். கல்லூரியில் விண்ணப்பிக்க அவனுடைய அம்மா உதவியும் செய்திருக்கிறார். சின்ன பையனுக்கும் காட்டில் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை. நகருக்கு வந்தபிறகு, தன் தாத்தா, பாட்டியுடன் ஒட்டிக்கொள்கிறான். அவர்களோடு வர மறுக்கிறான்.
அதற்கு பிறகு நடக்கும் சில நிகழ்வுகளால் நாயகன் மீண்டும் காட்டிலேயே சென்று வாழ்ந்தாரா? என்பதை மீதிப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
****
நிலவும் முதலாளித்துவ சமூகம் மிக மோசமாக இருக்கிறது. ஆகையால் அதிலிருந்து தனது குடும்பத்தை துண்டித்துக்கொண்டு வாழ முயல்வதும், அதில் எழுகின்ற முரண்பாடுகளும் தான் கதை.
முதலாளித்துவ சமூகம் பல்வேறு கோளாறுகளுடன் இருக்கிறது. அதில் பெரும்பான்மையான மக்கள் துன்பங்களோடு உழல்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களோடு ஐக்கியப்பட்டு, அவர்களை அமைப்பாக்கி, அரசியல்படுத்துவதின் மூலம் தான் சமூக மாற்றம் செய்யமுடியும். அதற்கு முதலில் மக்கள் தான் வரலாற்றை படைப்பவர்கள் என கற்கவேண்டும். அசாத்திய கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு சரியான அமைப்பை கண்டுப்பிடித்து அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வேலை செய்யவேண்டும். இப்படித்தான் சமூக மாற்றத்திற்கான வேலைகளை பலரும் செய்துவருகிறார்கள்.
ஒரு சில அறிவுஜீவிகளுக்கு இதற்கு பொறுமையும் இல்லை. மக்கள் மீது நம்பிக்கையும் இல்லாமல், தன் "சக்திக்குட்பட்டு" தன் குடும்பத்தை வைத்து சோதனை செய்யும் (கற்பனை) முயற்சி தான் படம். பிள்ளைகள் முரண்படுகிறார்கள். அது தனி. நாயகனின் துணைவியாரே இதில் உடன்பாடு இல்லாமல், நாயகனோடு விவாதித்துக்கொண்டு இருந்திருப்பார் என்பதை சில காட்சிகள் மூலம் நாம் உணர்கிறோம்.
படம் ஒரு சோதனை முயற்சி. சுயாதீனப்படம். படத்தில் எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் ஆஸ்காருக்கான பரிந்துரையில் இருந்திருக்கிறார். படத்தை வகைப்படுத்தும் பொழுது, காமெடி டிராமா என வகைப்படுத்தி விக்கியில் எழுதியிருக்கிறார்கள். இந்தப் படம் எப்படி காமெடியில் வரும் என தெரியவில்லை.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள். பிறகு சந்தேகங்கள் இருந்தால், விவாதிப்போம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment