The Sixth Sense (1999)
Supernatural Psychological Thriller
கதை. நாயகன் குழந்தைகளுக்கான மனநல மருத்துவர். அவருக்கு கிடைத்த விருது பற்றி துணைவியாருடன் பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென வீட்டிற்குள் நுழையும் அவருடைய பழைய நோயாளி “நான் சரியாகிவிடுவேன் என சொன்னீர்கள். ஆனால் சரியாகவில்லை” என அழுது, அவரை வயிற்றில் சுட்டுவிட்டு, தானும் சுட்டு இறந்துவிடுகிறான்.
அந்த நோயாளி இறந்தது அவருக்கு குற்ற உணர்ச்சியை தூண்டுகிறது. அதனால், அவனுக்கு இருக்கும் பிரச்சனையைப் போலவே ஒரு 9 வயது சிறுவனுக்கும் பிரச்சனை. பிராயச்சித்தமாக அவனை சரி செய்யலாம் என நினைக்கிறார். சிறுவனோ முதலில் மருத்துவரை நம்ப மறுக்கிறான். அவனுக்கு பிடித்த மாதிரி பழகி, அவனிடம் மெல்ல மெல்ல நெருங்குகிறார். பிறகு, யாரிடமும் சொல்லாமல் இருந்ததை, மருத்துவரிடம் ”இறந்தவர்கள் நிஜ மனிதர்கள் போலவே உலாவுகிறார்கள். என்னை தொல்லைச் செய்கிறார்கள்” என்கிறான்.
இதற்கிடையில், மருத்துவர் வேலை வேலை என பிசியாக சுற்றுவதால், அவருக்கும் அவருடைய துணைவியாருக்குமே இடைவெளி அதிகமாகி கொண்டே போகிறது. அவரால் சரி செய்ய முயன்றும், முடியவில்லை.
அவனுக்கு என்ன பிரச்சனை என்பதை புரிந்துகொண்டு, அதிலிருந்து விடுபட வைத்தாரா? பழைய நோயாளியை போல கைவிட்டுவிட்டாரா? அவருடைய குடும்ப பிரச்சனை சரியானதா? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
பேய் படங்கள் என்றால், கோரமாக பயமுறுத்துகிறவை ஒரு வகை. மிஷ்கினின் “பிசாசு” ஒரு வகை. அதுபோல, இந்தப் படமும் வித்தியாசமானது. ஒரு சூப்பர் நேச்சரல் கதையை எடுத்துக்கொண்டு, மனித உணர்வுகளை கடத்துவது என்பது அருமையாக இருந்தது.
நைட் சியாமளின் படங்கள் இதுவரை நான்கு படங்கள்வரை பார்த்திருக்கிறேன். அதில் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. நாயகன் ப்ரூஸ்வில்ஸ் ஆக்சன் நாயகன். இதில் குழந்தை நல மருத்துவராக அருமையாக பொருந்தியிருக்கிறார். ஒரு சின்ன பையனைப் போய் ஏன்யா இத்தனை ஆவிகள் தொல்லை செய்கிறீர்கள்? என பரிதாபப்படும் அளவிற்கு அந்த பையன் அருமையாக செய்திருக்கிறான்.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment