> குருத்து: Hereditary (2018)

October 25, 2020

Hereditary (2018)


Disturbing Horror Movie

கதை. அந்த வீட்டில், அம்மா, அப்பா, மகன், மகள் என வாழ்ந்துவருகிறார்கள். அந்த வீட்டில் அம்மா வழி பாட்டி இறந்துவிடுகிறார். இறப்புச் சடங்கிலிருந்து தான் படம் துவங்குகிறது. பாட்டி இறந்ததால், சோகமாக இருக்கிறாள் பேத்தி. அவளைத் தேத்த முயற்சிக்கிறார்கள்.

தன் அம்மாவின் இறப்புக்கு பிறகு, அந்த வீட்டில் சில வித்தியாசமான உணர்வுகளை பெறுகிறாள். மகன் சக மாணவர்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். மகள் சோர்வாக இருக்கிறாளே என அவளையும் அழைத்துக்கொண்டு போக சொல்கிறாள். வேண்டா வெறுப்பாக தன் தங்கையை அழைத்துச்செல்கிறான். அங்கு இருக்கும் கேக்கை சாப்பிடுகிறாள். அவளுக்கு அலர்ஜியாகிவிடுகிறது. தங்கையை தூக்கிக்கொண்டு, காரில் அழைத்துவருகிறான். பின்சீட்டில் வலியால் துடிக்கிறாள். மிக வேகமாக வருகிறான். அவள் காருக்கு வெளியே எட்டிப்பார்க்கிறாள். விளைவு தங்கை தலை துண்டிக்கப்பட்டு இறக்கிறாள். அந்த இழப்பை அவர்களால் தாங்க முடியாததாக இருக்கிறது.

அந்த குடும்பத்தில் அதற்கு பிறகு விரும்பதகாத சம்பவங்கள் நடக்கிறது. ஏன் நடக்கிறது? அதன் பின்னணி என்ன என்பதை விலாவரியாக சொல்லியிருக்கிறார்கள்.

****

கான்ஜூரிங் படங்கள் ஒரு வகை என்றால், இது ஒரு வகைப்படமாக இருக்கிறது. விபத்தில் தங்கை சாகும் பொழுது, அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என காட்சியாக காண்பிக்கமாட்டார்கள். ஆனால், அவன் காட்டும் உணர்வுகள் இருக்கிறதே! அதை அப்படியே நமக்கு கடத்தியிருப்பார்கள். இயக்குநருக்கு முதல்படம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், அம்மாவாக நடித்திருக்கிற Toni Collette அருமையாக செய்திருக்கிறார்.

1978ல் மக்கள் ஆலயம் என்கிற அமைப்பை நிறுவிய ஒரு சாமியார் ”சொர்க்கத்துக்கு போவோம்” என்ற கருத்தை நம்பி குடும்பம் குடும்பமாக 900 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் 304 குழந்தைகள். 2018ல் தில்லியில் 11 பேர் உள்ள குடும்பம் மொத்தமும் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்கள். விசாரிக்கும் பொழுது, ”சொர்க்கத்திற்கு செல்வோம்” என்கிற ரீதியாக கருத்துதான். படம் பார்த்து முடிந்த பொழுது இந்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போனது. கடவுள் நம்பிக்கை என்பது தனிநபரோடு இருக்கும் வரைக்கும் பெரிய ஆபத்தில்லை. அது ஒரு நிறுவனமாக மாறும் பொழுது, சமூகத்திற்கு ஏகப்பட்ட மோசமான விளைவுகளை உருவாக்கிவிடுகிறது.

குடும்பத்தோடு பார்ப்பது உசிதமில்லை. தனியாக பார்த்துவிட்டு, முடிவெடுங்கள். இயக்குநரின் அடுத்தப்படத்தை இப்போது பார்க்க எடுத்துவைத்திருக்கிறேன் Midsommar.

0 பின்னூட்டங்கள்: