> குருத்து: Memories (2013) மலையாளம்

October 1, 2020

Memories (2013) மலையாளம்


கதை. நாயகன் ஒரு போலீசு அதிகாரி. அவருடைய குழு தீவிரவாதிகளை கொல்லும் பொழுது, ஒருவர் தப்பிக்கிறார். பிறகு, அவர் நாயகனின் துணைவியாரையும், குட்டிப்பெண்ணையும் கொல்கிறார். குடும்பத்தை இழந்த துயரத்தில், எப்பொழுது பாரும், பாட்டிலுமாக சுற்றுகிறார். வேலைக்கும் செல்வதில்லை.


நகரில் ஆட்கள் கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லபட்டு, மக்கள் கூடுமிடங்களில் தொங்கவிடுகிறார்கள். ஒன்று, இரண்டு என கொலைகள் தொடர்கின்றன. யாரையும் பிடிக்கமுடியவில்லை. மேலிருந்து அழுத்தம் தருகிறார்கள். நாயகன் ஒரு திறமையான அதிகாரி. உயர் அதிகாதி அவரைப் பார்த்து பேசுகிறார். மறுக்கிறார். அம்மா சென்டிமென்ட் மூலம் ஏற்க‌ வைக்கிறார்.


கொலை செய்யப்படுகிறவர்கள் மீது சில எழுத்துக்கள் இருக்கின்றன. அதை தேடிப்பார்த்தால், பைபிளுக்கு கொண்டு செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாயகன் முன்னேறுகிறார். கொலைகளுக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பதை கண்டுபிடித்தார்களா என்பது மீதிக்கதை!


****


இந்தப் படத்தை 'திருஷ்யம்' இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கினார். இதன் வெற்றியில், தமிழில் "ஆறாது சினம்" என அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்தது. சின்ன சின்ன மாற்றங்களுடன் தமிழில் வந்தது. எனக்கு இரண்டு படங்களுமே பிடித்திருந்தன.


படத்தில் சொல்வதற்கு எனக்கு ஒரு விசயம் தான். பொதுவாக, "ஆசிரியர் குடைப்பிடித்து செல்வார்" என்ற கிளிஷே காட்சிப் போல தமிழ், மலையாளம் என இந்தியப்படங்களில், திரும்ப திரும்ப ஒன்றை சொல்கிறார்கள். தீவிரவாதிகள் அரசு அதிகாரிகளை பழிவாங்க குடும்பத்தை கொல்வது போல‌ காட்டுகிறார்கள். எனக்கு தெரிந்து அப்படி ஒரு கொலை வழக்கை கூட கேள்விப்பட்டதேயில்லை. இது சம்பந்தமாக, "என்னை அறிந்தால்" படம் வந்த பொழுது, தமிழ் இந்துவில் இந்த கேள்வியை எழுப்பி நீண்ட கட்டுரை ஒன்று வெளிவந்தது.


நமது இயக்குநர்கள் "தீவிரவாத" இயக்கங்கள் அவர்களுடைய அமைப்பு கொள்கைகள், கோட்பாடுகள் என எதையும் தெரிந்துகொள்வதேயில்லை. அரசு ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக என்ன கட்டியமைத்திருக்கிறதோ, அதைத் தாண்டிய அறிவு நம் இயக்குநர்களுக்கு இல்லவேயில்லை. கூடுதலாக தங்கள் திறமைக்கேற்ப இன்னும் எதையாவது பில்டப் செய்து காட்டுகிறார்களே தவிர, உண்மை எது என‌ தெரிந்துகொள்ள விரும்புவதும் இல்லை.


அதே போலவே, தனிப்பட்ட இழப்பிற்கு பிறகு தான் நாயகன் பொது நல்ல காரியங்களுக்கு வருவான் என்பதும் ஒரு மித் தான். நான் அறிந்து சமூகத்தில் பொதுப்பிரச்சனைகளுக்கு போராடுகிறவர்கள், தனிப்பட்ட இழப்புகளுக்கு பிறகு வந்தவர்கள் அல்ல! சமூகம் நன்றாக இருக்கவேண்டும் என்ற உணர்வில் தான் பொது வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.


இன்னும் எத்தனை காலம் தான், இந்த விசயத்தில் பழைய ரிக்கார்டையே தேய் தேய் என தேய்க்கப் போகிறார்கள் என தெரியவில்லை.

0 பின்னூட்டங்கள்: