> குருத்து: May 2020

May 23, 2020

லாக்டவுன் கதைகள் - 5


900 கிமீ நடை பயணம்
ஏழுமாத கர்ப்பிணி

ஆந்திராவிலிருந்து வடக்கு திசையை நோக்கி செல்லும்
அந்த நீண்ட நெடுஞ்சாலையில்
சாலையோரமாக
எறும்புகளைப் போல சாரை சாரையாக
மக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் ஏழு மாத கர்ப்பிணியான
32 வயதான முஜிபர் ரேணுவும்
தன் கணவனுடன் நடந்துசெல்கிறார்.
எப்படியோ 170 கிமீ நடந்து ஆந்திராவின் எல்லையை
அடைந்துவிட்டார்.

தனது சொந்த ஊரான
சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் சென்றடைய
இன்னும் 700 கிமீ தூரம் செல்லவேண்டியதிருக்கிறது.
2018ல் ஹைதாரபாத்திற்கு தன் கணவனுடன் வந்தார்.

பச்சுபள்ளியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார்கள்.
ஊரடங்கு அறிவித்ததும், வேலை இல்லை.
கையிலிருந்த கொஞ்சம் பணமும்
சிறிது நாட்களிலேயே செலவாகிப்போனது.
கிடைத்த 12 கிலோ அரிசியும், 500 பணமும்
உயிரை தக்க வைப்பதற்கு போதவில்லை.
இனியும் இங்கிருந்தால்
நிலைமை கைமீறிப்போய்விடும்.
பசியில் செத்துப் போவதை விட
ஊருக்கெ கிளம்பிவிடுவது என முடிவெடுத்தார்கள்.

ரயிலுக்கு பல நாட்கள் காத்திருப்பது
சாத்தியமில்லை.
இன்னொரு வாய்ப்பு
நடந்து செல்வது தான்.
நடக்க ஆரம்பித்தார்கள்.

பேரரசரும்
அவர்களுடைய அவையை அலங்கரிக்கும்
மந்திரிகளும் கொஞ்சமாய் வருத்தப்படுகிறார்கள்.
50 நாட்களுக்குப் பிறகு
கூடுதலாக அரிசி தருவதாக அறிவிக்கிறார்கள்.
எங்களால் என்ன செய்யமுடியும்? என
உச்சநீதிமன்றமும் கைகழுவிட்டது.

அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கிறது.
சாலையெங்கும்
கானல் நீர் கண்ணில்படுகிறது.
அரசுகள் நம்மை காப்பார்கள் என்ற
நம்பிக்கை போய்
பல நாட்களாயிற்று.
தகிக்கும் சாலையில்
குடும்பம் குடும்பமாக
போய்க்கொண்டிருக்கிறார்கள்.

வெட்கை தாங்கமுடியவில்லை என
புலம்பிக்கொண்டே
நாம் தொலைக்காட்சியில்
வேடிக்கைப் பார்க்கிறோம்.

 Source : Times of India, May 13, 2020

 Picture : Mujibur Renu with husband on their way to chhattisgarh

லாக்டவுன் கதைகள் - 4

ரயிலில் சொந்த ஊருக்கு
செல்ல ஆசைப்பட்டான்.
உயிரற்று ஆம்புலன்சில்
சென்றடைந்தான்.


ஆசிப் இக்பால் மண்டல். வயது 22.
எர்ணாகுளம் மாவட்டம் கொடநாடு பகுதி.
செங்கல்சூளையில் வேலை.
ஊரடங்கால் சூளை மூடப்பட்டது.
செய்த வேலைக்கு
கூலியும் தரவில்லை.

ஊருக்கு செல்லலாம் என்றால்
ரயில் இல்லை. பேருந்து இல்லை.
நடந்தே செல்லலாம் என்றால்
மேற்குவங்கம் முர்ஷிடாபாத் வரை
செல்ல வேண்டிய தூரம் 2900 கிமீ.
தயங்க வைத்தது.

கையிலிருந்த சொற்ப பணமும்
கரைய ஆரம்பித்தது.
ஊருக்கு சென்றுவிட்டால்
மீண்டும் ஒரு போதும் திரும்பகூடாது என
முடிவெடுத்தான்.

இரண்டு முறை
ரயிலில் செல்ல விண்ணப்பித்தும்
ரத்தானது.
இனி ஒரு போதும்
வீட்டிற்கு போக முடியாது என நம்பத்துவங்கினான்.
பதட்டமும், பயமும் அதிகமானது.
மோடியின் ராஜ்ஜியத்தில் இருந்து
விடுதலை பெற்றார்.

உயிரோடு அனுமதிக்காத அரசு
உயிரற்று ஆம்புலன்சில் 2900 கி.மீ
செல்ல அனுமதித்தது!
செலவு ரூ.1,30,000.
சொந்த ஊர்காரார்கள் வசூலித்து
பணத்தைக் கொடுத்தார்கள்.

”எல்லாம் முடிந்துவிட்டது” என
பண்ணை விவசாயியான தந்தை கலங்கினார்.
மூத்த மகனை இழந்த செய்தி
கேள்விப்பட்டதிலிருந்து
அம்மா பலமுறை மயங்கி விழுந்தார்.

பணக்காரர்கள்
உலகத்தில் எங்கிருந்தாலும்
பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பிவிடுகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளிகளுக்கு
சொந்த ஊர் செல்வது கூட
கனவாகத்தான் இருக்கிறது!

Source : The Wire (13/05/30)

Photo : Asif's father, brother and mother

https://thewire.in/rights/migrant-bengal-suicide-trains

லாக்டவுன் கதைகள் 3



 
திருப்பூர்.
முகமதுயூனுஸ்
ஆட்டோ நிலையத்தில்
அமர்ந்திருந்தார்.
25 மதிக்கத்தக்க பெண்
”இந்த செல்போனை வைத்துக்கொள்ளுங்கள்.
100 ரூ. அடமானமாக தாருங்கள்” என்றார்.


விசாரித்தால்…
“ஊரடங்கால் தன் கணவனுக்கு
வேலை இல்லை.
இரண்டு குழந்தைகளுக்கும்
பால் வாங்க கூட காசு இல்லை”
என கண்ணீருடன் தன் கதை சொன்னார்.

செல்போனை
அவரிடமே தந்து
தன்னிடமிருந்த 60ரூயை
செலவுக்கு தந்தார்.

தான் அறிந்த பெண்
போலீசு அதிகாரிக்கு தகவல் தந்து
அத்தியாவசிய பொருட்களையும்
வாங்கித்தந்தார்.

- மே3 தினத்தந்தி நாளிதழில்.

லாக்டவுன் கதைக‌ள் - 2

மகாராஷ்டிரம் நாசிக்கில்
கணவனுக்கு வேலை.
ஊரடங்கு வேலையை பறித்தது.
செய்த வேலைக்கு
கூலியும் தரவில்லை.
மனைவி சகுந்தலாவோ நிறைமாத கர்ப்பிணி.
இனி இங்கு
வாழ வழியில்லை என உறைத்தது.

சொந்த ஊரான மத்தியபிரதேசத்தில் இருக்கும்
சட்னா மாவட்டத்தின் உச்சாரா
செல்ல முடிவெடுத்தார்கள்.

16 பேரும் நடக்க துவங்கினார்கள்.
70 கி.மீ பயணம்.
ஆக்ரா - மும்பை
சாலையில் செல்லும் பொழுது வலி வந்து..
மே 5ல் பிரசவம்.
மோடியின் ராஜ்ஜியத்தில்
புதிய உயிர்.
ஒருமணி நேரம் ஓய்வு.
இன்னும் செல்லவேண்டிய தூரம் 900 கிமீ.
தாமதித்தால்
நெருக்கடிகள் பெருகும்.
விரைவாய்
நடக்க ஆரம்பித்தார்கள்.

போகும் வழியில்
சீக்கிய குடும்பம்
இளைப்பாற
உதவி செய்தது.

மீண்டும் நடந்தார்கள்.
230 கிமீ கடந்ததும்
மத்தியபிரதேச எல்லையை தொட்டார்கள்.

போலீசு அதிகாரி கவிதாவும், குழுவினரும் மறித்தனர்.
அவர்களின் பரிதாபநிலை கண்டு உணவளித்தனர்.
மீதி இருக்கும் தூரத்தை கடக்க
பேருந்து ஏற்பாடு செய்தனர்.

Source : Times of India

https://timesofindia.indiatimes.com/city/indore/madhya-pradesh-woman-gives-birth-on-roadside-and-marches-on-for-160km/articleshow/75654249.cms?fbclid=IwAR1SrPOJss4qptaVeGzLV7cjwyp8VrVKuSa-YSdoYfXkAdV_VgMciKZuFEM&from=mdr

#லாக்டவுன் கதைகள் - 1

ராம்கிர்பால்.
புலம்பெயர் தொழிலாளி.
65 வயது.
நடந்தார்.
நடந்தார்.
இரக்கம் காட்டும் வண்டியில்
சிறிது தூரம்
சுருண்டார்.
மீண்டும் நடந்தார்.
 

 மும்பை துவங்கி
உத்திரபிரதேச கலிலாபாத் வரை
1600 கி.மீ தூரம் கடந்தார்.

பிறந்த மண்ணை அடைந்ததும்... விழுந்துவிட்டார்.

சோதித்த பொழுது..
செத்துவிட்டார்.

May 13, 2020

The silence of the Lambs – (1991) Pshychological Horror

கதை. ஒரு Buffalo Bill என்ற சீரியல் கில்லர் இளம்பெண்களை கடத்தி, கொடூரமாக கொன்றுவருகிறான். நாயகி FBIயில் பயிற்சி (Trainee) பெறும் ஒரு இளம் பெண் அதிகாரி. தான் பயிற்சியின் ஒரு பகுதியாக, மனிதனை கொன்று மாமிசம் சாப்பிடதற்காக சிறையில் இருக்கும் மருத்துவரைச் சந்தித்து பேட்டி எடுக்க அனுப்புகிறார்கள். அந்த ஆள் அழுத்தமான ஆளாக இருக்கிறார். அவரை சம்மதிக்க வைக்க போராடுகிறார்.

இதற்கிடையில் ஒரு செனட்டரின் மகளை சீரியல் கில்லர் கடத்துகிறான். அதிகாரிகளுக்கு அழுத்தம் அதிகமாகிறது. எட்டு வருடமாக ஒரே அறையில் அடைந்து கிடக்கும் சைக்கோ மருத்துவருக்கு வேறொரு சிறையை மாற்றித்தருகிறேன். ”Buffalo Bill குறித்து துப்புகள் தா” என ஆசைக்காட்டுகிறாள். ”சொல்கிறேன். அதற்கு உன்னுடைய கடந்த கால கசப்பான அனுபவத்தை சொல்லவேண்டும்” என்கிறார். வேறுவழியில்லாமல் சொல்கிறாள். அவனும் கொலையாளியின் மனநிலை, இடம், அவன் கொன்ற முதல் ஆள் அவனுக்கு நெருக்கமான ஆளாகத்தான் இருக்கவேண்டும் என சில துப்புகள் தருகிறான்.

அதற்கு பிறகு சைக்கோ மருத்துவரும் கடுமையான பாதுகாப்பிலிருந்து தப்பித்துவிடுகிறார். அந்த சீரியல் கில்லரை பிடித்தார்களா? செனட்டரின் மகளை உயிரோடு கண்டுபிடித்தார்களா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

****
1991ல் வெளிவந்து, சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் ஐந்து பிரிவுகளில் ஆஸ்கார் வென்றிருக்கிறது. இந்த ஐந்து வகைகளிலும் வெல்வது அபூர்வம் என்கிறார்கள். படமும் தரமாகத்தான் இருக்கிறது.

இளம்பெண்களை கொன்று அவர்களின் தோலை உரித்து ஆடைகள் தைத்து போட்டுக்கொள்கிறவன், மனிதனைக் கொன்று சாப்பிடுகிற மருத்துவர் – இதைக் கேட்கும் பொழுதே டெரராக இருக்கிறது. அவர்களை திரையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ப்படங்களில் ஏன் இப்படி ஆனார்கள் என கொஞ்சம் விளக்குவார்கள் அல்லது விளக்குவதற்கு முற்படுவார்கள். ஆங்கிலப்படங்களில் அப்படியே விட்டுவிட்டு நகர்ந்துகொல்கிறார்கள். அதை ஆய்வு செய்யப்படும் பொழுது தான் எங்கிருந்து இந்த கோளாறுகள் ஆரம்பிக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். மாற்றிக்கொள்ளவும் முடியும்.

எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த நாயகியும், மருத்துவரும் அருமையாக செய்திருக்கிறார்கள். அதனால் தான் இருவருக்குமே ஆஸ்கார் கிடைத்திருக்கிறது.

இடையில் கொஞ்சம் காட்சிகள் கோரமாக இருப்பதால் குழந்தைகளோடு பார்க்க வாய்ப்பில்லை. பார்க்க வேண்டிய படம் தான். பாருங்கள்.

May 8, 2020

ரொட்டித்துண்டுகள்

பல மைல்கள் ஊர்ந்து
களைப்பாக தூங்கியவர்களை
ரயில் கொன்றுவிட்டது என்கிறார்கள்.

"வீட்டுக்குள்ளேயே இரு!
ஏதும் தரமாட்டேன்!"
என பேரரசர் ஒருமுறை கொன்றார்.

கோதுமையும்,
கிழங்கும் தராமல்
அரசர் ஒருமுறை கொன்றார்.

ரயிலில் செல்ல
நிறைய காசு கேட்டார்கள்!
சாலையில் சென்றால்
போலீசு உதைத்தார்கள்!
முகாம்களில் வதைத்தார்கள்!

கஞ்சியோ, சாவோ
சொந்த ஊரில் என
தண்டவாளங்களில்
மெல்ல நகர்ந்தார்கள்!

எல்லா பழிகளையும்
சரக்கு ரயில்
அள்ளிக்கொண்டு போய்விட்டது!

பின்னால் வருகிற
தங்கள் சகோதரர்களுக்காக
எறிந்த ரொட்டித்துண்டுகள் அவை!
பத்திரப்படுத்துங்கள்!

பேரரசருக்கும், அரசரருக்கும்
நிறைய முக்கியவேலைகள் இருக்கின்றன.
நாம் நமது ரொட்டித்துண்டுகளில்
கவனம் கொள்வோம்!

மாஸ்க்



கொரானா காலம் மக்களுக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவுகளை நீட்டித்துக்கொண்டே செல்கிறார்கள். அரசு செய்த தவறுகளால், இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்பொழுது டாஸ்மாக்கை சின்சியராக திறந்துவிட போகிறார்கள். வெளியே செல்லும் பொழுது பார்க்கிறேன். இப்பொழுது வரைக்கும் கூட சிலர் மாஸ்க் அணியாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் குறைந்தபட்சம் மாஸ்க் அணியவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை அல்லது வாங்குவதற்கு காசு இல்லை எனலாம். மாஸ்க் எவ்வளவு அவசியம் என்பதற்கு உதாரணம்.

மலையாளத்தில் ”வைரஸ்” படத்தில், நிப்பா வைரஸை எதிர்கொண்ட கதையை எடுத்திருப்பார்கள்.

அந்த படத்தில், மருத்துவமனையின் ஒரு குறிப்பிட்ட நோயாளியிடமிருந்து தான், அங்கிருந்த சிலருக்கு பரவியிருப்பதாக பின்னாடி கண்டுபிடிப்பார்கள். அந்த நோயாளி படுக்கையருகே ஐம்பது வயதளவில் அம்மாவும் இருந்திருப்பார். மற்றவர்களுக்கெல்லாம் வைரஸ் தொத்தியிருக்கும். அந்த அம்மா மட்டும் தப்பியிருப்பார்.

எப்படி அந்தம்மாவுக்கு மட்டும் வைரஸ் தொற்று இல்லை என மருத்துவக்குழு விவாதிக்கும் பொழுது பொழுது, அரசு மருத்துவமனையில் ஒரு நெடி இருக்கும் அல்லவா! அதிலிருந்து தப்பிக்க, தன் சேலையின் முந்தானையின் ஒரு பகுதியை வைத்து மருத்துவமனையில் இருக்கும் வரைக்கும் வாயை மூடிக்கொண்டே இருப்பார். அதனால் தான் தப்பித்திருப்பார்.
படத்தில் அதை சீரியசாக போகிற போக்கில் சொல்லியிருப்பார்கள். அரசு மருத்துவமனையின் நிலையை சத்தமேயில்லாமல் கிண்டல் செய்கிற காட்சி அது!

மற்றபடி, மாஸ்க்கின் அவசியத்தை உணர்வோம். மாஸ்க் அணிவோம்.

Birbal Trilogy Case No. 1 - (2019) – kannada


கதை. பெங்களுருவில் ஒரு பிரதான சாலையில், நடுஇரவில் ஒரு டாக்ஸி ஓட்டுநரை போட்டுத்தள்ளுகிறார்கள். பாரில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர், வீட்டுக்கு போகும் பொழுது, கொலை செய்யப்பட்டதை பார்க்கிறார். உடனடியாக போலீசுக்கு தகவல் தருகிறார். அந்த கொலையில் போலீசும் உடைந்தையாக இருக்கிறது. ஆகையால், தகவல் கொடுத்தவனையே கொலையாளியாக மாற்றிவிடுகிறார்கள்.

நாயகன் ஒரு வழக்கறிஞர். ஒரு பிரபல வழக்கறிஞர் நிறுவனத்தில் சேர்கிறான். அந்த இளைஞன் 8 வருடங்கள் உள்ளே இருந்து விட்டு, இப்பொழுது பரோலில் வெளியே இருக்கிறான். அந்த வழக்கு நாயகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவன் ஆராய துவங்குகிறான்.

அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற விசாரணையில் மெல்ல மெல்ல முன்னேற போலீசே தடை போடுகிறார்கள். இறுதியில் கொலையாளி யார் என கண்டுபிடித்தார்களா என்பது முழு நீளக்கதை!

****

கன்னட உலகில் இருந்து இன்னொரு திரில்லர். வழக்கு விசாரணைகள் சுவாரசியமாக இருக்கின்றன. இருள் உலகில் நடக்கும் சட்ட விரோத விசயங்களில், போலீசின் கூட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்திலும் நன்றாக காண்பித்திருக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் கொஞ்சம் செயற்கைத்தனமாக இருக்கிறது.

 இப்பொழுதெல்லாம் திரில்லர் படங்களில் சண்டைகள், பாடல்களை தவிர்க்கிறார்கள். நல்ல விசயம். இந்த படத்தில் ஒரு காதல் பாடலையும் கலகலப்புக்காக விட்டிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநரே நாயகனாக நடித்திருக்கிறார். New Trail என்ற கொரிய படத்தின் தழுவல் என்கிறார்கள். இயக்குனரிடம் கேட்டால், தென்கொரியாவில் நடந்த வழக்கு விசயங்களை எடுத்துக்கொண்டு எடுத்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

 கொரானா காலத்தில் பார்க்கலாம்.

பணம் படைத்தவன் (1965)


கொரானா காலத்தில் ஒரு பழைய எம்ஜிஆர் படம் பார்க்கலாம் என யோசித்தேன். அன்பேவா, எங்க வீட்டுப்பிள்ளை பலமுறை முன்பே பார்த்திருந்ததால், இந்தப் படம் யூடியூப்பில் கண்ணில்பட்டது. பார்த்தேன்.
கதை. எம்ஜிஆர் தம்பி நாகேஷ், அப்பா பாலையா, அம்மாவுடன் கிராமத்தில் வசித்துவருகிறார். எம்ஜிஆர் மாநில அளவில் விளையாட்டு வீரர். தம்பியுடன் கல்கத்தாவிற்கு விளையாட செல்கிறார். சென்ற இடத்தில் அங்கு வசிக்கும் ஒரு செல்வந்தர், அவருடைய இரண்டு பெண்களும் (அக்கா – செளகார் ஜானகி) கொண்ட ஒரு தமிழ் குடும்பம் அறிமுகமாகிறது. விருந்துக்கு வீட்டுக்கு அழைக்கிறார்கள்.

அந்த செல்வந்தர் எம்ஜிஆருடைய தந்தைக்கு நண்பரும், ஒரே ஊர்காரராகவும் ஆகிவிடுகிறார். இரண்டு பசங்க. இரண்டு பெண்கள். கல்யாணம் செய்து வைக்கலாம் என பேசுகிறார்கள். இதில் செளகார் ஜானகி 'நவநாகரிக' மங்கையாக வருகிறார். எம்ஜிஆர் படித்தவராக இருந்தாலும், 'நவநாகரிகம்' செட்டாகவில்லை. இதற்கிடையில் செல்வந்தர் வீட்டில் வேலை செய்யும் கே.ஆர். விஜயாவை எம்ஜிஆர் காதலிக்கிறார்.

ஆனால் தம்பி நாகேசும், செளகார் ஜானகியின் தங்கையும் ஜோடி சின்சியராக காதலிக்கிறார்கள். செல்வந்தரின் இளைய மகளை மட்டும் பெண் எடுப்பதாக சொல்கிறார்கள். "கொடுத்தால், இரண்டு பெண்களையும் ஒரே வீட்டிற்கு அனுப்புவேன். இல்லையென்றால், வேண்டாம்" என கறாராக மறுத்துவிடுகிறார்.

நாகேசு நாள்முழுவதும் தண்ணியடித்து தேவதாஸ் போல சுற்றுகிறார். தம்பியின் நிலைமை பார்த்து அண்ணன் வருந்துகிறார்.
எம்ஜிஆர் என்ன முடிவெடுத்தார்? என்ன ஆனது என்பது மீதிக்கதை.

****
கதையில் ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி பிரச்சனை வருகிறது. பழைய தமிழ் படங்களில் சாதி பிரச்சனையை தொட தயங்குவார்கள். இதில் சாதிப் பிரச்சனையை எதிர்கொண்டிருப்பார்கள்.

நவநாகரீக பெண் எப்படி கிராமத்தில் வாழ ஒத்துக்கொண்டார் என்பது ஆச்சர்யம். கல்கத்தாவிலேயே செ. ஜானகி கதையை முடித்துவிடுவோம். அதனால் பிரச்சனையில்லை என கதை விவாதத்தில் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில் நடித்ததைப் பார்த்து தான் புதிய பறவையில் செ.ஜானகியை போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். 6 மாத இடைவெளியில் இரு படங்களும் வெளியாகியிருக்கிறது.

எம்ஜிஆருக்கு தம்பி நாகேஷ். நகைச்சுவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் போட்டிருப்பார்கள் போல!

ஏன் கல்கத்தா வரைக்கும் சென்றார்கள் என தெரியவில்லை. கதைக்கு சென்னையவே காண்பித்திருக்கலாம். புது இடங்கள் காண்பிக்கலாம் என்ற எண்ணத்தில் போயிருப்பார்கள் என நினைக்கிறேன்.

அந்த சின்ன ஊரில் எம்ஜிஆர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் வேலை செய்வார். பேண்ட், சட்டை கூட பிரச்சனையில்லை. அதில் டையெல்லாம் அணிந்திருப்பார். வித்தியாசமாக தெரியும்.

பிரபல இயக்குனர் ராமண்ணா இயக்கிய சில எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒன்று. விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் ஏழு பாடல்களுமே சிறப்பு. கருப்பு வெள்ளை திரைப்படம். பாருங்கள்.

Miracle in cell No:7 - south Korea (2013)

“மறந்திடாதே ye-Seung”
“எதை அப்பா?”
“இந்த சூரிய உதயத்தையும், உன் அப்பாவையும்!”

****

கதை. கார் பார்க்கிங்கில் வேலைசெய்யும், கொஞ்சம் மனநிலை குன்றிய (mentally impaired) நாயகன், தன் ஆறு வயது மகளுடன் தனது சின்னஞ்சிறு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அப்பாவும், பிள்ளையும் ஒரு கடையில் விற்கும் சிறப்பு ஸ்கூல் பேக்கை சம்பளம் வந்ததும் வாங்குவதென முடிவு செய்கிறார்கள். ஷோகேசில் இருக்கும் அதை தினமும் ஒருமுறையோ, இருமுறையோ தினமும் பார்த்துவருகிறார்கள். வழக்கம் போல அந்த கடையை கடக்கும் பொழுது, ஷோகேசில் இருந்த அந்த பேக்கை போலீசு அதிகாரி அதை தன் மகளுக்கு வாங்கித்தருகிறார். நாயகன் அதை கேட்க போக, போலீசு அதிகாரி அவரை அடித்துவிடுகிறார். பிறகு நாயகனும், பெண்ணும் வருத்தமாய் வீடு வந்து சேர்கிறார்கள்.

அடுத்து வந்த நாட்களில், வழியில் நாயகனைப் பார்த்த அந்த அதிகாரியின் பெண், ”ஒரு கடையில் அதே பேக்கை பார்த்ததாகவும், உங்கள் பெண்ணுக்கு வாங்கித்தாருங்கள்” எனச் சொல்லி, அழைத்து செல்கிறாள். உற்சாகமாய் போகும் வழியில் பனிக்காலம் என்பதால், பனியில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு இறக்கிறாள். இறந்தது தெரியாமல், முதலுதவி செய்ய முயல, இவர் தான் கொலை செய்துவிட்டார் என, கடையில் அடித்த அந்த பெண்ணின் தந்தை போலீசு அதிகாரி என்பதால், அடித்ததற்காக பிள்ளையை கொலை செய்துவிட்டார் என பழியை போட்டுவிடுகிறார்கள்.

அப்பா சிறையில். மகள் அனாதை ஆசிரமத்தில். ஒரு குழந்தையை கொன்றவர் என்பதால், சிறை வார்டனும், சக கைதிகளும் அவரை செமத்தியாய் அடிக்கிறார்கள். பிறகு, சிறையில் செல்வாக்கு உள்ள ஒரு தாதாவின் உயிரை காப்பாற்றுகிறார். ”உயிரையே காப்பத்திட்ட! என்ன வேணும்னு சொல்ல!” என கெத்தாய் கேட்க, தன் பிள்ளையை பார்க்கவேண்டும் என்கிறார். நிறைய ரிஸ்க் எடுத்து சிறைக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

பிறகு, அவருடைய வெள்ளந்தித்தனம் தெரிய வர, அவரை அந்த வழக்கிலிருந்து காப்பாற்ற அவரைச் சுற்றி உள்ள அத்தனைப் பேரும் போராடுகிறார்கள். அவர் விடுதலையாகி வெளியே வந்தாரா? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

*****
சமீபத்தில் நிறைய கண்கலங்க வைத்தப் படம். இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி, உலக அளவில் பலரையும் ஈர்த்திருக்கிறது. பிற மொழிகளிலும் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உலக அளவில் சிறைக்குள் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. சிறையில் இருந்து யாரேனும் தப்பிக்க முயற்சி செய்தால், அவர் எவ்வளவு பெரிய குற்றமழைத்தவர் என்றாலும், மற்றவர்கள் உதவி செய்யவேண்டும் என்பது தான். இந்த படத்தில் நாயகன் அப்பாவி, அவரை நம்பி ஒரு குட்டிப்பெண்ணும் இருப்பதால், அவரைச் சுற்றி உள்ள, சக கைதிகள், சிறை போலீசார் என அனைவருமே அதற்காக போராடுவது அருமை.

அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதை இந்த படத்திலும் அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள்.

”நல்லது நல்லதோடு சேரும். தீயது தீயதோடு சேரும்” என்பார்கள். நாயகனோடு ஒரு அறையில் குற்றப்பின்னணியில் இருந்தவர்களுடைய வாழ்க்கைப் பாதை பின்னாட்களில் மொத்தமாய் மாறிவிடும்.

சிறைக்குள் குழந்தையை கொண்டு செல்லமுடியுமா? என நமக்குள் எழும் கேள்வியை காட்சிகள் மூலம் நம்ப வைத்திருக்கிறார்கள். மொத்த படத்தையும் அழுகாச்சியாக கொண்டு செல்லாமல், முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதில் அப்பாவும், பொண்ணும் நிறைய காலம் மனதில் நிற்பார்கள்.

குடும்பத்தோடு பார்க்க கூடிய படம். தமிழில் இல்லை. அமேசான் பிரைமில் இருப்பதாக சொல்கிறார்கள். பாருங்கள்.

May 3, 2020

வாசிப்பு


The present – ஒரு நல்ல குறும்படம்

நம் அம்மாக்கள் எல்லாம்
எப்பொழுதும் நம் பிள்ளைகளை
நினைவில் தூக்கி சுமக்கிறார்கள்.
அந்த பரிசை வாங்கும் பொழுதும்,
தன் மகனின் நினைவு கூடுதலாக‌ வந்திருக்கவேண்டும்.
பாருங்கள்.
4 நிமிடங்கள்.

Mathu vadalara (2019) Telugu

கதை. மூன்று இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியிருக்கிறார்கள். அதில் இருவர் அமேசான், பிளிப்கார்ட் போல ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். வேலை செய்தும் பல்வேறு பிடித்தங்களுக்கு பிறகு கைக்கு வரும் சம்பளம் மிக குறைவாக வருகிறது. வீட்டு வாடகைக்கு போக மிஞ்சுவது சொற்பம். கடுப்பாகி ஊருக்கு கிளம்புகிறேன் என்கிறான்.

இன்னொருவன் அவனை இருக்க வைக்க தான் வேலையில் செய்யும் தில்லுமுல்லை சொல்கிறான். முதலில் ஏற்க மறுக்கும் அவன், பிறகு செய்ய துணிகிறான்.

அதை செய்யும் பொழுது, சொதப்பலாக... அடுத்து அடுத்து பல்வேறு சிக்கல்கள் என நீள்கிறது.

அதிலிருந்து மீண்டானா என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

படத்தில் சொல்லப்படுகிற ஒரு செய்தி, வறுமை தவறு இழைப்பதற்கு தூண்டுகிறதா? இந்த வாதம் அபத்தம் இல்லையா?

சமீபத்திய நீயா நானாவில்... ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர் வீட்டில் வேலை செய்பவர்கள் திருடுவார்கள் என்றார். "நாலு வீடுகளில் கடுமையாக பாத்திரம் தேய்த்து, நேர்மையாக வாழ்ந்து, தன் பிள்ளைகளை நன்றாக வளர்த்தவர்கள் இங்கு அதிகம். அவர்களைப் போய் இப்படி கொச்சையாக பேசிவிட்டீர்களே!" என கோபிநாத் சாடினார்.

இப்படித்தான் வாழவேண்டும் என்பது விழுமியம் அல்லது அறம். அதிலிருந்து தவறுகின்ற எந்த வர்க்கத்தை சார்ந்த மனிதனும் தவறு செய்ய துவங்கிவிடுகிறான்.

பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தவன் ஏன் மேலும் மேலும் திருடுகிறான்?

மற்றபடி, கதையை முடித்த விதம் ஆறுதல்.

பிரதான நடிகர்கள், தொழில்நுட்பம், இயக்கம் பலரும் புதுமுகங்கள் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. சிறப்பாக இருக்கிறது.

படம் முழுவதும் சின்னத் திரையில் வரும் தொடர் நாடகத்தை கிண்டல் செய்திருக்கிறார்கள். அருமை.

திரில்லர் ரசிகர்கள் பார்க்க கூடிய படம்.

Bad Genius (2017) – Thailand

கதை. தன் மகளை அழைத்துக்கொண்டு அந்த புதிய பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர்க்க அழைத்துவருகிறார். தன் மகள் கணக்கிலும், படிப்பிலும் கெட்டிக்காரி. இவ்வளவு பரிசுகள் வென்றிருக்கிறாள் என பரிசு கோப்பைகளையும் காண்பிக்கிறார். மகளுக்கோ அது காசு பிடுங்கும் பெரிய பள்ளி. அப்பாவை சிரமப்படுத்தவேண்டாம். பழைய பள்ளியிலேயே படிக்கிறேன் என்கிறாள். புதிய தலைமை ஆசிரியரோ ”இந்த பள்ளியிலேயே படி. ஸ்காலர்ஷிப் தருகிறேன். மேற்படிப்புக்கும் ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்”என்கிறார். அந்த பள்ளியில் சேர்கிறாள்.

நாயகியின் வகுப்புத் தோழி கணக்கில் கொஞ்சம் டல்லான மாணவி. நாயகியோடு நெருக்கம் ஆகிறாள். தான் நிறைய மார்க் வாங்கினால், பள்ளி சில சலுகைகளை தரும். ”உதவி செய்” என கெஞ்சுகிறாள். பியானோவில் விரலில் வாசிப்பார்கள் அல்லவா! விரல்களை ஒரு லயத்தில் வாசிப்பது போல, பிட் அடிக்க புதுவித உத்தியை கண்டுபிடித்து சொல்லித்தருகிறாள். தோழி கூடுதல் மார்க்கும் வாங்குகிறாள்.

அந்த தோழி பள்ளியில் படிக்கும் தன் நண்பனுக்கும் அந்த உத்தியை சொல்கிறாள். அவன் தனக்கும், தன் நண்பர்களுக்கும் சொல்லித்தந்தால், தலைக்கு இவ்வளவு தருகிறேன் என பேரம் பேசுகிறான். பள்ளி ஸ்காலர்ஷிப் தருவதாக பொய் சொல்லிவிட்டு, நாயகியின் அப்பாவிடம் கூடுதலாக பணத்தை கறந்துவிட்டது என உண்மையைச் சொல்லி பள்ளி மீது கடுப்பேத்துகிறான். அவளும் ஒத்துக்கொள்கிறாள். வகுப்பில் நாயகிக்கு இணையாக படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்த விசயம் தெரியவர, நிர்வாகத்திடம் போட்டுக்கொடுத்துவிடுகிறான். தலைமை ஆசிரியரோ, நாயகியின் அப்பாவை வரவழைத்து, மகளின் நடத்தையை கண்டித்து, இதற்கு தண்டனையாக மேற்படிப்புக்காக ஸ்காலர்ஷிப் கிடைக்காது எனவும் சொல்லிவிடுகிறார்.

இதுவரை சொன்னதெல்லாம் துவக்கம் தான். அந்த பணக்கார பையன் மிகவும் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் சேர்வதற்காக பல நாடுகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தானும் தனது நண்பர்களும் வெற்றிபெற உதவி செய்ய கோருகிறான். அவளும் ஒத்துக்கொள்கிறாள். அதற்காக என்னவெல்லாம் செய்தார்கள்? தேர்ச்சியடைந்தார்களா? மாட்டிக்கொண்டார்களா? என்பதை பரபரவென சொல்லியிருக்கிறார்கள்.

****

உலகம் முழுவதும் கல்விக்காகவும், அரசு பணிகளுக்காகவும் என நடக்கும் நுழைவுத்தேர்வுகளில் மோசடிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

2007ல் நமது TNPSC போல மத்திய பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காகவும், அரசுத்துறை பணிகளுக்காகவும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் நடந்த வியாபம் ஊழல் மிகவும் இழிபுகழ் பெற்றது. இந்த வழக்கில் மாநில கல்வி அமைச்சர் உட்பட 2100 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பெரிய தலைகள், சிறிய தலைகள் என 47 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கு வரைக்கும் வழக்கு தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன. இங்கும் TNPSC ஊழல்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

அதிகாரமும், வசதி படைத்தவர்களும் தங்கள் சொந்தங்களின் வளமான எதிர்காலத்திற்காக எவ்வளவு செலவழிக்கவும் தயாராக இருக்கிறார்கள். சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இப்படிப்பட்ட தேர்வுகள் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை தான்.

நேர்மையாக இருப்பவர்கள், வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்களே என எந்தவித சலனமும் இல்லாமல் படம் எளிதாக கடந்து செல்கிறது. படத்தில் நுழைவுத்தேர்வு தவறை மாணவர்கள் மட்டுமே ஈடுபடுவது மாதிரி இயக்குநர் காட்டுகிறார். இதற்காக கட்டுக்கட்டாக பணம் தருவது பெற்றோர்கள் தானே! இது மிகப்பெரிய ஊழலாக தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநர் அதை எல்லாம் கவனமாக தவிர்த்திருக்கிறார்.

உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டு இயக்குநர் பரபரப்பாகவும், ஒரு திரில்லர் பாணியிலும் படத்தை எடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த படத்தைப் பற்றி எழுதியவர்களும் பேசியவர்களும் கூட இந்த விசயத்தை பேசத்தவறுகிறார்கள். படத்தின் இறுதியில் நாயகிடம் ஏற்படும் மனமாற்றம் மட்டும் ஒரு பெரிய ஆறுதல். மங்காத்தா மாதிரி முடித்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.

நான் பார்த்த முதல் தாய்லாந்து படம் இது தான். இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்தும் தரமாக இருக்கின்றன.

பார்க்ககூடிய படம். பாருங்கள்.

கொரானா காலத்தில் என் பொண்ணு இலக்கியா வரைந்தது!


Kavaludaari (2019) கன்னடம்

கதை. நாயகன் போக்குவரத்து காவல்துறை அதிகாரி. புலனாய்வு துறைக்கு மாற்றலாகி நிறைய சாதிக்கனும்னு ஆசைப்படுகிறார். ஆனால், மாற்ற மறுக்கிறார்கள்.

அவர் வேலை செய்யும் பகுதியில், பாலம் வேலைக்கு தோண்டும் பொழுது, ஆண், பெண், குழந்தை என மூன்று பேருடைய எழும்புக் கூடுகள் கிடைக்கின்றன. அவையெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முந்தவையாக இருக்கின்றன. போலீஸ் இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். நாயகன் தன் வேலையினூடாகவே ஆராய்கிறார்.

ஒரு பத்திரிக்கையாளர், ஒரு ஓய்வுபெற்ற போலீஸ்காரர் என தொட்டு... தொட்டு... அது எதிர்பார்க்காத ஒரு இடத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

கன்னடத்தில் லூசியா, யூடர்ன்க்கு பிறகு நான் பார்த்த மூன்றாவது கன்னடப்படம். புதியவர்கள் புது ரத்தம் பாய்ச்சுகிறார்கள். வாழ்த்துவோம்.

படத்தில் பிரதானமாக வருகின்ற நாயகன், போலீசுகாரர், பத்திரிக்கையாளர் என மூவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். இயக்கமும், தொழில்நுட்ப விசயங்களும் சிறப்பு.

படத்தின் முடிவில்... போலீஸ் யூனிபார்ம்க்கு விரைப்பாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். நமக்கு தெரிந்த கதை எல்லாம், சொத்து உள்ளவர்கள் எல்லாம் தனக்கென ஒரு அமைப்பை (Govt) உருவாக்கி, அதை பாதுகாக்க போலீசை உருவாக்கினார்கள். அதனால் தான் வசதி உள்ளவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் போலீசு விசுவாசமாக இருக்கிறார்கள். உடைமை இல்லாத பெரும்பான்மை மக்கள் மீது வள்ளென விழுகிறார்கள். எங்கேயாவது ஒரு 'நல்ல' போலீசைக் காட்டி, 'சூப்பர்ல' என சொன்னால், கையெல்லாம் தட்ட முடியாது.

படத்தில் முக்கியமான பாத்திரம் கிருத்துவர். காலப்போக்கில் இந்துவாக மாறிக்கொண்டார் என்கிறார்கள். கர்னாடக அரசியல் நிலைமையை இயக்குநர் பயன்படுத்திகொள்கிறாரோ!

இப்பொழுது தமிழில் சிபியை வைத்து எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சிறப்பாக எடுப்பார்கள் என நம்புவோம்.

மற்றபடி, ஒரு நல்ல திரில்லர். பாருங்கள். .

Lonely Hearts (2006)

விவாகரத்து பெற்று, கணவனை இழந்து முரட்டு சொத்துக்களோடு வாழும் பெண்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தடயம் எதுவும் கிடைக்காததால், தற்கொலைகள் என்றே போலீசும் நினைக்கிறது. சற்றும் மனம் தளராத விக்கிரமனைப் போல, ஒரு விசாரணை அதிகாரி தொடர்ந்து துப்பறிகிறார்.

ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் இந்த தொடர் கொலைகளை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகார ஜோடியோ சிக்காமல் இடம்மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பிடித்தார்களா என்பதை வெண் திரையில் பாருங்கள்.
கதை 1940களில் நடக்கிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதை என்கிறார்கள். மனித மனங்களையும், உறவுகளையும் எவ்வளவு சிக்கலாக்கி வைத்திருக்கிறோம் என்பதை சொல்லி செல்கிறார்கள். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Zindagi Na Milegi Dobara (2011) இந்தி

“வாழ்க்கை என்பது
ஒரு பயணம் என்றால்
அதில் பயணம் ஒரு இளைப்பாறுதல்”

கதை. பள்ளிக்காலத்திலிருந்தே மூவரும் நண்பர்கள். மூவருக்கும் வேறு வேறு தொழில். வேறு வேறு நகரங்களில் வாழ்கிறார்கள். வேறு வேறு குணாதியசங்களுடன் இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்குள் ஸ்பெயினுக்கு பேச்சிலர் டிரிப் போகலாம் என நண்பர்களிடம் பேசுகிறான். லண்டனில் வாழும் நண்பன் வேலை நிமித்தம் மறுத்தாலும், பிறகு ஒப்புக்கொள்கிறான்.

ஸ்பெயினுக்கு போய் ஆழ்கடலுக்குள் மூழ்கிறார்கள். விமானத்திலிருந்து குதிக்கிறார்கள். தக்காளி திருவிழாவில் எறிந்து விளையாடுகிறார்கள். காளைகள் துரத்தும் விளையாட்டில் பங்கேற்கிறார்கள்.

இந்த பயணம், இந்த பயணத்தில் சந்தித்த மனிதர்கள், விவாதித்த விசயங்கள் மூவர் சிந்தனையிலும், வாழ்க்கையிலும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருகிறது என்பது தான் படம்.

****

வழக்கமான வெளிநாட்டு படமாக ஜாலியாக மட்டும் இல்லாமல், #இன்னொருமுறை வாழ்க்கை வாழ கிடைக்காது என்பதை பீல் குட் பீவி படமாகவும், உணர்வுபூர்வமாகவும் எடுத்திருக்கிறார்கள். சாலை வழி பயணம் என்பதால், பல இடங்கள் ரம்மியமாக இருக்கின்றன.

ஹிர்த்திக், அபய் தியோல், பர்கன் அக்தர், கத்ரீனா, கல்கி என எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

இந்தி சினிமாவின் பிரபலமான பாடலாசிரியர், கதாசிரியர் ஜாவேத் அக்தரின் தயாரிப்பில், மகன் பர்ஹான் அக்தர் நடித்து, வசனமும் எழுதி, மகள் ஜோயா அக்தர் இயக்கிய படம்.

நல்ல படம். பாருங்கள்.

Wailing (2016) தென்கொரியா



கதை. ஒரு அமைதியான மலைகிராமம். கிராமத்தில் ஒரு தொற்றுநோய் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக வதைப்பட்டு சாகிறார்கள். சாவதற்கு முன் உடனிருப்பவர்களை கடுமையாக காயப்படுத்தியும்விடுகிறார்கள். அவர்களும் அதைப்போலவே வதைப்படுகிறார்கள். மக்களுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது.

நாயகன் போலீசு அதிகாரி. பரபரப்பாக ஏதும் நிகழ்ந்திடாத ஒரு மலை கிராமத்தில் வாழும் ஒரு சராசரி போலீசை போலவே பலவீனங்களுடன் இருக்கிறார். அவருடைய 10 வயது பெண்ணுக்கும் அந்த நோய் பிடித்துவிடுகிறது. காப்பாற்றியாக வேண்டுமே என பதைபதைக்கிறார். இது தொடர்பாக விசாரிக்கும் பொழுது, ஊருக்கு புதிதாக வந்த நபர் தான் இதற்கெல்லாம் காரணம் என சந்தேகிக்கிறார். போலீசு என்பதால், மூன்று நாட்களில் ஊரை காலிசெய்துவிடு என மிரட்டிவிட்டு வருகிறார். இங்கு நடக்கும் மோசமான நிகழ்வுகளை நிறுத்துவதற்காக வந்த நபர் எனவும் சொல்கிறார்கள்.

நாயகன், தன் பெண்ணை பேய் பிடித்திருப்பதாக நம்பி, விரட்டுவதற்காக ஒருவரை அழைத்து வருகிறார். பேயை விரட்டினார்களா? அடுத்தடுத்து அமானுஷ்யமாய் சில சம்பவங்கள் நடக்கின்றன. இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தார்களா என்பது மீதிக்கதை.

****
கதை மெல்ல மெல்ல துவங்கி, இடைவேளை வரும் பொழுது சுறுசுறுப்பாகிவிடுகிறது. இறுதி காட்சிவரை யார் காரணம் என்பதை சொல்லாமலேயே நம்மை அங்கும் இங்குமாய் அலைக்கழித்து, கடைசி காட்சியில் சொல்கிறார்கள்.

வழக்கமான ஹாரர் படங்களின் வகை இல்லை இந்தப்படம். மண்ணின் மனத்தோடு இருக்கிறது. படத்தில் பேயோட்டும் காட்சி ஒன்று இருக்கிறது. செய்கின்ற சடங்குகளும், இசையும் நம்மையும் பயமுறுத்திவிடுகிறது.

நம்மூரில் சொல்லப்படுகிற பேய்க்கதைகளும், ஓட்டுகிற சடங்குகளுமே சுவாரசியமானவை தான். இந்தப் படம் மாதிரி தமிழிலும் யாராவது எடுத்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

"See my hands and my feet, that it is I myself. Touch me, and see. For a spirit does not have flesh and bones as you see that I have.”

- Luke 24:37-39

The Bourne Identity (2002)

கதை. துப்பாக்கியால் சுடப்பட்டு கடலில் விழுந்து கிடக்கிறார் நாயகன். ஒரு மீன்பிடி படகில் உள்ள மருத்துவரால் காப்பாற்றப்படுகிறார். அடிப்பட்டதில் அவருக்கு தான் யார் என்பது மறந்துபோய்விடுகிறது. தன் உடலில் இருந்த குறிப்பைக் கொண்டு வங்கிக்கு போகிறார். அங்கு லாக்கரில் நிறைய பணம், பல்வேறு பெயர்களில் பாஸ்போர்ட், துப்பாக்கி என இருக்கிறது.

நாயகனை கொலை செய்வதற்கு சிலர் துரத்துகிறார்கள். பொருளாதார சிக்கலில் இருக்கும் எதைச்சையாக சந்திக்கும் நாயகிக்கு ”பணம் தருகிறேன். காரில் பாரிசில் விட்டுவிடு!” என்கிறார். அழைத்து செல்கிறார். நாயகனை துரத்துகிற ஆட்கள் இப்பொழுது நாயகியையும் துரத்துகிறார்கள். நொந்து போகிறாள்.

கார் துரத்தல். கொலை முயற்சி என பரபரவென போகிறது. இறுதியில் தான் யார்? ஏன் கொலை செய்யத் துரத்துகிறார்கள்? என்பதை கண்டுப்பிடிப்பதே முழு நீளக்கதை.

*****
கதையைக் கேட்டால், 90களில் வந்து பெரும் வெற்றிப்பெற்ற கமலின் “வெற்றிவிழா” படம் நினைவுக்கு வருகிறதா? 80களில் வந்த நாவலை அடிப்படையாக கொண்டு தான் வெற்றிவிழாவும், மேலே சொன்ன படமும்! படம் துவக்கத்திலிருந்து இறுதிவரை பரபரப்பாக போகிறது.

நாயகன், நாயகியும் பாத்திரத்தில் பொருந்தி போகிறார்கள். இந்த பட வெற்றிக்குப்பிறகு அடுத்தடுத்து 2016 வரை ஐந்து பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. நான் ரெம்ப நாளாக பார்க்க நினைத்துக்கொண்டிருந்த படம். நேற்றுத்தான் நெட்பிளிக்சில் ஆங்கிலத்தில் பார்த்தேன். தமிழிலும் கிடைப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.

சண்டை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். பாருங்கள்.

Crash (2004)

கதையில் பிரதான கதாப்பாத்திரங்கள் 12. அரசுத் தரப்பு வழக்கறிஞர். அவருடைய துணைவியார் வேலை செய்யும் கருப்பின பெண் மீது காரணமே இல்லாத வெறுப்பை உமிழ்கிறார்.

ஒரு வெள்ளையின போலீசு அதிகாரி. தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. வேறு மருத்துவருக்கு மாற்றி எழுதித்தர சொல்லி, கருப்பினப்பெண் இன்சூரன்ஸ் அதிகாரியிடம் இனவெறுப்போடு நடந்துகொள்கிறான்.

கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி இயக்குநரும், அவருடைய துணைவியாரும் ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு வரும் பொழுது, மேலே சொன்ன அதே வெள்ளையின போலீசு அதிகாரி ஒருவனால் மோசமாக நடத்தப்படுகிறார்கள். அமைதியாக நடந்துகொண்டதால், கணவனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்கிறாள்.

இரண்டு கருப்பின இளைஞர்கள். கார் திருடர்கள். அதில் ஒருவன் வெள்ளை இனவெறியை கடுமையாக திட்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு காரை திருடிச் செல்லும் பொழுது, ஒரு சீனக்காரரை கடுமையாக காயப்படுத்திவிடுகிறார்கள்.

பெர்சிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடை நடத்துகிறார். பூட்டை சரிசெய்ய ஆளை வர சொல்கிறார். வந்த கொரியக்காரர் “அவர் பூட்டு நன்றாக இருக்கிறது. கதவை சரிசெய்யுங்கள்” என்கிறார். கடைக்காரர் கடுமையாக சண்டை போடுகிறார். அதற்கு பிறகு வந்த நாட்களில் கடை கொள்ளையடிக்கப்படுகிறது. கதவை சரிசெய்ய சொல்லியும் சரி செய்யாததால், அவருக்கு இன்சூரன்ஸ் மறுக்கப்படுகிறது. காரணமே இல்லாமல், பூட்டு சரி செய்தவரை கொலைவெறியோடு தேடிச்செல்கிறார்.

இன்னும் சொன்னால், நீளும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். அவர்களுக்குள் இன, உயர்வு தாழ்வு, அதிகார போட்டி என நடக்கும் முட்டல் மோதல்களும், அவர்கள் என்னவாக மாறுகிறார்கள் என்பதே முழு நீளக்கதை.

*****
படத்தைப் பார்க்கும் பொழுது, ”அமெரிக்கன் பியூட்டி” படம் நினைவுக்கு வந்தது. இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொண்டு அமெரிக்க ‘அழகை’ அருமையாக விளக்கியிருப்பார். இந்தப் படமும் அப்படியே. பல்வேறு இனமக்கள் வாழும் ’வல்லரசு’ அமெரிக்காவில் அவர்களிடம் உள்ள இனவெறி, அதிகாரப்போக்கு, பதட்டம், கோபம், என எல்லாவற்றையும் விளக்குகிறார். படம் பார்க்கும் பொழுது, கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் நம்மை கடுமையாக தாக்குவதை தவிர்க்கமுடியவில்லை. கொரானா காலத்தில் கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தால், இந்த படத்திற்குள் நுழைய வேண்டாம் என்றே சொல்கிறேன். படத்தின் இறுதியில் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களையும் பாசிட்டிவாக பதிவு செய்திருக்கிறார். உடைமை சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யாமல், சமூக பிரச்சனைகளை தீர்க்கமுடியாது என்பது தான் நிதர்சனம்.

சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த எடிட்டிங் என மூன்று பிரிவுகளில் ஆஸ்காரை வென்றிருக்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

உருகுதே மருகுதே!

வெயில் திரைப்படத்தில் இடம் பெற்ற உருகுதே மருகுதே பாடல் காலம் கடந்தும் காதலின் பேரானந்தத்தை, பெருவலியை காற்றில் கசிய விட்டபடியே இருக்கிறது. இந்த பாடல் ஒரு மோனமயக்கம். தீராத காதல் வெள்ளம் கொட்டும் பாடல்.

காதலின் துயரமும், அன்பும், காதலும், காமமும், கண்ணீரும் ஒருசேர கலந்த பாடல்.இது போன்ற பாடல் வகைகள் வெகு அரிது. இசைஞானி இளையராஜா அவர்களின் மெல்லிசைப்பாடல்கள் மனதை உருக்கியவண்ணம் இருக்கும். உதாரணமாக இதயத்தைத்திருடாதே திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ பாப்பா லாலி பாடலை கேட்கும் போதெல்லாம் என் உயிர் என்னை விட்டு ஒரு ஜஸ்கீரீமைப்போல உருகி சென்ற வண்ணம் இருக்கும். காதலின் துயரத்தை, பீறிடும் அழுகையை, ஆனந்தக்கண்ணீரை இசைமாலையாக்கியிருப்பார். தெலுங்கில் அந்த பாடலை எஸ்பிபி அவர்கள் இதயம் கரைய பாடியிருப்பார்.

அதே போன்று காலத்திற்கும் காதல் நறுமணம் வீசுகிற, இரு இதயம் இணைகிற போது அழுகை பீறிடுமே அப்படி ஒரு பாடலை நாம் உருவாக்கிவிடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

என் முதல் படமான ஆல்பம் திரைப்படத்தில் செல்லமாய் செல்லம் என்றாயடி என்ற பாடல் அப்படி ரசித்து ரசித்து உருவாக்கிய பாடல்.ஸ்ரேயா கோசல் அவர்கள் பாடிய முதல் தமிழ் பாடல்.அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவர் தவிர்க்க முடியாத பெண் பின்னணி பாடகராக மாறினார்.

வெயில் திரைப்படத்தில் இந்த பாடல் அப்படி தேகம் உருகுகிற, ஆன்மா உருகுகிற,காதல் கசிந்து உருகுகிற பாடலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.வெயில் திரைப்படத்தின் கதாபாத்திரமான தங்கம் காதலுக்காக எதையும் தருவாள், தன்னையும் தருவாள் அதையும் தாண்டி தன் உயிரையும் தருவாள்.முத்தங்களால் மூழ்குகிற காதல் அவர்களுடையது. இப்படி தான் முருகேசன் தங்கத்தின் காதலை வடிவமைத்திருந்தேன்.

வெயில் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவுடன் முதல் பாடல் வெயிலோடு விளையாடி பாடலை முதல் ஒரு வாரத்திற்குள் முடித்துவிட்டோம்.

இந்த காதல் பாடலை உருவாக்க அவருக்கு கதையை,அந்த கதாபாத்திரத்தின் தன்மையை, இளையராஜாவின் மெல்லிசைப்பாடல்களையும் நினைவுபடுத்தி அப்படி ஒரு பாடல் வேண்டும் டார்லிங் என்றேன். எங்கேயாவது ஒரு தனியான இடத்தில் கீபோர்டுடன் அமர்ந்து வேலை செய்தால் முடித்து விடலாம் என்று ஜீவி விரும்பினார்.அந்த நேரத்தில் ஜீவிக்கு தனியாக ஸ்டுடியோ இல்லை. ஆகவே எங்கள் கம்போசிங் அவர் வீட்டில் வைத்து நடக்கும் அல்லது வெயில் அலுவலகத்தில் நடக்கும். வெயிலோடு பாடல் கம்போசிங்கை வெயில் அலுவலகத்திலே முடித்து விட்டோம். ஆகவே இந்த பாடலிற்கு எங்கையாவது வெளிய போகலாம் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அந்த சமயத்தில் திரையுலகில் பாடல் கம்போசிங் செய்வதற்கு வெளிநாடு செல்வது வழக்கம். என் நண்பன் வரதனிடம் மகாபலிபுரம் கடற்கரையோர விடுதி எதாவது கிடைக்குமா என்று கேட்டேன். பட்ஜெட்டுல படம் எடுப்போம்ன்னு சொல்லி கமிட் ஆகியிருக்கோம். இதெல்லாம் கேட்டீன்னா நாளைக்கே இந்த புரொஜெக்ட் கான்சல் ஆகிடும் பாத்துக்கோ என்று மிரட்டினான்.

எஸ்.பிக்சர்ஸின் நிர்வாகத் தயாரிப்பாளர் சுந்தர்ராஜனிடம் யோசனை கேட்டோம். இயக்குநரின் கடற்கரையோர பங்களா உபயோகமற்று உள்ளது. அந்த பங்களாவை மறுசீரமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு அறைகள் மட்டுமே உபயோகத்திற்கு தகுந்தாற் போல் உள்ளது. மேடத்திடம் கேட்டு சொல்கிறேன் என்று சம்மதம் வாங்கி தந்தார். இரண்டு நாட்கள் கழித்து ஒரு நண்பகல் அங்கே சென்றோம்.

நான் தரைத்தளத்தில் உள்ள அறையில் என் உதவியாளர்களுடன் இருந்தேன். மேல்தளத்தில் உள்ள அறையில் ஜீவியும் அவரின் இஞ்சினீயர் ஜோ என்கிற ஜோஸனும் இருந்தனர். மாலையில் இருந்தே கம்போசிங் வேலைகளில் ஜீவி மூழ்கிவிட்டார். இரவு உணவு கூட வேண்டாமென்று மறுத்துவிட்டார். நள்ளிரவு தாண்டி ஜோ வந்து என்னை எழுப்பி ஜீவி அழைப்பதாக கூறினார். தூக்கக்கலக்கத்தில் அந்த அறைக்குள் நுழைந்தேன். கம்ப்யூட்டர் ஸ்கீரினின் மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவியிருந்தது. ஜீவி ஜன்னலோர திரைச்சீலைக்குள் நின்று கொண்டிருந்தார்.

ஜோ கீபோர்டு முன்னால் இருந்த ஹெட்போனை எனக்கு தந்தார். திரும்பி ஜீவியைப் பார்த்தேன். ஒருவித மனக்குழப்பத்துடன் என்னைப் பார்த்தார். ஹெட்போனை என் காதுகளில் பொருத்திக்கொண்டேன். ஜீவியின் குரலில் அந்த டியூன் ஒலித்தது. கீபோர்டின் தாளஒலியும் இணைந்து ஒலித்தது. பாடல் வரிகளை தவிர ஒரு பாடலின் மொத்த இசையையும் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது அந்த இசை. மீண்டும் மீண்டும் ஒரு பத்து முறை கேட்டிருப்பேன். மனம் மயங்கத் துவங்கியது. அந்த டியூனின் ஆழத்திற்குள் சென்றேன். ஜீவியின் ஆன்மாவின் குரல் எனக்கு கேட்டது. ஹெட்போனை கழட்டிவிட்டு எழுந்தேன்.

ஜோ “என்ன சார்” என்றார்.
ஜீவிக்கு குரலே இல்லை.
”மிக பிரமாதமாக இருக்கு டார்லிங் பெரிய ஹிட்டாகும்” என்றேன்.
”அப்படியா சார் அப்படியா” என்றார்.
ஜீவியின் கைகளை இறுக பற்றிக்கொண்டேன். 17 வயது பையனின் கைகளுக்குள் இருந்து எப்படி இந்த அற்புதமான இசை பிறந்தது.

குறைவான இருளில் ஜீவியைப் பார்க்க எனக்கு ஒருவித பரவசமாக இருந்தது.
வாங்க ஜீவி சாப்பிடபோகலாமுன்னு பைக்கை எடுத்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பறந்தோம்.
மனசுக்குள் உருகுதே மருகுதே பாடலின் இசை என்னை உருக்கிக் கொண்டிருந்தது.
இன்று வரை அந்த மயக்கம் ரசிகர்களைப் போல எனக்கும் குன்றாத உணர்வாக உள்ளது.

இதை எழுதும் போது கூட எங்கோ ஒரு வானொலியில் உருகுதே பாடலின் இசை கேட்கிறது.

காதலுக்கு உருகாத இதயம் உண்டா….?

- இயக்குனர் வசந்தபாலன்

Memories of Murder (2003) தென்கொரியா

கதை. இளம்பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். எந்தவித சாட்சியம் இல்லாமல் போலீஸ் திணறுகிறது. தொடர்ச்சியாய் நடக்கும் கொலைகள் மக்களிடையே பீதியை உருவாக்குகிறது. மேலிருந்து வரும் அழுத்தத்தில், போலீசு அப்பாவிகளை வழக்கில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். இந்த வழக்கின் மீது ஆர்வம் கொண்டு, மாற்றல் கேட்டு வருகிறார் ஒரு விசாரணை அதிகாரி.

ஒரு பண்பலைக்கு ஒரு குறிப்பிட்ட பாடலை ஒருவர் விரும்பி கேட்கிறார். அந்த பாடல் ஒலிக்கும் பொழுது கொலைகள் நடக்கின்றன என கண்டுபிடிக்கிறார்கள்.

பல அலைக்கழிப்புகளுக்கு பிறகு, சீரியல் கொலைகாரனை கண்டுபிடித்தார்களா என்பது மீதிக்கதை.

*****

ரெம்ப நாளைக்கு முன்பே, தரவிறக்கம் செய்துவிட்டேன். சப் டைட்டில் தேடி நேற்று தான் பார்த்தேன்.

தென்கொரிய படங்களில் முக்கியமான படம் என்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது என்பது கூடுதல் சிறப்பு. பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.

எல்லா ஊரிலும், கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அப்பாவிகளை அடித்து உதைத்து, சொந்த கற்பனையில் திரைக்கதை எழுதுவது என (பல சமயங்களில் பல் இளித்திருக்கிறது) எல்லா ஊரிலும் போலீசின் இயல்பு ஒன்று தான் நிரூபிக்கிறார்கள்.

தப்பு செய்தவன் இவன் தான் என தெரிந்தும்.. உரிய சாட்சியங்கள் இல்லாமல் ஏதும் செய்ய முடியவில்லையே என அந்த விசாரணை அதிகாரி மனம் வெதும்புவதும்...! அருமை.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல்களை எசகுபிசகாக காட்டாமல், இயக்குநர் கண்ணியம் காத்திருக்கிறார்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - நாவல் - ஒரு அனுபவம்

நாவலைப் பற்றி மனுஷ்யபுத்திரன் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். பதிப்பாளரும் அவரே என்பதால் எளிதில் கடந்துபோய்விட்டேன். வேறு ஒருவரும் குறிப்பிட்டு சொன்ன பொழுது, அஞ்சலில் உடனே வாங்கிவிட்டேன்.
சமீப காலங்களில் இத்தனை விரைவாக ஒரு நாவலை வாசித்ததில்லை.
மகாசுவேதா தேவி எழுதிய '1084ன் அம்மா' என ஒரு நாவல். 70 களில் மே. வங்கத்தில் நக்சலைட்டுகளை நரவேட்டையாடியதில், 1084வது ஆளாக கொல்லப்பட்ட தன் மகனை பற்றிய தேடலே நாவல். அந்த பயணத்தில் தன் மகனைப் பற்றி புரிந்துகொள்வார்.

அது போல, மருத்துவம் படிக்கும் பிரபாகரன் எந்த குறிப்பும் எழுதாமல் தற்கொலை செய்துகொள்கிறான்.

பிரபாகரனின் 'நண்பர்' பிரபாரகரனைப் பற்றி தேடும் பயணமே நாவல். அந்த பயணம் மனித இயல்புகளை, சிக்கல்களை, மருத்துவ உலகின் பழுப்பு நிற பக்கங்களை சொல்லி செல்கிறது. அதை மருத்துவரே எழுதும் பொழுது, உண்மைகளை குளோசப்பில் அறிந்துகொள்கிறோம்.

ஏற்றத்தாழ்வான சமூகத்தில், பல்வேறு கோளாறுகளோடு இயங்கும் சமூகம் மருத்துவ உலகம் மட்டும் பரிசுத்தமாகவா இருந்துவிடும்.
சமத்துவத்திற்கான போராட்டத்தை சமூகத்தை நேசிக்கும் மருத்துவர்களே முன்னெடுக்க முடியும்.

நாவலில் பல அம்சங்களை விவாதிக்கலாம். நீண்டுவிடும் பயத்தில், முடித்துக்கொள்கிறேன்.

ஆசிரியருக்கு நன்றி. வாங்கி படியுங்கள் என நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

மதிலுகள் (1990) மலையாளம் - அடூர் கோபாலகிருஷ்ணன்

கதை. எழுத்தாளர் பஷீர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எழுதியதால் ராஜ துரோக குற்றச்சாட்டால் இரண்டரை ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்குள் வருகிறார். அங்கு அவரைப் போலவே பல கட்சித் தலைவர்களும் உள்ளே இருக்கிறார்கள். சிறை அதிகாரிகளின் உதவியால் தொடர்ந்து எழுதுகிறார்.

ஒரு கட்டத்தில் அரசியல் சிறைவாசிகளுக்கு விடுதலை என செய்தி வருகிறது. எல்லோரும் மகிழ்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பஷீரூக்கு மட்டும் விடுதலை இல்லை என்கிறார்கள். கடும் ஏமாற்றம் அடைகிறார்.

தனிமை வாட்டுகிறது. ஆண்கள் சிறைக்கு அருகே பெண்கள் சிறையும் இருக்கிறது. ஒரே ஒரு உயரமான சுவர் தான் பிரிக்கிறது. 22 வயது நாராயிணியின் நட்பு கிடைக்கிறது. உயர்ந்த சுவரை சாட்சியாக வைத்து இருவரும் பேசி பேசி காதல் வளர்க்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரும் சிறையில் உள்ள மருத்துவமனையில் சந்திக்கலாம் என முடிவு செய்கிறார்கள். இறுதியில் சந்தித்தார்களா என்பது மீதிக்கதை.

*****
அடூர் எடுத்த 9 படங்களில் இரண்டு படங்கள் தான் பிறருடைய கதைகளை இயக்கியிருக்கிறார். இந்த கதை எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருடையது.


1965ல் எழுதி புகழ்பெற்ற கதையை 1990ல் எடுத்திருக்கிறார். படம் பல விருதுகளை வென்றிருக்கிறது.

படத்தின் பின்னணி அரசியல் கதை போல தோற்றமளித்தாலும், அடிப்படையில் காதல் கதை தான்.

பஷீர் - நாராயணி இடையிலான உரையாடலில் நாராயணியை நாமும் காதலிக்க ஆரம்பித்து விடுகிறோம். நாராயணி குரலில்தான் அப்படி ஒரு காதல். கடைசி வரை நாராயணியை கண்ணில் காண்பிக்கவே இல்லை. அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அவரவர் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

ஆங்கில சப்-டைட்டிலுடன் வண்ணத்தில் தெளிவான பிரதி யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

அடூர் படங்கள்



அடூரின் ஒன்பது திரைப்படங்களில் இரண்டைத் (மதிலுகள், விதேயன்) தவிர பிற ஏழு திரைப்படங்களின் கதைக்கருக்களும் அடூருடையவையே.

சமூகச் சட்டங்களுக்கெதிராக வாழ முற்பட்டவர்களைச் சமூகம் எவ்வாறு குற்றவாளிகளாகப் பார்க்கிறது என்பதையும் எந்த ஒரு மனிதனும் சமூகத்தை விட்டு விலகி நின்று விட முடியாது என்பதையும் மையமாக வைத்து உருவானதே ‘சுயம்வரம்’ ஆகும்.

உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே ‘கொடியேற்றம்’ என்னும் திரைப்படம் ஆகும். பொறுப்பில்லாமல் நடந்த ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் போது அவனுக்குக் கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்களும், அவனிடம் ஏற்படும் மாற்றங்களுமே இதில் கூறப்பட்டுளன.

அடூரின் படங்களில் முதல் வண்ணப்படம் ‘எலிப்பத்தாயம்’ ஆகும். ஒரு தாயின் பிள்ளைகளான 3 சகோதரிகளையும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டதே இப்படம்.

வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் போது மதுக்கோப்பைக்குள் சுயப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியதே ‘முகாமுகம்’ ஆகும்.

மனப்பிறழ்வு கொண்ட மனிதன், தான் எப்படி இந்நிலைக்கு ஆளானேன் என்பதைப் பிறரிடம் கூறுவதற்கு முயற்சி செய்வதே ‘அனந்தரம்’ ஆகும்.

வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ என்ற நாவலே அடூரின் ‘மதிலுகள்’ என்ற திரைப்படம் ஆகும். சிறைச்சாலையின் சுதந்திரமின்மைக் கூட, ஆழமான அன்புடையவர்களுக்குச் சுகமான அனுபவங்களாக மாறும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

சக்கரியாவின் ‘பாஸ்கர பட்டேலரும் எனது வாழ்க்கையும்’ என்ற கதையே அடூரின் ‘விதேயன்’ என்ற திரைப்படம் ஆகும். அதிகாரத்தின் கட்டமைப்பினைப் பற்றியும், அடிமைத்தனத்தைப் பற்றியும் கூறுவதே ‘விதேயன்’ ஆகும்.

அடூரின் 46 ஆண்டுகால சொந்த அனுபவங்கள், பிறரது அனுபவங்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றில் தன்னைப் பாதித்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கிய திரைப்படமே ‘கதாபுருஷன்’ ஆகும்.

கொலை செய்வதற்கு விதிக்கப்பட்ட அதாவது ஒரு தூக்குமரத் தொழிலாளியின் கதையைக் கூறுவதே ‘நிழல்குத்து’ ஆகும்.
நவீன காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகக் கருதப்படும் திரைப்படத்தை உருவாக்கும் ஒரு கலைஞன் மனித மனங்களை வாசித்து அறிந்து கொள்ளும் திறன் பெற்றவராகவும், தன்னையும், சமூகத்தையும் பற்றிய நல்ல புரிதல் உள்ளவராகவும், யதார்த்ததை வெளிப்படுத்தும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இவரது திரைப்படங்கள் அனைத்துமே தனிமனிதன் மற்றும் சமூகத்தின் யதார்த்தங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

- ப. விமலா ராஜ்