> குருத்து: அன்பே வா! (1966)

March 17, 2020

அன்பே வா! (1966)

திரைக்கு பின்னால்

எம்.ஜி.ஆர் படங்களில் எனக்கு பிடித்தமான படங்களில் ஒரு படம்.  ஊட்டி, வால்பாறை, சில நாட்கள் சிம்லா என குளு குளு ஊர்களில் எடுக்கப்பட்ட படம்.

நடிகர் அசோகன் எம்ஜிஆர் ஏவிஎம்மில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான வேலைகளையும் செய்திருக்கிறார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த எம்ஜிஆரின் ஒரே படம். காரணம் கதைக்கேற்ற நாயகனை தேர்ந்தெடுப்பது அவர்களின் வழக்கம். அதனால் எம்ஜிஆர் பொருந்திவரவில்லை. கல்லாக்கட்டும் எம்ஜிஆர் புகழ் ஏவிஎம்மையும் இழுத்தது. அதன் விளைவே இந்த படம்.

கதை கேட்ட பிறகு, "அம்மா, தங்கை செண்டிமெண்ட் இல்லை. இது என்னுடைய பார்முலா படமில்லை. இது இயக்குநர் திரிலோகச்சந்தர் ஸ்டைல் படம். நான் நடிக்கிறேன்" என்றாராம்.

ஒருநாள் மாலை 6 மணிக்கு அவசர வேலை. முதலில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிடுங்கள் என சரோஜாதேவி கேட்க, இயக்குனர் ஏற்றுக்கொண்டு எடுத்திருக்கிறார்.
எம்ஜிஆர் வந்து நடிக்கும் நாளில், முதல் காட்சி தன்னைத்தான் முதலில் எடுக்கவேண்டும் என தன் செல்வாக்கால் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார். இந்த படத்தில் இப்படி எடுத்ததற்காக கோபித்துக்கொண்டாராம். இயக்குனர் இந்த பழக்கம் பற்றி தனக்கு தெரியாது என்றிருக்கிறார். சரோஜாவிற்கு தெரியுமே! அது சொல்லியிருக்க வேண்டுமல்லவா! என்றாராம். பிறகு ஏவிஎம்மின் முதல் படம் என்பதால் சமாதானமாயிருக்கிறார்.

பொதுவாக படங்களில் கதை, பாடல், எடுக்கப்படும் கேமரா கோணம் உட்பட சகலத்திலும் தலையிடும் பழக்கம் எம்ஜிஆருக்கு உண்டு. இந்த படத்தில் எந்த தலையீடும் செய்யவில்லை. காரணம் கேட்டதற்கு, விசயம் தெரிந்தவர்களிடம் நான் தலையிடுவதில்லை என்றாராம்.

பாடல் காட்சிகளை வெளிப்புற படப்பிடிப்பில் எடுப்பதை எம்ஜிஆர் விரும்புவதில்லை. காரணம் மக்கள் மத்தியில் நடன இயக்குனர் தனக்கு சொல்லித்தருவதை மக்கள் பார்க்க விரும்புவதில்லை.

'நான் பார்த்ததிலே' பாடலை மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் எடுக்கப்போகிறோம் என எம்ஜிஆரை ஏற்கவைத்திருக்கிறார்கள். இருப்பினும் உதவி நடன இயக்குனர் புலியூர் சரோஜாவை வரவழைத்து இரவே எல்லா நடன அசைவுகளை ஆடி கற்றுக்கொண்டிருக்கிறார்.

பாடல் எடுக்க துவங்கும் பொழுது மக்கள் இல்லை. பிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். "யாருய்யா சொன்னது மக்கள் வரமாட்டார்கள் என?" என கலாய்த்திருக்கிறார்.

1965 பொங்கலுக்கு "எங்கள் வீட்டுப் பிள்ளை" படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. அதனால் அடுத்த பொங்கலுக்கு அன்பே வா-வை வெளியிடவேண்டும் என ஏவிஎம் அடம்பிடித்திருக்கிறார்கள்.

ஆர்.எம். வீரப்பனின் சொந்த படமான நான் ஆணையிட்டால் படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்ததால், சாத்தியவில்லை என்றிருக்கிறார். மீண்டும் ஏவிஎம் அடம்பிடிக்கவே, வீரப்பனிடம் பேசி, படத்தை தள்ளி வைத்திருக்கிறார். எம்ஜிஆருக்கு அப்போதைய சம்பளம் 3 லட்சம். வீரப்பன் தன் படத்தை தள்ளி வைப்பதற்காக ரூ. 25000 கூடுதலாக கேட்டு வாங்கிகொண்டாராம்.

எம்ஜிஆரை அந்த பங்களாவில் இருந்து விரட்டுவதற்காக பாடும் பாடலான "நாடோடி" பாடலை எடுக்க எம்ஜிஆர் சம்மதிக்காமல் இழுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். படம் அந்த பாடல் இல்லாமல் தான் வெளியிட வேண்டியிருக்கும் என இயக்குநர் நொந்து ஒரு முடிவுக்கே வந்துவிட்டாராம். திடீரென ஒருநாள் எம்ஜிஆர் "வாங்க அந்த பாடலை எடுப்போம் என்றாராம்." எடுத்திருக்கிறார்கள்.

இந்த படம் நடிக்கும் பொழுது எம்ஜிஆருக்கு வயது 49. இந்தப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்றது.

0 பின்னூட்டங்கள்: