கதை. தன் காதல் மனைவி கேன்சரில் இறக்க, பரிசாக தந்த நாய்க்குட்டியுடன் நாயகன் அமைதியாக வாழ்ந்துவருகிறான். அவன் ஒரு திறமையான முன்னாள் மாபியா கொலையாளி (Boogeyman Or Hit Man Or Paid Killer Or Assassin).
ஒரு டானின் மகன் அவர் வைத்திருக்கும் காரை கேட்கிறான். நாயகன் மறுக்கிறான். வீடு புகுந்து நாயை கொன்று காரை எடுத்து சென்றுவிடுகிறான். நாயகன் கடும்கோபம் கொண்டு, என்ன செய்தான் என்பது முழுநீள அதகள கதை!
ஒரு இத்தாலிய டான் ஒருவனுக்கு நாயகன் ஒரு வாக்கு கொடுத்திருக்கிறான். இப்பொழுது வாரிசு அடிப்படையில் டானாக இருக்கும் அவன் தன் சகோதரியை போட்டுத்தள்ள சொல்கிறான். ஒதுங்கி வாழ விரும்புவதால், மறுக்கிறான். நாயகனின் பிடித்த வீட்டை தரைமட்டமாக்கிவிடுகிறான்.
கோபம் கன்னாபின்னாவென்று வந்தாலும், இருள் உலகத்தின் விதிகளின் படி, வாக்கு கொடுத்தால், நிறைவேற்றவேண்டும். வேறு வழியில்லாமல் வில்லனின் சகோதரியை கொல்கிறான். சகோதரியின் குழு கொலைவெறியுடன் துரத்த, கொன்றவுடன் போட்டுத்தள்ள வில்லன் அனுப்பிய குழுவும் கொல்ல நாயகனை துரத்துகிறார்கள். இரண்டு குழுக்களிலும் இருந்தும், தப்பித்தானா என்பது முழு நீளக்கதை!
****
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள ரகளையான சண்டைப்படம். ஒரு ஸ்டண்ட் இயக்குநரே படத்தையும் இயக்கியிருப்பதால், கையினால், கத்தியினால், துப்பாக்கியினால் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இரத்தத்தினால் வாக்கு தருவது, எல்லாவற்றையும் பதிவேடு வைத்து முறையாக பதிவு செய்வது, கொலையாளிகள் விதிகளை மீறும் பொழுது, போட்டுத்தள்ளுவது என்ற விசயங்கள் சுவாரசியம்.
நாயகன் Keanu Reevesயை Speed படத்தில் மக்களை காக்கும் போலீசாக பாந்தமாக பார்த்தது. நான் பார்க்காத இத்தனை வருடங்களில் அவரின் வாழ்க்கை திசை திரும்பி, இப்படி இருள் உலகத்தில் கொலைகாரனாக பார்த்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கதை. பழிவாங்கல் தான். வசனங்கள் கூட நாலு பக்கம் இருந்தாலே பெரிய விசயம் தான். தொடர்ந்து சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பதால் சில சமயங்களில் வீடியோ கேம் உணர்வே வந்துவிடுகிறது. இருப்பினும் சுவாரசியமாய் இருப்பது தான் படத்தின் பலம்.
சண்டை பிரியர்களை வெகுவாக ஈர்க்கும் படம். மூன்றாவது பாகமும் பார்த்துவிடவேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment