> குருத்து: Battleship Potemkin (1925)

March 17, 2020

Battleship Potemkin (1925)

1905. ரசியாவில் மக்கள் போராட்டங்கள் ஜார் மன்னனை கலங்கடித்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு போர்க்கப்பல் உக்ரைனை நோக்கி பயணிக்கிறது. கப்பல் ஊழியர்களுக்கு கெட்டுப்போன கறி தரப்படுகிறது. ”அருமையான கறியாச்சே!” என கப்பல் மருத்துவர் சான்றிதழ் தருகிறார். கெட்டுப்போனதை சாப்பிடமாட்டோம் என எதிர்க்கிறார்கள். கட்டுப்படாதவர்களை தண்டிக்கிறார்கள். எதிர்ப்பு போராட்டம் வலுக்கிறது. அதிகாரிகளை கடலுக்குள் எறிகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாலுமி கொல்லப்படுகிறார்.

அவருடைய உடலுடன் உக்ரைன் ஒடசா என்ற நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் சாரை சாரையாக அணிவகுத்து வருகிறார்கள். மக்களின் கோபம், கொஞ்சம் கொஞ்சமாக ஆவேசமாக மாறி, ஆள்பவர்களுக்கு எதிராக மாறுகிறது. அதிகாரத்தின் மாளிகையை நோக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட முழக்கங்கள் எழுப்பி முன்னேறுகிறார்கள். மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். மக்கள் செத்து விழுகிறார்கள்.

பொதம்கின் போர்க்கப்பல் போராட்டக்காரர்களின் கையில் இருப்பதால், மாளிகையை நோக்கி பீரங்கியால் சுடுகிறார்கள். மாளிகை தூள் தூளாக சிதறுகிறது. போர்க்கப்பல் அங்கிருந்து கிளம்புகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை!

***

உண்மை வரலாறு இது. ரசியாவில் ஜார் மன்னனின் பிற்போக்குத்தனமான ஆட்சியை மக்கள் வெறுத்தார்கள். 1905 காலக்கட்டத்தில் ரசியா போராட்டங்களால் சூழப்பட்டிருந்தது. மார்க்சிம் கார்க்கி எழுதிய உலகப்புகழ் பெற்ற நாவலான ”தாய்” 1905ல் வெளிவந்தது தான். அந்த நாவலைப் படித்தால் ரசியாவின் நிலையை புரிந்துகொள்ளமுடியும்.

போராட்டத்தில் உயிர்நீத்த போராட்டக்காரர்களின் உடல்கள் மக்களை எந்த அளவிற்கு எழுச்சியுற செய்யும் என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். ஆள்பவர்கள் வரலாற்றிலிருந்து இதை நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகையால் தான் பிரிட்டிஷ் அரசு பகத்சிங் மற்றும் தோழர்களை திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே தூக்கில் போட்டார்கள். உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல், நதிக்கரையில் திருட்டுத்தனமாக எரித்தார்கள். ஈழ ஆதரவு போராட்ட எழுச்சிக்கு முத்துக்குமார் தன் உடலை எரித்து, நம் கையில் தந்தான். பல்லாயிரக்கணக்காணோர் கலந்துகொண்ட எழுச்சி ஊர்வலத்தில் நானும் சென்றேன்.

ஆள்பவர்கள் செய்கிற எல்லா அயோக்கியத்தனங்களையும் பார்த்துக்கொண்டும், பொருமிக்கொண்டும் தான் மக்கள் இருக்கிறார்கள். சிறுதீ காட்டுத்தீயாய் பற்றி படர்வது போலவே ஏதாவொரு நிகழ்வு மொத்த மக்களையும் ஒன்று சேர்த்துவிடும். இந்த படத்தில் மாலுமியின் கொலை கூட ஒரு நல்ல உதாரணம். அப்படித்தான் மெரினா எழுச்சி நடைபெற்றது. மெரினா எழுச்சியை அடக்கிவிட்டார்கள். எப்பொழுதும் அடக்கிவிடமுடியாது. ஒருநாள் மக்கள் எழும் பொழுது சமூக அழுக்குகள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிடுவார்கள்.

****

பிபிசி உலகம் முழுவதும் கருத்து கணிப்பை நடத்தி 100 படங்களை பட்டியலிட்டது. அதில் இந்த படம் 24வது இடத்தை பிடித்திருக்கிறது. 1925 வருட படம் என்பதால் (Silent movie) வசனம் இல்லை. அதை நடிப்பும், இசையும் சரிசெய்துவிடுகிறது.

உண்மைக் கதை என்பதால், அது குறித்த வரலாற்று பதிவுகள் இருந்தால், இன்னும் நன்றாக புரிந்துகொள்ளமுடியும் என இணையத்தில் தேடினேன். தமிழில் பதிவுகளே இல்லை. ஆச்சரியமாய் இருந்தது. படம் பார்த்தவர்கள் கூடுதல் தகவல்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள்.

ஆங்கில சப்-டைட்டில்களுடன் படம் யூடியூப்பிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: