> குருத்து: எப்படி பெறுவேன்?

March 29, 2020

எப்படி பெறுவேன்?

இயக்குனர் மகேந்திரனின் 'நண்டு' திரைப்படத்தில் வரும் இந்தி பாடல்!

உத்தரபிரதேசத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய சுதந்திர சிந்தனையால் அப்பாவுடன் முரண்பட்டு சென்னையில் ஒண்டிக்குடித்தனத்தில் குடியேறுகிறார் நாயகன்.

வீட்டு உரிமையாளர் பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட வராண்டாவில் கூடுகிறார்கள். யார் மீது பூ விழுகிறதோ அவர்கள் பாடவேண்டும் என்பது விளையாட்டு. நாயகன் மீது பூ விழுகிறது. தமிழ் பாட்டு தெரியாது என்கிறார். தாய்மொழியில் பாடுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள்.

தன்னுடன் வேலை பார்க்கும் அங்கேயே குடியிருக்கும் சீதாவை பார்த்துக்கொண்டே இந்தியில் பாடத் துவங்குகிறார். நாமும் கரைய துவங்குகிறோம்.

"Kaise kahoon"

பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் பாடலை எழுத, இளையராஜாவின் இனிய இசையில்... கஜல் பாடகர் பூபேந்திர சிங்கும், ஜானகியும் இனிமையாகப் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலின் அர்த்தம் தேடி இணையத்தில் அலைந்து திரிந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. அர்த்தம் புரிந்தால் மட்டும் தான் கேட்கவேண்டுமா என்ன? மீண்டும் மீண்டும் பல இரவுகளில் இந்த பாடல் தாலாட்டி கொண்டு தான் இருக்கிறது.

இந்த பாடலைப் பற்றி ஒருவர் இப்படி சொல்லியிருந்தார்.

"நான் கேட்கும் ஒரே இந்திப்பாடல்".

நான் அதையே இப்படி சொல்கிறேன்.

"நான் அடிக்கடி கேட்கும் ஒரே இந்திப்பாடல்".


0 பின்னூட்டங்கள்: