> குருத்து: Annabelle comes home (2019)

March 29, 2020

Annabelle comes home (2019)



1970. பேய் ஓட்டும் வாரன் தம்பதிகள் ஆனபெல் பொம்மையை தூக்கி வந்து, பேய் தொடர்பான பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் தங்களுடைய வீட்டில் உள்ள அருட்காட்சியத்தில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கிறார்கள்.

வெளியூர் வேலை இருப்பதால், அவர்களின் பெண்ணான, சிறுமி ஜூடியை பார்த்துக்கொள்ள மேரி ஆலன் என்ற இளம்பெண்ணை நியமித்து விட்டு, ஊருக்கு கிளம்புகிறார்கள்.

மேரி ஆலனின் தோழி டேனியலா, சமீபத்தில் ஒரு விபத்தில் தன் தந்தையை இழந்தவள். தன்னால் தான் தன் அப்பா இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்வில் இருக்கிறாள். வாரன் தம்பதி வீட்டிற்குள் நுழைந்தால், தன் இறந்து போன அப்பாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என வீட்டிற்குள் நுழைகிறாள்.

அந்த அறைக்குள் நுழைந்து, ஆனபெல் மூடி வைத்திருக்கும் கண்ணாடியை திறந்துவிடுகிறாள்.

ஆனபெல் தானும் கலவரப்படுத்துகிறது. மற்ற ஆவிகளையும் தன் செல்வாக்கால் கிளப்பிவிடுகிறது.

மூவரும் வெரைட்டியான ஆவிகளிடமிருந்து தப்பித்தார்களா? என்பது நீளக்கதை!

****
கான்ஜூரிங் பட வரிசையில் இது ஏழாவது படம். ஆனபெல் பொம்மைக்கு மூன்றாவது படம். காலாண்டு விடுமுறையில் என் பொண்ணுக்கு முதலாவது படம். 🙂

கான்ஜூரிங் வரிசை படங்களை எல்லாம் பார்ப்பதில்லை. யாராவது நன்றாக இருக்கிறது என சொன்னால் மட்டுமே பார்ப்பதுண்டு.

முதல்பாதி விறுவிறுப்பு இல்லை. இரண்டாவது பாதி நன்றாக போகிறது. கோரமாய், திடீரென முன்வந்து நிற்பது போன்ற பயமுறுத்தும் காட்சிகள் இல்லை என்பது ஒரு ஆறுதல்!

குழந்தைகளை மனதில் கொண்டு எடுத்திருக்கிறார்கள் போல! கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

மேரி ஆலனை ஈர்ப்பதற்காக அந்த டீனேஜ் பையன் செய்யும் செயல்களும், பிறகு கோழி கூட்டிற்குள் ஒளிந்து இருப்பதும் காமெடி கலாட்டா தான்!

வாரன் தம்பதிகளுக்கு வேலையே இல்லை. துவக்கத்திலும், இறுதியிலும் மட்டும் வருகிறார்கள்.

பேய் என்பதே கற்பனை தான். அதில் கற்பனை குதிரையை தட்டி விட்டு எப்படி எல்லாம் எடுக்கலாம்? நாலு படம் எடுத்தால் ஒரு படம் தான் தேறுகிறது. இந்த படம் கொஞ்சம் கல்லா கட்டிவிட்டதால், அடுத்தும் வரும் என்றே நினைக்கிறேன்.

ஒரு முறை பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்: