- ஜி. ஆர். சுரேந்திரநாத்
I Keep a frozen drop of tear in my soul for Srividya, for ever.
-மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
அக்டோபர் 20, 2006. வெள்ளிக்கிழமை. திருவனந்தபுரம், கரமனா பிராமண சமாஜத்தின் தகன மேடையில், நடிகை ஶ்ரீவித்யாவின் உடலுக்கு அவருடைய சகோதரர் சங்கரராமன் எரியூட்டுவதற்கு முன்பு, கேரள அரசின் சார்பில் 21 குண்டுகள் முழங்க ஶ்ரீவித்யா கௌரவிக்கப்பட்டார். முன்னதாக அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களும், அப்போதைய கேரள எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி அவர்களும் ஶ்ரீவித்யாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். மலையாளிகள் ஒரு தமிழருக்கு செய்த மிகவும் அபூர்வமான மரியாதை அது.
நடிகை ஶ்ரீவித்யா சிறுமியாக சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து தண்ணீர்துறை மார்க்கெட்டுக்கு ரிக்ஷாவில் தனது தாத்தா அய்யாசாமி அய்யரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டே சென்றபோது நினைத்திருக்கமாட்டார்… தனது உடல் அரசு மரியாதையுடன் திருவனந்தபுரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று. தன் அம்மா கச்சேரிகளுக்குச் செல்லும்போது, பக்கத்து வீட்டிலிருந்த ‘திருவனந்தபுரம் சகோதரிகள்’(நடிகைகள் பத்மினி, ராகினி, லலிதா) வீட்டில் விட்டுவிட்டுச் செல்லும்போது ஶ்ரீவித்யா நினைத்திருக்கமாட்டார்… தனது இறுதிக்காலத்தை திருவனந்தபுரத்தில் கழிப்போம் என்று.
ஆனால் கலை மிகவும் தனித்துவமானது. அது யார் யாரையோ எங்கெங்கோ கொண்டு போய் சேர்த்து விடுகிறது. இங்கிலாந்தில் பிறந்த சார்லி சாப்ளினை ஸ்விட்சர்லாந்தில் இறக்க வைத்தது. லெபனானில் பிறந்த கவிஞர் கலீல் ஜிப்ரானை, நியூயார்க்கில் இறக்க வைத்தது. சென்னையில் பிறந்த ஶ்ரீவித்யாவை திருவனந்தபுரத்தில் இறக்க வைத்தது.
விழிகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தேவதை இருந்தால், அந்த தேவதை ஶ்ரீவித்யா போலத்தான் இருக்கும். கவிஞர் சுகுமாரன் ஶ்ரீவித்யாவின் விழிகளை, ‘சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்” என்று மகா அற்புதமாக வர்ணித்திருக்கிறார். அவ்வளவு அழகான விழிகளை ஶ்ரீவித்யாவிற்கு படைத்த கடவுள், ஏனோ தெரியவில்லை… சோகம்தான் அந்தக் கண்களை மேலும் அழகாக்கும் என்று நினைத்தார். . “அழாவிட்டால், விழிகள் அழகாக இருக்காது” என்று இத்தாலிய நடிகை சோஃபியா லாரென் சொன்னது ஶ்ரீவித்யாவிற்கு முற்றிலும் பொருந்தியது. தனது வாழ்நாள் முழுவதும் ஶ்ரீவித்யா தனது விழிகளில் சோகத்தை சுமந்தபடியே வாழ்ந்தார்
அந்த சோகத்துடனேதான் அந்த விழிகள் நம்மைப் பார்த்து சிரித்தது. கண்ணீர் விட்டது. வெட்கப்பட்டது, கோபப்பட்டது, ஆதங்கப்பட்டது. சிணுங்கியது. குமுறியது. கொந்தளித்தது. குதூகலித்தது. ஒரு கதாபாத்திரத்தின் அனைத்து மன உணர்வுகளையும், தன் ஒரு துளிப் பார்வையில் நமக்குக் கடத்திவிடும் அபூர்வ ஆற்றலுடனேயே கடைசி வரையிலும் அந்தக் விழிகள் இருந்தது.
புகழ்பெற்ற பாடகி எம்.எல். வசந்தகுமாரிக்கு மகளாக 1953ல் பிறந்த ஶ்ரீவித்யாவிற்கு முதலில் வைத்த பெயர் மீனாட்சி. பின்னர்தான் அது ஶ்ரீவித்யாவானது. 13 வயதில் நடிக்க ஆரம்பித்த ஶ்ரீவித்யா, தொடர்ந்து நாற்பதாண்டுகள், தான் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரையிலும் நடித்துக்கொண்டேயிருந்தார். ஶ்ரீவித்யா ஒரு தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் அவர் கதாநாயகியாக தமிழில் பெரிய தடங்களை பதிக்க இயலவில்லை. என் சிறுவயதில் ஶ்ரீவித்யா கதாநாயகியாக நடித்த ‘ரௌடி ராக்கம்மா’, ‘ஆறு புஷ்பங்கள்’ போன்ற படங்களைப் பார்த்தது மிகவும் கலங்கலாகத்தான் நினைவில் உள்ளது. அபூர்வ ராகங்கள் படத்தில், தனது 22 வயதில், 20 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கும் தில் அவருக்கு இருந்தது. ஆனால் ஒரு கதாநாயகியாக தமிழில் அவர் பெரிய அளவில் எடுபடாமல் போனதற்கு, இதுவே ஒரு காரணமாக இருக்குமோ என்று நான் பலமுறை யோசித்ததுண்டு.
ஶ்ரீவித்யாவின் கவிதை பேசும் கண்கள், தமிழில் கவிதைகள் பேசியிருக்கவேண்டும். ஆனால் அது மலையாளத்தில்தான் கவிதை பேசியது(ஶ்ரீவித்யா தமிழில் 93 படங்கள் மட்டுமே நடித்திருத்திருக்கிறார். மலையாளத்தில் 226 படங்களில் நடித்திருக்கிறார்).அவரின் கண்களில் தொடங்கி, உதட்டில் பயணித்து நமது இதயத்தில் இறங்கும் அந்த வெகு அழகிய புன்னகையை மிகவும் குறைவாகவே தமிழில் பார்க்கமுடிந்தது. குறைந்த காலத்திலேயே தமிழ் சினிமா அவரை நைஸாக அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க வைத்து… தடாலடியாக அம்மாவாக்கி, முப்பது ப்ளஸ் வயதுகளிலேயே ஒரு நிரந்தர அம்மா நடிகையாக்கிவிட்டது. ஆனால் ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அவர் மலையாளத்தில் அந்த வயதுக்குரிய நடுத்தர வயது மனைவி மற்றும் சிறு குழந்தைகளின் தாய் வேடத்தில் பல படங்களில் நடித்தார்.
என் பார்வையில், ஶ்ரீவித்யா மிகவும் அழகாக தோற்றமளித்தது இந்த முப்பது ப்ளஸ் வயதுகளில்தான். இந்த முப்பது ப்ளஸ் வயது பெண்களுக்கு ஒரு தனி அழகைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். இளமையின் ஆர்ப்பாட்டங்கள், ஏக்கங்கள், கனவுகள், கொண்டாட்டங்கள்… பரபரப்புகள்… எல்லாம் ஓய்ந்து தனது உண்மையான நிலையை உணந்த பிறகு வரும் அமைதியின் அழகு அது. இத்துடன் ஶ்ரீவித்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால் அவரது முகத்தில் உருவான சோகம் கலந்த அழகு, அவரது அழகை மற்ற அழகிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
எனது இளமைக் காலத்தில் தமிழில் அவர் அக்கா, அம்மா வேடங்களில்தான் நடித்துக்கொண்டிருந்தார். எனவே அவர் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் ஶ்ரீவித்யாவை நான் ரசிக்க ஆரம்பித்தது, 1984ல் வெளிவந்த ‘ரஸனா” என்ற மலையாளப்படத்தை பிற்காலத்தில் பார்த்த பிறகுதான். அத்திரைப்படம் என்னை ஶ்ரீவித்யாவிற்கு ரசிகனாக்கியது.
ரஸனா…. மலையாளத்தில் மட்டுமே சாத்தியமான மிகவும் துணிச்சலான முயற்சி. ரஸனா திரைப்படத்தில், எழுத்தாளர் பரத் கோபியின் மனைவி ஶ்ரீவித்யா ஒரு அரசு அலுவலகத்தில் சூப்பர்வைஸராக வேலை பார்ப்பார். அங்கு புதிதாக வேலைக்குச் சேரும் நெடுமுடி வேணு ஒரு கிராமத்து வெகுளி. அவனைப் பற்றி ஶ்ரீவித்யா தனது கணவனிடம் சொல்கிறார். பரத்கோபி, வேணு கேரக்டரை வைத்து கதை எழுதும் யோசனையில். “வேணு ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான கேரக்டர். நாளைலருந்து அவன்கிட்ட கொஞ்சம் நெருக்கமா, ஃப்ரண்ட்லியா பழகுற மாதிரி நடி. அவன் எப்படி ரீயாக்ட் செய்வான்னு பாக்கணும்…” என்கிறார் சிறிது தயக்கத்திற்கு பிறகு ஶ்ரீவித்யா நெடுமுடி வேணுவிடம் நெருங்கிப் பழகுவது போல் நடிக்கிறார். ஶ்ரீவித்யா மேல் காதலாகிறார் வேணு. வேணுவின் நண்பர் மம்முட்டி வேணுவின் ஆசையை மேலும் தூண்டிவிடுகிறார். ஶ்ரீவித்யா வேணுவுடன் ஹோட்டலுக்கு காபி அருந்தவும், சினிமா பார்க்கவும் செல்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு ஶ்ரீவித்யா வேணுவிடம், தனது கணவன் ஊரிலில்லை என்று கூறி அவனை உணவுண்ண வீட்டுக்கு அழைக்கிறார். அவனைப் படுக்கையறையில் அமரச் சொல்கிறார். வேணு ஶ்ரீவித்யாவை அணைக்கும் கனவுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு கணவனுடன் வரும் ஶ்ரீவித்யா தனது கணவனை அறிமுகப்படுத்துகிறார். அதிர்ச்சியடையும் வேணு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் இறங்கிச் செல்கிறார். ஶ்ரீவித்யா பரத்கோபியிடம் மிகவும் குற்ற உணர்வுடன் பேச… “வேணு ஒரு அற்புதமான கேரக்டர்” என்கிறார் பரத்கோபி. இன்னும் கொஞ்சம் அவனுடன் பழகுமாறு கூறுகிறார் .இதற்கு ஶ்ரீவித்யா மறுப்பு தெரிவிக்கிறார். வாழ்க்கையே வெறுத்துப்போன வேணு அலுவலகத்திற்கு வராமல் விரக்தியில் இருக்கிறார். பரத்கோபி, வேணுவை நேரில் சந்தித்து உண்மையைக் கூறுகிறார். அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்து ஶ்ரீவித்யாவை பார்க்கும் வேணு, ‘என் வாழ்வில் ஒரே பெண் நீங்கள் மட்டும்தான்” என்று கூறிவிட்டு வருகிறார். ஶ்ரீவித்யா வேதனையுடன் அழுகிறார். பின்னர் க்ளைமாக்ஸில் நெடுமுடி வேணு தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட… ஶ்ரீவித்யா மனநிலை சரியில்லாதவராகிறார்.
ஒரு ஆணின் மனதிற்குள் மிகவும் நுட்பமாக ஊடுருவி பயணம் செய்யும் இந்தக் கதையில், தனது அற்புதமான நடிப்பால் ஶ்ரீவித்யா அசத்தியிருப்பார். இந்தக் கதைக்கு நடுத்தர வயதில், மிகவும் அழகான தோற்றமுடைய ஒரு பெண் வேண்டும். அதே சமயத்தில் அந்த அழகு, ஒரு கிராமத்து வெகுளி நெருங்கவே பயப்படும் ஹைசொசைட்டி அழகாக இல்லாமல், எளிய அழகாக இருக்கவேண்டும். அதற்கு ஶ்ரீவித்யாவை விட்டால் வேறு யாரையும் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
இந்த திரைப்படத்தில், மற்றப் படங்களில் சாத்தியமில்லாத பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு… பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் விழா. படத்தின் பிற்பகுதியில் தனது கணவனிடம், ‘மனைவியை வைத்து தருமன் சூதாடியது போல், ஒரு கதாபாத்திரத்திற்காக நீங்கள் என்னைப் பணயம் வைத்து விளையாடிவிட்டீர்கள்” என்று ஆதங்கத்துடன் பேசும்போது ஶ்ரீவித்யாவின் கண்களில் தெரியும் சோகம்… ஒரு காவிய சோகம்.
இப்படத்தை பார்த்த பிறகு ஶ்ரீவித்யாவின் மலையாளப் படங்களை தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தேன். பரதனின் ‘காட்டெத்தே கிளி கூடு…’ படத்தில் பரத்கோபியின் மனைவியாக நன்கு நடித்திருப்பார். ‘பவித்ரம்’ திரைப்படத்தில் ஶ்ரீவித்யாவின் பெரிய மகனுக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும். இரண்டாவது மகனுக்கு திருமணம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், ஐம்பது வயதில் கர்ப்பமாகிவிடும் மனைவியாக ஶ்ரீவித்யா நடித்திருந்த விதத்திற்கு முன்மாதிரி இல்லை. ஆனால் ஶ்ரீவித்யா அதை மிகச் சிறப்பாக செய்திருப்பார். அதிலும் குறிப்பாக, தான் கர்ப்பமாக இருப்பதை மகன் அறிவதை உணரும்போது காண்பிக்கும் துக்கமும், வெட்கமும் கலந்த உணர்வுகளை அந்த மகத்தான விழிகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ‘தெய்வத்தின்ட விக்ருதிகள்” திரைப்படத்தில்,, ஆங்கிலோ இந்திய பெண்ணாக ஶ்ரீவித்யா நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் எட்டினார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தமிழ் சினிமா அவரை வெறும் அம்மாவாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாலும் ‘தளபதி’, ‘கற்பூர முல்லை’, ‘நீ பாதி நான் பாதி’ ஆகிய படங்களில் ஶ்ரீவித்யா தனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது.
இவ்வாறு திரைப்படங்களில் அவர் மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில், ஶ்ரீவித்யா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டிருந்தார். காதல் திருமணம், விவாகரத்து, விவாகரத்தான கணவனிடமிருந்து தான் உழைத்து சம்பாரித்த சொத்துகளை மீட்பதற்கான போராட்டம்… என்று அவரது வாழ்க்கையின் மிகவும் வேதனையான காலகட்டத்தில் இருந்தார். ஆனால் இந்த துயரங்களிலிருந்து கலையே அவரை மீட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் சொத்துகள் அவரது கணவர் கைக்கே செல்ல… ஶ்ரீவித்யா விரக்தி நிலைக்குச் சென்றார். இதே காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அவரை மெல்ல மறக்க ஆரம்பிக்க… தன்னைக் கொண்டாடிய கேரளாவின் திருவனந்தபுரத்திற்கே குடி பெயர்ந்தார். அங்கிருந்தே தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வந்த ஶ்ரீவித்யா, மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் வெற்றிகளை ஈட்டிய ஶ்ரீவித்யா உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக தனது சொத்துகளை மீண்டும் பெற்றார்.
ஆனால் விதிக்கு ஶ்ரீவித்யாவின் அழகிய விழிகளின் மீது ஒரு பொறாமை இருந்திருக்கவேண்டும். அவ்விழிகளில் சந்தோஷத்தின் ரேகைகள் படர்வதை அது விரும்பவில்லை. எனவே இம்முறை அவரை சோகத்தில் ஆழ்த்த விதி ‘புற்றுநோய்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஶ்ரீவித்யா தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார். தனது தொடர் துயரங்கள் குறித்து ஶ்ரீவித்யா, “நான் சந்தோஷப்பட எந்த நினைவுகளும் இருந்துவிடக்கூடாது என்று விதி தீர்மானித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
ஶ்ரீவித்யா போராடி, போராடி களைத்துப்போயிருக்கவேண்டும். 2006 ஆம் ஆண்டு, உடல்நிலை மோசமான ஶ்ரீவித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஶ்ரீவித்யா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரைக் கடைசியாக சந்தித்த மலையாளக் கவிஞரும், ஶ்ரீவித்யாவின் நெருங்கிய நண்பருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, “எங்கள் கடைசி சந்திப்பு கண்ணீரில் மிதந்தது. ஒரு நோயுற்ற ரோஜா போல் உருக்குலைந்திருந்த அவர் தனது அழகை நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தார். தனது வாழ்நாளில் நாம் மீண்டும் சந்திக்கக்கூடாது என்று கூறினார்” என்கிறார்.
ஒரு பெண் வயதாகி, அழகை இழப்பது வேறு. ஒரு நடிகை அழகை இழப்பது வேறு. ஒரு கவிஞன் தனது கவித்துவத்தை இழப்பது போல், ஒரு எழுத்தாளனோ, இயக்குனரோ தனது படைப்புத்திறனை இழப்பது போல் ஒரு ஓவியன் வயதாகி விரல் நடுங்கி வரைய முடியாமல் போவது போல், ஒரு நடிகை தனது அழகை இழக்கும்போது தங்கள் அழகை மட்டுமல்ல. தங்கள் கலையையும் இழக்கிறார்கள். ஒரு கலைஞன் தனது கலைத் திறனை இழக்கும் கணங்கள், வாழ்வின் மிகவும் வேதனையான கணங்கள். அது போல் நடிகைகள் என்பவர்கள், அவர்களுடைய அழகுக்காக வாழ்நாள் முழுவதும் ஆராதிக்கப்பட்டவர்கள். அந்த அழகின் பீடத்திலிருந்து இறங்கும்போது அவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருக்கவே விரும்புவார்கள். எனவே ஶ்ரீவித்யா தன்னை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை. மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான நடிகர் கணேஷ்குமாரும், அவரது தாயாரும் மட்டுமே ஶ்ரீவித்யாவின் அருகில் இருந்து அவரைக் கவனித்துக்கொண்டனர்.
ஶ்ரீவித்யா இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்ற கமல்ஹாசன் ஶ்ரீவித்யாவை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். அங்கு ஶ்ரீவித்யாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்த கமல், அவரை சிகிச்சைக்காக எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் ஶ்ரீவித்யா மறுத்துவிட்டார்.
ஶ்ரீவித்யாவின் இறுதி நாட்களில் அவரைச் சந்தித்த இன்னொரு நபர், மலையாள இயக்குனர் ஶ்ரீகுமாரன் தம்பி. ஶ்ரீவித்யா கடைசியாக நடித்துக்கொண்டிருந்த ‘அம்மா தம்புராட்டி” என்ற மெகா சீரியலின் இயக்குனரான குமாரன் தம்பி, “இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் ஶ்ரீவித்யா வாழ்க்கையை நேசித்தார். வாழவேண்டும் என்று விரும்பினார். ஶ்ரீவித்யாவின் மரணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு நான் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, அவருக்கு ரத்த மாற்று சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்திலும் அவர் வீட்டுக்குச் செல்வது குறித்தும், நல்ல உணவுகளை உண்பது குறித்தும் பேசினார். ஶ்ரீவித்யா தனது இறுதி நாட்களில், தனது நோய் குறித்து வெளியே கூறி அனுதாபம் ஈட்டவோ, விஐபிகளால் அல்லது ரசிகர்களால் மருத்துவமனை நிரம்பி வழியவேண்டும் என்றோ விரும்பவில்லை” என்று கூறினார்.
தனது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருந்த அந்த சோகத்தின் தேவதை, தனது ஐம்பத்து மூணாவது வயதில், 2006, அக்டோபர் 19 ஆம் தேதி இரவு திருவனந்தபுரம் ஶ்ரீஉத்தராட திருநாள் மருத்துவமனையில் தனது விழிகளின் உயிர்ப்பை, புன்னகையின் உயிர்ப்பை, அழகின் உயிர்ப்பை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது.
ஶ்ரீவித்யா இறந்த பிறகும் அவரைக் குறித்த சர்ச்சைகள் ஓயவில்லை. ஶ்ரீவித்யாவிற்கு சிகிச்சை அளித்த புற்றுநோய் மருத்துவர் திரு. எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் தனது சுய வரலாற்று நூலில், “அனைத்துப் பெண்களையும் போல, ஶ்ரீவித்யாவும் மருந்துகளின் பக்கவிளைவால், தனது தோற்றம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று மிகவும் அஞ்சினார். எனவே மருத்துவர்கள் குறைந்தளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் புதிய மருந்துகளை அளிக்க முடிவு செய்தனர். ஒரு இன்ஜெக்ஷன் ஒரு லட்ச ரூபாய் என்ற விபரத்தை மருத்துவர்கள் ஶ்ரீவித்யாவிடம் தெரிவித்தனர். அதற்கு ஶ்ரீவித்யா தனது அனைத்து சொத்துகளையும் தனது பெயரிலான அறக்கட்டளைக்கு மாற்றிவிட்டதாகவும், அந்த அறக்கட்டளையிடமிருந்து சிகிச்சைக்கான செலவைப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார். மருத்துவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை இதற்காகக் தொடர்புகொண்ட போது, அவ்வளவு விலை உயர்ந்த மருந்துகளுக்கான செலவை ஏற்கமுடியாது என்றும், வேறு சிகிச்சை அளிக்குமாறும் கூறினார்கள்” என்று கூறியது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அறக்கட்டளையின் தலைவரும், நடிகரும், முன்னாள் அமைச்சருமான கணேஷ்குமார் தரப்பினர், “இக்குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்” என்று கூறினர்.
இது மட்டுமின்றி, கணேஷ்குமாருக்கு எதிரான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில், காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்த ஶ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமன், “ஶ்ரீவித்யாவின் உயில் உண்மைதானா என்றே தனக்கு சந்தேகமிருப்பதாகவும், இன்று வரையிலும் கணேஷ்குமார், ஶ்ரீவித்யா தனது உயிலில் தெரிவித்த எக்காரியங்களையும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார். அதே போல் நடிகர் கமல்ஹாசனும் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், ஶ்ரீவித்யாவுடன் இறுதி நாட்களில் இருந்தவர்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில், அந்த துயரங்களின் தேவதை இறந்துவிட்ட பிறகு, இந்த சர்ச்சைகள் எல்லாம் அர்த்தமே இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஶ்ரீவித்யா இறந்தபோது எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் உயிரோடு இருந்தபோது ஒரு முறை நான் ஶ்ரீவித்யாவை நேரில் பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை, வாணி மஹாலில் நடைபெற்ற ஒரு ஆர்கெஸ்ட்ராவுக்கு எனக்கு பாஸ் கிடைத்தது. ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு நடுவே, திடீரென்று நடிகை ஶ்ரீவித்யா மேடையில் தோன்றினார். பச்சை நிற புட்டுப்புடவையில் அளவான மேக்கப்போடு வந்திருந்தார். மேடையில் சில நிமிடங்கள் பேசினார். சிறிது நேரத்தில் அவர் கிளம்ப… விழா ஏற்பாட்டாளர்கள் அவரோடு வெளியே சென்றனர். நானும் சென்றேன். நான் சென்றது ஶ்ரீவித்யாவைப் பார்க்க அல்ல. ‘ரஸனா…” சாரதாவை. ‘’காட்டெத்தே கிளிகூடு’ சாரதாவை(இரண்டு படங்களிலும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சாரதாதான்).
நான் வராண்டாவிற்கு வந்தபோது ஶ்ரீவித்யாவைச் சுற்றி நான்கைந்து பேர் பேசிக்கொண்டிருந்தனர். நான் இரண்டு தலைகளுக்கிடையே தெரிந்த ஶ்ரீவித்யாவைப் பார்த்தேன். பார்க்கும்போதெல்லாம் ஒரு சோகத்தின் ராகத்தை என்னுள் இசைக்கும் அழகிய விழிகளையும், புன்னகையையும் நேரில் கண்டேன். ஏதாவது பேசலாமா என்று நினைத்தேன். தயங்கிக்கொண்டே நின்றேன்.
கடைசியில் அவர் அனைவரிடமும் வணக்கம் கூறி விடைபெற்றபோது நான், “மேடம்… ரஸனா படத்துல நீங்க ரொம்ப அற்புதமாக நடிச்சிருந்தீங்க…”என்றவுடன், வாணி மஹால் வராண்டா விளக்கு வெளிச்சத்தில், பச்சை நிறப் பட்டுப்புடவையில் தனது அகன்ற விழிகள் விரிய, ஒரு பரிசுத்தமான புன்னகையுடன், “தேங்க்ஸ்…” என்ற ஶ்ரீவித்யா இப்போதும் என்னுடன் இருக்கிறார். ஏனெனில் ஶ்ரீவித்யாவின் அந்தப் புன்னகை… எனக்கான புன்னகை.
- ஜி.ஆர். சுரேந்திரநாத்
நன்றி : சொல்வனம்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment