> குருத்து: Into the wild (2007)

March 17, 2020

Into the wild (2007)

மகிழ்ச்சி என்பது பகிர்ந்து கொள்வது.

கதை. ஒரு அமெரிக்க இளைஞன். தன் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்கிறான். அவனுடைய நெடு நாளைய திட்டம். பனி படர்ந்திருக்கும் மலைகளும், விலங்குகளும் வாழும் அலாஸ்கா காட்டிற்குள் தன்னந்தனியாக சிலகாலம் வாழ்வது!

தன்னைப்பற்றிய எல்லா அடையாளங்களையும் அழிக்கிறான். தனக்கு புதிய பெயரையும் வைத்துக்கொள்கிறான். தன் சேமிப்பு பணம் 24000 டாலரை ஒரு ட்ரஸ்டுக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கிறான். கையில் இருந்த மீதி பணத்தையும் எரித்துவிட்டு பயணத்தை துவங்குகிறான்.

போகிற வழியில் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறான். அனுபவங்களை பெறுகிறான். தனக்கு தேவையான பொருட்களை சேகரிக்கிறான். அவர்கள் தங்களுடனே இருந்துவிடு என்கிறார்கள். அலாஸ்கா செல்வதில் உறுதியாக இருக்கிறான்.

அலாஸ்கா காட்டின் அருகே அவனை விடும் அந்த டாக்ஸி டிரைவர் "உயிரோடு திரும்பி வந்தால்... என்னை அழை!" என்கிறார்.

அந்த காட்டுக்குள் தன்னந்தனியனாய் உள்ளே நுழைகிறான். திரும்பி வந்தனா என்பது மிச்ச கதை.

***

இது ஒரு இளைஞனின் உண்மை கதை. பொருள், அந்தஸ்து, அதிகாரம் என்பவற்றை முற்றிலும் வெறுக்கிறான். இவை ஏதுமற்ற இயற்கையோடு இயைந்து வாழ்வது அவனுக்கு பெரும் விருப்பமாக இருக்கிறது.

கையிலிருந்த சேமிப்பை எல்லாம் நன்கொடையாக அனுப்புவது கூட சரி. கையில் இருக்கும் சில டாலர்களை எரிக்கும் பொழுது தான் பணத்தின் மீதான அவன் வெறுப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

காட்டிற்குள் தன்னந்தனியாய் வாழ ஆரம்பித்ததும், மனித சமூகம் குழு குழுவாக இருந்து இயற்கையை எதிர்கொண்டதை, அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எதிர்கொண்ட போராட்டத்தை அவன் தனியாளாக இருந்து எதிர்கொள்கிறான். இயற்கை எவ்வளவு பேரழகு கொண்டதோ, அதே போல கொடூரமாகவும் இருக்கிறது.

ஒரு கொழு, கொழு ஆட்டை (மாட்டை) சுட்டுக்கொன்று, அதை பதப்படுத்த செய்யும் எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகும்போது வெறுத்துப் போகிறான். தனக்கான உணவை தான் மட்டுமே உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றால், அவன் விளைவிக்கிற அரிசியை வாக்கரிசியாகத் தான் போட முடியும் என அப்துல் ரகுமான் எழுதியது நினைவுக்கு வருகிறது.

ஏற்றத்தாழ்வான சமூகமும் அது விளைவிக்கிற கொடூரங்களும் தான் அவனை காட்டுக்குள் விரட்டி இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வாழ்வு சாத்தியமாக இருந்திருந்தால் அவன் நிச்சயம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டான் என்றே தோன்றுகிறது.

இதை, அவன் தன் இறுதி நாட்களில் தன் நாட்குறிப்பில்... "Happiness is only real when shared" என எழுதும் பொழுது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

"மகிழ்ச்சி என்பது பகிர்ந்து கொள்வது"

0 பின்னூட்டங்கள்: