கதை. 1986. அர்ஜூன் அருமையாக கிரிக்கெட் விளையாடுகிறார். அதே போல காதலும் செய்கிறார். நெருக்கடியில் காதலியை கல்யாணம் செய்கிறார்.
கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் பணம், செல்வாக்கால் இவருக்கான வாய்ப்பு தள்ளிப்போகிறது. வெறுப்பிலும், குடும்பம் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலும் கிரிக்கெட்டை ஏறக்கட்டுகிறார்.
விளையாட்டிற்கான கோட்டாவில் வேலைக்கு செல்கிறார். அங்கும் ஒரு பிரச்சனை. தற்காலிக வேலையிழக்கிறார். தனது அன்பு குட்டி மகன் பிறந்த நாளுக்கு பரிசாக கேட்கும் ஜெர்சியை வாங்கித்தர பல்வேறு வகைகளில் முயல்கிறார். தோல்வியடைகிறார்.
10 வருடங்கள் கழித்து, 1996ல் மீண்டும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, விளையாட துவங்குகிறார். அவர் வென்றாரா என்பது மிச்சக் கதை.
***
தெலுங்கில் மசாலா படங்களுக்கு மத்தியில் அவ்வப்பொழுது இப்படியும் சில படங்கள் தப்பித்து வந்துவிடுவது ஆச்சர்யம்.
'வயது ஒரு தடையில்லை' என்பது படத்தில் சொல்லப்படுகிறது. நம் நாட்டில் வயது ஒரு பெரும் தடை தான். உரிய வயதில் படிக்கவேண்டும். உரிய வயதில் வேலைக்கு செல்லவேண்டும். இல்லையெனில்... அதை பெற (என் அனுபவத்தில்) மிகப்பெரிய போராட்டம் செய்யவேண்டியிருக்கும். இந்த படத்து நாயகன் போன்றவர்கள் விதிவிலக்கு தான்.
பொதுவாக மகள்கள் அப்பா செல்லங்களாகவும், மகன்கள் அம்மா செல்லங்களாகவும் இருப்பார்கள். சில குடும்பங்களில் இது உல்டாவாக இருக்கும். இந்த படத்தில் அப்பாவிற்கும், மகனுக்கான பிணைப்பு அருமையாக இருக்கிறது.
வேலை தற்காலிகமாக போய், வழக்கு நடக்கிறது. இரண்டு வருடங்கள் கடந்த பிறகும், ஏன் வேறு வேலைக்கு செல்லவில்லை? பணம் பிரச்சனை இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. 100 ரூக்கு கூட அத்தனை சிரமப்படுவார். இரண்டு வருடம் வேலை செய்யாமல் இருந்துவிட்டு, அந்த சூழல் உருவாக்கும் கசப்பில் எடுக்கும் ஒரு முடிவு எப்படி சரியாக இருக்கும்?
மற்றபடி, பார்க்க வேண்டிய படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment