> குருத்து: பேய்களும், முனிகளும்!

March 29, 2020

பேய்களும், முனிகளும்!

முன்குறிப்பு : இது கொஞ்சம் பழைய கதை. இப்போதும் ஊருக்கு போனால், இரண்டு பேய் கதைகள் சொல்கிறார்கள்.

முன்பெல்லாம் பேய் துரத்தும் பொழுது, ஓட முடியாமல்... பேய் நெருங்கி வரும் பொழுது, வேர்த்து விறுவிறுத்து முழிப்பு தட்டிவிடும். பிறகு உயிரோடு தான் இருக்கிறோம் என நிம்மதியாகி, தூங்கிவிடுவேன்.

பல ஆண்டுகளாக பேய் ஏதும் கனவில் வருவது இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பாக, ஒரு பேய் கனவில் வந்தது. திரில்லிங்காக இருந்தது.

எப்போதும் சமூக எதார்த்த கனவுகளே வந்தால் போரடிக்காது! 

உங்களுக்கு ஏதும் அனுபவம் உண்டா!
****

ஊரில் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ஊருக்கு போய், 4 நாட்கள் தங்கி, உடல் நலம் கொஞ்சம் தேறியதும் கிளம்பிவந்தேன்.

அதற்கு பிறகு, அண்ணன் தான் இருந்த வீட்டை காலி செய்துவிடலாம் என புதிய வீடு ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். இப்பொழுது தானே புதிய வீட்டிற்கு போனீர்கள்? இந்த வீட்டில் என்ன பிரச்சனை என்றேன். இந்த வீட்டில் ’பேய்’ இருக்கிறது என்றார்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்றதற்கு ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டு போனவர்கள் பக்கத்தில் சொல்லி சென்றிருக்கிறார்கள். நானும் ஜாதகம் பார்த்தேன் ”இந்த வீட்டில் இருக்கவேண்டாம் கிளம்பி விடுங்கள் என சொன்னார்கள்” என்றார். ’அந்த பேய்தான் அம்மாவை தாக்கிவிட்டது’ என்றார்.

அம்மாவிற்கு 25 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள் அம்மாவின் உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுவிட்டன. வயதும் 65ஐ தாண்டிவிட்டது. உடல் தரும் தொல்லையிலிருந்து விடுபட அம்மா இனி வாழும் காலம் வரைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என முடிவெடுத்துவிட்டார். அதனால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார். அதனால் தான் இவ்வளவு சிக்கல்! இப்படி விளக்கம் கொடுத்தாலும், பேய் கண்ணுக்கு முன்னாடி பயமுறுத்தியதே தவிர, அறிவுபூர்வமான விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை அண்ணனுக்கு!

இருக்கும் சொந்த வீட்டை விட்டு விட்டு, இப்படி வாடகை வீடுகள் தேடி அலைவதற்கும் பின்னாலும் ஒரு அமானுஷ்ய முன்கதை ஒன்று இருக்கிறது.

எங்க அம்மாவின் பெரியம்மா ஒருவர் 98 வயது வரை உயிரோடு இருந்தார். அம்மாவின் அம்மா அம்மாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், பெரியம்மா தான் அம்மாவிற்கு திருமணமே செய்து வைத்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எல்லோரும் ஆசி பெறும் பொழுது, எங்க அண்ணனும் போயிருக்கிறார். கிழவி ஆசி மட்டும் வழங்காமல், ”அம்மா குடியிருக்கும் அந்த வீட்டை இப்பொழுது எடுத்துக்கட்டாதே! உனக்கு தொல்லைகள் வரும். அம்மா இருக்கும் வரைக்கும் அந்த வீட்டில் இருக்கட்டும். அம்மாவின் காலத்திற்கு பிறகு, அந்த வீட்டை புதுப்பித்துக்கட்டி நீ குடிபோ!” என சொல்லியிருக்கிறார்.

நான் வீட்டை பழுது பார்க்கலாம், எடுத்துக்கட்டலாம் இந்த 6 மாதத்தில் இரண்டொரு முறை பேசும் பொழுதெல்லாம் அண்ணன் தட்டிக்கழித்தார். துருவி துருவி கேட்ட பொழுது, இந்த அமானுஷ்ய கதையை சொன்னார். தலையில் அடித்துக்கொண்டேன்.

இருக்கிற வீட்டை காலி செய்துவிடுகிறேன் என சொல்லி, புதிய வீடும் கிடைக்காமல் அண்ணன் ஏகமாய் மாட்டிக்கொண்டார். கடைசி நேரத்தில், ஒருவீடு பார்த்து குடியேறினார்.

கடந்த மாதம் அண்ணிக்கு திடீரென உடல்நலம் சரியில்லை. நடு மண்டையிலிருந்து நடு முதுகு வரை அப்படி ஒரு வலி. நான்கு நாட்களாக தூக்கமே இல்லாமல், ஒரே அழுகை. நகரின் முக்கிய சிறப்பு மருத்துவரை பார்த்து, பீஸ் எல்லாம் நிறைய கொடுத்து, ஸ்கேனெல்லாம் எடுத்து பார்த்ததில் ஒன்றுமேயில்லை என சொல்லிவிட்டார்கள்.

அதற்கு பிறகு அண்ணி அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அங்கேயே இருந்தார். சந்தேகம் வந்து, போனமுறை ஊருக்கு சென்ற பொழுது, இந்த வீட்டில் ஏதும் பிரச்சனை இல்லையே! என்றேன். இந்த வீட்டில் ‘முனி’ இருக்கிறது என்றார். எப்படி? என்றதற்கு, உங்க அண்ணிக்கு உடல் நலம் சரியில்லை என்றதும், மூன்று ஜாதக்காரர்களை பார்த்துவிட்டேன். மூவருமே முனி இருக்கிறது என்கிறார்கள். நான் ஜாதகம் பார்த்த மறுநாள் இந்த வீட்டின் உரிமையாளர் ‘இந்த வீட்டில் ஒரு தெய்வம் இருக்கிறது! செவ்வாய், வெள்ளியில் விளக்கு போடுங்கள்!” என சொல்லிவிட்டு சென்றார்.

இந்த வீட்டையும் காலி செய்ய போகிறீர்களா? என்றேன். மூன்று அறைகளில் பின்னாடி உள்ள அறையில் சமைக்கிறோம். அங்கு சமைக்கவேண்டாம். முன் அறையில் சமையுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். அதை செய்ய போகிறேன் என்றேன்.

இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டே தூங்கிப்போனேன். கனவில் முனியும், பேயும் கடுமையான சண்டை போட்டார்கள். யார் ஜெயிப்பார்கள் என வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த பொழுது, அலாரம் அடித்து பகீரென்று எழுந்தேன். கும்மிருட்டு. விடிகாலை 6.30க்கு வைகை என்பதால், 4.30 மணிக்கு எழ நான் தான் அலாரம் வைத்திருந்தேன்.

சமையல் கட்டு அறையில் தான் குளியலறையும் இருந்தது. குளிக்கும் பொழுது, முனி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக ஒரு பிரமை வந்தது. வெட்கம் வந்தது.

பேய்களுடனும் முனிகளின் நினைவுகளுடனும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: