> குருத்து: இது ஒரு உரையாடல்!

March 29, 2020

இது ஒரு உரையாடல்!

முகநூல் நண்பர் பழனிவேல் ஒரு பதிவிட்டிருந்தார். பதிவு குறித்து, இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த உரையாடலை இங்கு நண்பர்களுக்காக பதிகிறேன். இதில் என் வாதத்தில் ஏதாவது தவறு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! முகநூலில் விவாதங்கள் எல்லாம் இப்படித்தான் சிக்கலாகி போய்க்கொண்டிருக்கிறது. ஒரு விசயத்தை விவாதித்து ஒரு புரிதலுக்கு வர முடிவதில்லை. ஆகையால், விவாதங்களை தவிர்க்கவே நினைக்கிறேன். சில பதிவுகள் மண்டையை குடைந்துவிடுகிறது. என்ன செய்ய?


பழனிவேல் : நம் மக்களில் பெரும்பாலனவர்கள் இன்னும் பொது ஒழுங்கையே கற்காத நிலையில் இந்த வடமாநிலத்தவர்கள் வேறு இங்கு வந்து விலங்கினங்களைப் போல குவிந்து மந்தை மந்தையாக ஊர் முழுதும் சுற்றியலைந்து கொண்டிருக்கிறார்கள்.



நான் : விலங்கினங்கள்? அவர்கள் எல்லாம் இங்கு உழைத்து பிழைப்பவர்கள். தமிழர்களில் சிலர் திருட்டுத்தனமாய் செம்மரம் வெட்டுகிறார்கள். தமிழர்களில் சிலர் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்துகிறார்கள்.



பழனிவேல் : அவர்கள் ஒழுங்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றியே குறிப்பிட்டுள்ளேன் அவர்கள் மீது எனக்கு எப்போதும் கருணை உண்டு.



நான் : இந்த நாட்டில் அந்த மக்களுக்கு கல்வி கொடுக்க முடியாத அரசை நினைத்தால் தான் எனக்கு கோபம் வருகிறது. அந்த மக்கள் மீது வர்க்கப்பாசம் தான் எனக்கு வருகிறது. அவர்கள் குறைவான கூலிக்கு வேலைக்கு வாங்கப்படுவதைப் பார்க்கும் பொழுது கோபம் வருகிறது. நீங்கள் பெரியண்ணன் மனநிலையில் கருணை என்கிறீர்கள்.



பழனிவேல் : கருணை என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்னை பொறுத்தவரை கவலைப் படுகிறேன். அவர்களில் நிறைய பேர் கயவர்களும் உண்டு என்னுடன் வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் வேலை செய்திருக்கிறார்கள் நேபாள இளைஞன் ஒருவன் என்னுடன் நீண்ட கால நேரடி நட்பில் இருக்கிறான் அவர்களது வாழ்க்கை தரம் ஓரளவிற்கு தெரியும்



நான் : எவ்வளவு பேர் தமிழகத்தில் வட மாநிலத்தவர் இருக்கிறார்கள்? அதில் எத்தனை பேர்களுடன் பழகியிருக்கிறீர்கள்? நான் பல சிறு குறு தொழில் நிறுவனங்களில் பலரையும் பார்த்து பழகி கொண்டுதான் இருக்கிறேன். அவர்களில் ஒருவர் கூட கயவர் இல்லை. 6 மாதம், ஒரு வருடம் உழைக்கிறார்கள். சிறுக சிறுக சேர்த்த வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு தன் சொந்தங்களை பார்க்க செல்கிறார்கள். இதற்கு என்ன சொல்வீர்கள்?



பழனிவேல் : எனக்கு புள்ளி விவரக் கணக்குத் தெரியாது அவர்கள் நூறு சதவித பேரையும் புனிதப் படுத்தப் பார்க்கிறீர்கள் என்னோடு அச்ககத்தில் பலர் வேலை செய்திருக்கிறார்கள் அதில் சிலர் குற்றச் செயல் புரிந்திருக்கிறார்கள்.



நான் : நான் புனிதப்படுத்தவில்லை. "அவர்களில் நிறைய பேர் கயவர்களும் உண்டு" என நீங்கள் தான் சொல்கிறீர்கள். எல்லா இனத்திலும், சமூகத்திலுமே ஒரு குறிப்பிட்ட குற்றம் செய்கிற சதவிகிதம் உண்டு தான். அதனால் தான் செம்மரம், கஞ்சா என உதாரணங்கள் சொன்னேன். ஆனால் நீங்கள் தான் சிறிய ஒன்றை பெரிதாக்கி காட்டி, குற்ற கும்பல் போல சித்தரிக்க முயல்கிறீர்கள்.



பழனிவேல் : இங்கு அவர்கள் இருக்கும் அடர்த்தியை வைத்தே குறிப்பிட்டேன்
என்னுடைய பதிவின் திசையையே நீங்கள் மாற்றி தமிழனுடைய குற்றச் செயலோடு ஒப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் . நான் இருவருடைய பொது ஒழுங்கைப் பற்றித் தான் எழுதியுள்ளேன்.



நான் : பொது ஒழுங்கு என்பது தனிநபர்கள் சார்ந்ததா? சமூகம் சார்ந்ததா? அரசுக்கு இது தொடர்பு கிடையாதா? 'விலங்கினங்கள்' என்று சொன்னது தவறு என உங்களால் உணர முடியவில்லை. வார்த்தைகளில் விவாதித்து பிரயோஜனமில்லை.



பழனிவேல் : நான் ஒரு பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தேன் பாலத்திற்கு மேலே நடந்து போய்க் கொண்டிருந்த வடநாட்டு கும்பல் மேலிருந்து கீழே பாக்கு எச்சிலை துப்பினார்கள் என் உடல் முழுதும் பாக்கு எச்சில் அவர்களுக்கு எச்சில் துப்பும் அடிப்படை அறிவைக் கூட அரசுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். என் மீது எச்சில் துப்பியவனை எப்படி வேண்டுமானாலும் திட்டுவேன்.



நான் : ஏதோதோ பேச துவங்குகிறீர்கள். உங்களுக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை. ஒரு தொழிலாளியான நீங்களே சக தொழிலாளிகளை விலங்கினங்கள் என சொல்ல முடிகிறது என்றால், குட்டி முதலாளி வர்க்கத்தினர் என்ன யோசிப்பார்கள் என நினைத்தால் சிக்கலாக இருக்கிறது.


இனி உங்களுடன் விவாதிப்பதில் பிரயோஜனமில்லை.

நன்றி.

0 பின்னூட்டங்கள்: