ஐபோனை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் ”இது ஒரு #மந்திரப்_பொருள்” என்றார். ஆரம்பத்தில் சிக்மன்ட் பிராய்டு உட்பட சில அறிவாளிகள் கொக்கையினையும் ”மந்திரப் பொருள்” என்றே அழைத்திருக்கிறார்கள் என தொடங்குகிறார்.
செல்போனை பேசுவதற்கு பயன்படுத்துவதைவிட அலாரம் வைத்து எழ, நமது தினசரி திட்டங்களை குறித்து வைக்க, பிடித்த தொடர்கள் பார்க்க, மாதாந்திர பில்கள் செலுத்த, உணவுக்கு, பயணத்திற்கு ஏற்பாடு செய்ய, சமூகவலைத்தளங்களில் மணிக்கணக்கில் உலாவ, பாட்டு கேட்க என செல்போன் காலை முழுவதும் இரவு வரை நமது தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. செல்லில் பேட்டரி இல்லாமல் போய்விட்டால் ஒரு குடிகாரனைப் போல பதட்டம் அடைகிறோம்.
ஒரு பொருளை தேவைக்கு பயன்படுத்துவதற்கும் அந்த பொருளுக்கு அடிமையாவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார். அதற்கு பல உதாரணங்கள் தந்து நமக்கு புரிய வைக்கிறார்.
சமூக தொடர்புகளிலும் குடும்ப உறவுகளிலும் செல்போன் நம்மை தனிமைப்படுத்துகிறது என்கிறார். குழந்தைகள் இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் மீது புகார் தெரிவிக்கிறார்கள் என்கிறார். ஜெர்மனியில் குழந்தைகள் ஊர்வலமாய் சென்றது நினைவுக்கு வருகிறது.
குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிற நாம் செல்போனை யோசிக்காமல் கொடுத்துவிடுகிறோம் என்கிறார். இதனால் குழந்தைகளின் சரளமான பேச்சு பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைப் பாதிக்கிறது என எல்லா வகை ஆய்வுகளும் சொல்கின்றன என்கிறார்.
நம் மூளைக்குள் இருக்கும் ”இன்பத்திற்கான மையம்”-த்தை (Pleasure centre) போதைப் பொருட்கள் கடத்தி தன்வசமாக்கிவிடுகிறது. அதே வேலையை தான் டிஜிட்டல் சாதனங்களும் செய்கின்றன என்கிறார்.
இணையம் வழியாக உள்ளிழுத்து பல மணி நேரம் உலாவ விடுவதற்கு நிறைய சிந்தித்து உழைக்கிறார்கள். அதில் பல கோடிகளில் வணிகம் இருக்கிறது. விஷயம் தெரிந்த அறிவாளிகள் இதிலிருந்து தள்ளியே இருக்கிறார்கள். விவரம் அறியாத பலர் வலையில் சிக்கிக் கொள்கிறோம் என்கிறார்.
இதுநாள்வரையிலும் அறிவியல் வளர்ச்சி மனிதனுக்குள்ள பிணைப்பை அதிகப்படுத்த உதவியது. இணையமும் டிஜிட்டல் சாதனங்களும் சக மனிதனின் பிணைப்பில் இருந்து விடுவிக்க விரும்புகிறது என்கிறார்.
சில கேள்விகள் எழுப்பி அதற்கு நாம் நேர்மையாக பதில் அளித்தால் நாம் அடிமையாகி இருக்கிறோம் என பளிச்சென புரிகிறது. இல்லையென்றாலும் வெகு விரைவில் நம்மை அடிமைப்படுத்திவிடும் என்கிறார்.
செல்போனை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு தனிநபருக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும், அறிவாளிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்கிறார்.
சரியான நேரத்தில் சரியான புத்தகம். டிஜிட்டல் போதையிலிருந்து கொஞ்சம் தெளிய வைத்திருக்கிறது. ஆசிரியருக்கு நன்றி.
அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். டிஜிட்டல் உலகம் புதிய தலைமுறையின் படிக்கும் பழக்கத்தை காயடித்துக்கொண்டிருக்கிறது. முழுக்க எழுத்துக்களால் நிறைந்துள்ள இந்த கையடக்க சின்ன புத்தகம் எப்படி அவர்களுக்கு சென்று சேரும் என்பது கவலையாக இருக்கிறது.
பக்கங்கள் : 80
விலை : ரூ 70
உயிர்மை பதிப்பகம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment