கதை. தொழில்கல்வி படித்த மூன்று இளைஞர்கள். உள்ளூரிலேயே பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது. (பல காரணங்களினால், உள்ளூர் இளைஞர்களை தொழிற்சாலையில் பொதுவாக சேர்த்துக்கொள்வதில்லை!)
உலக அளவில் ஏற்றுமதி செய்து பரபரெவென இருந்த தொழிற்சாலை, பல நாடுகளில் தடை செய்யப்பட்டதால், இந்தியாவில் (!) மட்டும் விற்பனை செய்வதால், உற்பத்தி குறைகிறது.
தனது இலாப வெறியால் ஆபத்தை விளைவிக்கும் கெமிக்கல்ஸை பாதுகாப்பாக கையாள்வதற்கு கூட உரிய செலவுகளை (Maintenance) செய்ய மறுக்கிறார் முதலாளி. விளைவு – ஐந்து தொழிலாளர்கள் அநியாயமாக இறக்கிறார்கள்.
முதலாளி, ஆளும்கட்சி அரசியல்வாதி, அரசு அதிகாரிகள், சாதிக்கட்சி தலைவர் என எல்லோரும் கூட்டுச் சேர்ந்து எந்தவித மாற்றமும் செய்யாமல், செய்ததாக நம்ப வைத்து ஆலையை திறக்கிறார்கள். விளைவு – மிக கொடூரமானதாக இருக்கிறது. என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
பல ஆயிரம் பேரை கொன்று குவித்த யூனியன் கார்பைடு தொழிற்சாலை சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது படம். ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் நீதி கிடைக்காமல் போபால் மக்கள் நடைபிணமாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அது பல ஆண்டு போராட்டம்!
படம் பார்க்கும் பொழுது தூத்துக்குடி ஸ்டெர்லைட், சூழல் மாசு, அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், துப்பாக்கிச்சூடு படுகொலைகள் எல்லாம் நினைவுக்கு வரும்.
மக்கள் விஷ வாயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சாரை சாரையாய் வரும் மக்கள். அரசு மருத்துவனையிலிருந்து மருத்துவர் அந்த தொழிற்சாலைக்கு போன் செய்து, “என்ன கெமிக்கல் வெளியேறியது என சொன்னால், சரியான மருந்தை கொடுத்து காப்பாத்த முடியும்? சொல்லுங்கள்” என்பார். முதலாளியோ “சொல்லிவிடாதே! உண்மையை சொன்னால், நாம் எல்லோரும் மாட்டிப்போம்” என்பார். முதலாளிகள் எப்படி சிந்திப்பார்கள் என்பதற்கு அருமையான காட்சி.
முதலாளி, எம்.பி, சாதிக்கட்சி தலைவர், அரசு அதிகாரிகள் கூட்டை நன்றாக படம் வெளிக்காட்டியிருக்கிறது. முதலாளிகள் அரசை எப்படி ஆட்டுவிக்கிறார்கள்? அரசு அதிகாரிகளுக்கு தரும் லஞ்சம் மூலம் தான் என்பார் ஒரு அறிஞர். மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும். முதலாளித்துவம் இருக்கும் வரை லஞ்சம் இருக்கும். இந்த சிஸ்டத்தை வைத்துக்கொண்டே லஞ்சத்தை ஒழிக்கமுடியும் என்பவர்கள் அடிப்படை அரசியல் தெரியாதவர்கள் அல்லது டுபாக்கூர்கள் என தாராளமாய் சொல்லிவிடலாம்.
படத்தில் காதல், தொழிற்சாலையின் மோசமான நிலை, மக்கள் போராட்டம் என்பதை இயல்பாக காட்டிய இயக்குநர் இறுதி காட்சியில் கதாநாயகத்தனத்தை காட்டிவிட்டார். அது பொருத்தமில்லாததாக இருக்கிறது.
இயக்குநரே நாயகனாகவும் நடித்திருக்கிறார். நடிகர் சூர்யா தயாரித்திருக்கிறார். படத்தில் நடித்த பலரும் புதுமுகங்கள். பொருத்தமாக செய்திருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் இயக்குநர் சொல்கிறார். ”என் தட்டில சோறு இருக்கு. அதனால சாமி நல்லா வைச்சிருக்கு. அரசு நல்லா இருக்குன்னு சொல்றது அசிங்கம். பக்கத்து மனுசன் தட்டுலயும் சோறு இருக்கான்னு பார்க்கனும்!” என்கிறார்.
தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்க வாழ்த்துக்கள்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment