> குருத்து: March 2020

March 29, 2020

இனிவரும் தலைமுறைக்கு இவ்விட வாழ்க்கை சாத்தியமோ!

மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் இயக்க மேடைகளில் பாடல்கள் பாடப்படுவதுண்டு!

அப்படி கேரளாவில் ஆதிவாசி மக்களுக்காக போராடும் மேடையில் பாடிய பாடல் இது!

இஞ்சக்காடு பாலச்சந்திரன் எழுதிய பாடலை ரெஷ்மி சதீஷ்-ன் குரல் எந்தவித இசையும் இல்லாமல் தனித்து ஒலிக்கிறது!

"இனிவரும் தலைமுறைக்கு இங்கே வாழ்க்கை சாத்தியமா?"
என தொடங்கும் பாடல்....

"பெரிய அணைகள், அணு உலைகள், யுத்தங்கள் இனி நமக்கு வேண்டாம் என்று ஒருமனதாய் சொல்லலாம்!

வளர்ச்சி என்பது மனதின் எல்லையை விவரிப்பதில் தொடங்கலாம்!
வளர்ச்சி என்பது நன்மை பூக்கும் உலகை உருவாக்க ஆகலாம்!"
....என முடிவடைகிறது.

வளர்ச்சி என்றால் என்ன? என்பதை இந்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுத்தருகிறது!


குறிப்பு : பாடலை பாடும் ரெஷ்மி சதீஷ் இயக்கம் சார்ந்தவர் இல்லை. தொடர்ந்து படங்களில் பாடிவருகிறார்.

காதல்! காதல்! காதல்!

நாயகன். நாயகி. இருவரும் காதலிக்கிறார்கள். கடுமையான அப்பா. வழக்கமான எதிர்ப்பு. நாயகி வீட்டை விட்டு வெளியேறுகிறார். எதேச்சையாய் நாயகனை போலீஸ் கைது செய்கிறது. நாயகி ஏமாந்து மீண்டும் வீட்டுக்கு போகிறார். பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு ஒன்று சேருகிறார்கள்.

இந்த படம் 'தூறல் நின்னு போச்சு' என்று நினைப்பீர்கள். ஆனால் படம் 'பூச்சூடவா'. தூறல் நின்னு போச்சு-ன் மறுஆக்கம். அதை வெளிப்படையாக சொன்னதாக தெரியவில்லை.

பாடல் வார்த்தைகளில் ஏதும் மேஜிக் இல்லை. ஆனால் சிற்பியின் துள்ளல் இசை. எஸ்.பி.பி & சித்ராவின் உற்சாக பாடல். சிம்ரனின் நடன வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அப்பாஸ் சமாளித்து இருப்பார். பாடலை ஒருமுறை கேளுங்கள். காதலர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.

இந்த பாடலுக்கான யூடியூப் வாசகர்களின் ஆயிரம் கருத்துக்களில் 75% சிம்ரனின் அழகையும் நடன திறமையையும் வியக்கிறார்கள்.
பாடியவர்களையும், அப்பாஸையும் எப்பொழுதாவது பாராட்டுகிறார்கள். 🙂



எப்படி பெறுவேன்?

இயக்குனர் மகேந்திரனின் 'நண்டு' திரைப்படத்தில் வரும் இந்தி பாடல்!

உத்தரபிரதேசத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய சுதந்திர சிந்தனையால் அப்பாவுடன் முரண்பட்டு சென்னையில் ஒண்டிக்குடித்தனத்தில் குடியேறுகிறார் நாயகன்.

வீட்டு உரிமையாளர் பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட வராண்டாவில் கூடுகிறார்கள். யார் மீது பூ விழுகிறதோ அவர்கள் பாடவேண்டும் என்பது விளையாட்டு. நாயகன் மீது பூ விழுகிறது. தமிழ் பாட்டு தெரியாது என்கிறார். தாய்மொழியில் பாடுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள்.

தன்னுடன் வேலை பார்க்கும் அங்கேயே குடியிருக்கும் சீதாவை பார்த்துக்கொண்டே இந்தியில் பாடத் துவங்குகிறார். நாமும் கரைய துவங்குகிறோம்.

"Kaise kahoon"

பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் பாடலை எழுத, இளையராஜாவின் இனிய இசையில்... கஜல் பாடகர் பூபேந்திர சிங்கும், ஜானகியும் இனிமையாகப் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலின் அர்த்தம் தேடி இணையத்தில் அலைந்து திரிந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. அர்த்தம் புரிந்தால் மட்டும் தான் கேட்கவேண்டுமா என்ன? மீண்டும் மீண்டும் பல இரவுகளில் இந்த பாடல் தாலாட்டி கொண்டு தான் இருக்கிறது.

இந்த பாடலைப் பற்றி ஒருவர் இப்படி சொல்லியிருந்தார்.

"நான் கேட்கும் ஒரே இந்திப்பாடல்".

நான் அதையே இப்படி சொல்கிறேன்.

"நான் அடிக்கடி கேட்கும் ஒரே இந்திப்பாடல்".


நான் போகிறேன் மேலே மேலே!

அழகான கடற்கரையின் பின்னணியில் காதலர்கள் பாடும் பாட்டு. தாமரை தன் பேனாவில் காதலை தொட்டு தொட்டு எழுதியிருப்பார் போல! காதலர்களின் உணர்வை சொல்லும் இயல்பான காதல் வரிகள்!

பல இரவுகள் இந்த பாடல் தாலாட்டியிருக்கிறது. எஸ்.பி.பி மகன் தயாரித்த படம் என்பதால் யுவன் தான் இசைத்திருப்பார் என அழுத்தமாய் நம்பினேன். பகலில் தேடிப்பார்த்தால்... 'சுப்பிரமணியபுரம்' இசைத்த ஜேம்ஸ் வசந்தன். மன்னியுங்கள். எங்கே போனீர்கள் வசந்தன்?

எஸ்.பி.பியும் சித்ராவும் பாடலை அடுத்தக்கட்டத்திற்கு மேலே கொண்டு போயிருப்பார்கள். காட்சிகளின் வழியே தாளத்திற்கேற்ப பூக்கோலங்கள் வந்து வந்து போகும்! அழகு!

ஒருமுறை கேளுங்கள். நாள் முழுவதும் இந்த பாடல் உங்களை பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்! 


இந்த பொறப்புத்தான்!

ஒரு கலகலப்பான பாடலில் இருந்து துவங்குவோம்.

நண்பர் குழுவில் யாராவது ஒருவர் சாப்பாட்டு பிரியராக இருக்க பார்த்திருக்கிறேன். எந்தெந்த உணவு எங்கெங்கு ருசியாக இருக்கும் என சப்புக்கொட்டி கட கடவென சொல்வார்கள். சொல்லும் பொழுது நமக்கும் வாய் ஊறும்.

இப்படி ஊருக்கு ஊரு புகழ் பெற்றிருக்கும் உணவுவகைகளை பழனிபாரதி அருமையாக பட்டியலிட்டு இருப்பார். அவைகளை நுணுக்கமாய் காட்சியும் படுத்திருப்பார் இயக்குனர் பிரகாஷ் ராஜ்.

தமிழ்ப்படங்களில் உணவு குறித்த பாடல்கள் அத்திப்பூத்தாற் போல அபூர்வம். அதுவும் கேட்பதற்கு இதமாய் அமைவதும் அபூர்வம்.

'உன் சமையலறையில்' படத்தில் இளையராஜா வடிவமைத்த இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.

மற்றபடி ஒரு இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் உணவின் ருசியை கொஞ்சம் கவனமாய் தள்ளிவைக்கத்தான் வேண்டும்! இல்லையெனில் உணவின் பிடியில் சிக்கிகொள்வீர்கள். 


எனக்கு பிடித்த பாடல்கள்!

வேலைகள் தரும் அகசிக்கல்கள், பெருநகரம் பெரும் பதட்டம், தொடர்ந்து எழும் சிந்தனைகள் என தூக்கம் வராத இரவுகளில் பாடல்கள் தான் தூக்க மாத்திரை.

நான்கு நல்ல பாடல்களை கவனித்து கேட்டால் தூக்கம் தன்னாலே கண்களை தழுவிவிடும்.

பல நாட்களில் இருக்கும் சோர்வில் சிறந்த பாடல்களை பற்றி யோசிக்க முடிவதில்லை.

ஆகையால் நல்ல மனநிலையில் பிடித்த பாடல்களை தொகுக்க இருக்கிறேன். சில சிறந்த பாடல்களும் நினைவில் இருந்து போய்விடுகிறது!

ஆகையால் இனிவரும் நாட்களில் எனக்கு பிடித்த பாடல்களையும் அந்த பாடல் தரும் உணர்வுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவேன்.

குழம்பு கடை!

மேலை நாட்டு படங்களில் அவர்களின் உணவுமுறை மிகவும் எளிமையாக இருக்கிறது. பிரட், ஜாம், ஜூஸ், ஆம்லேட் என முடித்துக்கொள்கிறார்கள். நம்மூர் சமையல் நிறைய வேலையும், நிறைய நேரமும் ஆக கூடியது! சோறு, குழம்பு, கூட்டு (அ) பொரியல் எல்லாம் வேகமாக செய்து முடிக்கவே 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். கொஞ்சம் கவனம் பிசகினாலும், அடிபிடித்துவிடும், கருகிவிடும். கெட்டுவிடும்.

பகுதியில் இடியாப்பம் கிடைக்கிறது. தோசை மாவு கிடைக்கிறது. குக்கரும், அரிசியும் இருந்தால், எளிதாய் சோறு சமைத்துவிட முடிகிறது. ஆனால் குழம்பு? கடைகளில் சைவ குழம்புகள் கிடைக்காது. அசைவ குழம்புகள் விலை அதிகம். உடலுக்கு தொந்தரவும் தருபவை.

இந்த கடை போல நியாய விலையில், வயிற்றுக்கு தொந்தரவு தராத குழம்பு கடை நம்ம பகுதியில் இருந்தால் எப்படி நன்றாக இருக்கும்!

Shankars curry point
50/2, Muthurangam Rd, Kannammapet, CIT Nagar, Chennai, Tamil Nadu 600017

Nani's Gang Leader - Telugu (2019)

கதை. ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் இரவில் ஒரு வங்கியில் 300 கோடி கொள்ளை அடிக்கிறார்கள். கிளம்பும்போது கும்பலின் தலைவன் மற்ற ஐவரையும் போட்டுத் தள்ளிவிட்டு தனியாக தப்பிக்கிறான்.

கொல்லப்பட்ட ஒருவருடைய பாட்டி பழிவாங்க மீதி நால்வரின் தங்கை, அக்கா, அம்மா என வெவ்வேறு வயதில் உள்ளவர்களை திரட்டுகிறார்.

முதலில் தயங்கியவர்கள் பிறகு ஒத்துக்கொள்கிறார்கள். ஆங்கில படங்களை காப்பியடித்து கதை எழுதும் ஒரு எழுத்தாளரை சந்திக்கின்றனர். டுபாக்கூர் என தெரிந்தும் (!) தங்களுக்கு உதவ கோருகின்றனர். முதலில் துரத்தி விடுகிறார். பிறகு வேறு ஒரு காரணத்திற்காக உதவ முன்வருகிறார்.

கொள்ளையடித்த கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? பழிவாங்கினார்களா என்பது முழுநீள கதை.

****
யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் தான் இந்தப்படத்தின் இயக்குனர்.

நாயகனும், ஐந்து பேரும் என்ன கண்டுபிடித்துவிட போகிறார்கள்? என நாம் நினைக்கும் பொழுது, மெல்லமெல்ல துப்பறிந்து கொள்ளையனை கண்டுபிடிப்பது ஆச்சரியம். அதை இயக்குனர் காட்சிவழி சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

சில படங்களில் அரசுத்தரப்பில் புலனாய்வு செய்வதை இணையாக நகர்த்துவார்கள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை.

ஆறு பேருமே வேறு உறவின்றி தனித்து வாழ்பவர்கள். துப்பறிவதில் நிறைய கவனம் செலுத்திய இயக்குநர், ஆறு பேருக்கும் உள்ள பிணைப்பை இன்னும் வலுவாக காட்டிருக்கலாம் என எனக்கு தோன்றியது.

தொழில்நுட்ப ரீதியாக எல்லோரும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். அனிருத் இப்பொழுது தெலுங்கு உலகத்தில் வலம் வருகிறார். நல்ல இசை.

நானி, லட்சுமி, சரண்யா, அந்த குழந்தை பிரகாசிக்கிறார்கள்.

ஒருமுறை குடும்பத்தோடு படம் பார்க்கலாம்.

நீதிமன்றம் தொடர்பான பிற மொழி படங்கள்

குறிப்பு : ஒரு குழுவில் ஒருவர் கேட்டதற்காக, நீதிமன்றம் தொடர்பான படங்களைத் தேடி இங்கு தந்திருக்கிறேன். இதில் பெரும்பாலான படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெயர் பெற்றவை. இதில் ஐந்து படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். அதை கொஞ்சம் போல்ட் செய்திருக்கிறேன். நீங்கள்? இதே போல நல்ல படங்கள் இருந்தால், தெரிவியுங்கள்.

தமிழ் படங்கள் பற்றி தெரியுமாதலால் பட்டியலில் தவிர்த்துள்ளேன்.

1. Judgement at Nuremberg (1961)
2. 12 Angry Men (1957)
3. A few good men (1992)
4. Court (Marathi) (2014)
5. Shahid (Hindi) (2012)
6. Ghosts of mississips (1996)
7. Time to kill (1996)
8. Adams Rib (1949)
9. The whole Truth (2016)
10. The ran away jury (2003)
11. To kill a mocking bird (1962)
12. Melvilasam (Malayalam) (2011)
13. Kramer Vs Kramer (1979)
14. Lincoln lawyer (2011)
15. Oh My God (2012)
16. Amistad (1997)
17. Untouchables (1987)
18. ..and justice for all (1979)
19. The Rain maker (1997)
20. Judge (2014)
21. Inherit the wind (1960)
22. Erin Brokovich (2000)
23. A civil action (1998)
24. The verdict (1982)
25. Liar Liar (1997)
26. Michael Clayton (2007)

இது ஒரு உரையாடல்!

முகநூல் நண்பர் பழனிவேல் ஒரு பதிவிட்டிருந்தார். பதிவு குறித்து, இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த உரையாடலை இங்கு நண்பர்களுக்காக பதிகிறேன். இதில் என் வாதத்தில் ஏதாவது தவறு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! முகநூலில் விவாதங்கள் எல்லாம் இப்படித்தான் சிக்கலாகி போய்க்கொண்டிருக்கிறது. ஒரு விசயத்தை விவாதித்து ஒரு புரிதலுக்கு வர முடிவதில்லை. ஆகையால், விவாதங்களை தவிர்க்கவே நினைக்கிறேன். சில பதிவுகள் மண்டையை குடைந்துவிடுகிறது. என்ன செய்ய?


பழனிவேல் : நம் மக்களில் பெரும்பாலனவர்கள் இன்னும் பொது ஒழுங்கையே கற்காத நிலையில் இந்த வடமாநிலத்தவர்கள் வேறு இங்கு வந்து விலங்கினங்களைப் போல குவிந்து மந்தை மந்தையாக ஊர் முழுதும் சுற்றியலைந்து கொண்டிருக்கிறார்கள்.



நான் : விலங்கினங்கள்? அவர்கள் எல்லாம் இங்கு உழைத்து பிழைப்பவர்கள். தமிழர்களில் சிலர் திருட்டுத்தனமாய் செம்மரம் வெட்டுகிறார்கள். தமிழர்களில் சிலர் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்துகிறார்கள்.



பழனிவேல் : அவர்கள் ஒழுங்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றியே குறிப்பிட்டுள்ளேன் அவர்கள் மீது எனக்கு எப்போதும் கருணை உண்டு.



நான் : இந்த நாட்டில் அந்த மக்களுக்கு கல்வி கொடுக்க முடியாத அரசை நினைத்தால் தான் எனக்கு கோபம் வருகிறது. அந்த மக்கள் மீது வர்க்கப்பாசம் தான் எனக்கு வருகிறது. அவர்கள் குறைவான கூலிக்கு வேலைக்கு வாங்கப்படுவதைப் பார்க்கும் பொழுது கோபம் வருகிறது. நீங்கள் பெரியண்ணன் மனநிலையில் கருணை என்கிறீர்கள்.



பழனிவேல் : கருணை என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்னை பொறுத்தவரை கவலைப் படுகிறேன். அவர்களில் நிறைய பேர் கயவர்களும் உண்டு என்னுடன் வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் வேலை செய்திருக்கிறார்கள் நேபாள இளைஞன் ஒருவன் என்னுடன் நீண்ட கால நேரடி நட்பில் இருக்கிறான் அவர்களது வாழ்க்கை தரம் ஓரளவிற்கு தெரியும்



நான் : எவ்வளவு பேர் தமிழகத்தில் வட மாநிலத்தவர் இருக்கிறார்கள்? அதில் எத்தனை பேர்களுடன் பழகியிருக்கிறீர்கள்? நான் பல சிறு குறு தொழில் நிறுவனங்களில் பலரையும் பார்த்து பழகி கொண்டுதான் இருக்கிறேன். அவர்களில் ஒருவர் கூட கயவர் இல்லை. 6 மாதம், ஒரு வருடம் உழைக்கிறார்கள். சிறுக சிறுக சேர்த்த வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு தன் சொந்தங்களை பார்க்க செல்கிறார்கள். இதற்கு என்ன சொல்வீர்கள்?



பழனிவேல் : எனக்கு புள்ளி விவரக் கணக்குத் தெரியாது அவர்கள் நூறு சதவித பேரையும் புனிதப் படுத்தப் பார்க்கிறீர்கள் என்னோடு அச்ககத்தில் பலர் வேலை செய்திருக்கிறார்கள் அதில் சிலர் குற்றச் செயல் புரிந்திருக்கிறார்கள்.



நான் : நான் புனிதப்படுத்தவில்லை. "அவர்களில் நிறைய பேர் கயவர்களும் உண்டு" என நீங்கள் தான் சொல்கிறீர்கள். எல்லா இனத்திலும், சமூகத்திலுமே ஒரு குறிப்பிட்ட குற்றம் செய்கிற சதவிகிதம் உண்டு தான். அதனால் தான் செம்மரம், கஞ்சா என உதாரணங்கள் சொன்னேன். ஆனால் நீங்கள் தான் சிறிய ஒன்றை பெரிதாக்கி காட்டி, குற்ற கும்பல் போல சித்தரிக்க முயல்கிறீர்கள்.



பழனிவேல் : இங்கு அவர்கள் இருக்கும் அடர்த்தியை வைத்தே குறிப்பிட்டேன்
என்னுடைய பதிவின் திசையையே நீங்கள் மாற்றி தமிழனுடைய குற்றச் செயலோடு ஒப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் . நான் இருவருடைய பொது ஒழுங்கைப் பற்றித் தான் எழுதியுள்ளேன்.



நான் : பொது ஒழுங்கு என்பது தனிநபர்கள் சார்ந்ததா? சமூகம் சார்ந்ததா? அரசுக்கு இது தொடர்பு கிடையாதா? 'விலங்கினங்கள்' என்று சொன்னது தவறு என உங்களால் உணர முடியவில்லை. வார்த்தைகளில் விவாதித்து பிரயோஜனமில்லை.



பழனிவேல் : நான் ஒரு பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தேன் பாலத்திற்கு மேலே நடந்து போய்க் கொண்டிருந்த வடநாட்டு கும்பல் மேலிருந்து கீழே பாக்கு எச்சிலை துப்பினார்கள் என் உடல் முழுதும் பாக்கு எச்சில் அவர்களுக்கு எச்சில் துப்பும் அடிப்படை அறிவைக் கூட அரசுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். என் மீது எச்சில் துப்பியவனை எப்படி வேண்டுமானாலும் திட்டுவேன்.



நான் : ஏதோதோ பேச துவங்குகிறீர்கள். உங்களுக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை. ஒரு தொழிலாளியான நீங்களே சக தொழிலாளிகளை விலங்கினங்கள் என சொல்ல முடிகிறது என்றால், குட்டி முதலாளி வர்க்கத்தினர் என்ன யோசிப்பார்கள் என நினைத்தால் சிக்கலாக இருக்கிறது.


இனி உங்களுடன் விவாதிப்பதில் பிரயோஜனமில்லை.

நன்றி.

Annabelle comes home (2019)



1970. பேய் ஓட்டும் வாரன் தம்பதிகள் ஆனபெல் பொம்மையை தூக்கி வந்து, பேய் தொடர்பான பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் தங்களுடைய வீட்டில் உள்ள அருட்காட்சியத்தில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கிறார்கள்.

வெளியூர் வேலை இருப்பதால், அவர்களின் பெண்ணான, சிறுமி ஜூடியை பார்த்துக்கொள்ள மேரி ஆலன் என்ற இளம்பெண்ணை நியமித்து விட்டு, ஊருக்கு கிளம்புகிறார்கள்.

மேரி ஆலனின் தோழி டேனியலா, சமீபத்தில் ஒரு விபத்தில் தன் தந்தையை இழந்தவள். தன்னால் தான் தன் அப்பா இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்வில் இருக்கிறாள். வாரன் தம்பதி வீட்டிற்குள் நுழைந்தால், தன் இறந்து போன அப்பாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என வீட்டிற்குள் நுழைகிறாள்.

அந்த அறைக்குள் நுழைந்து, ஆனபெல் மூடி வைத்திருக்கும் கண்ணாடியை திறந்துவிடுகிறாள்.

ஆனபெல் தானும் கலவரப்படுத்துகிறது. மற்ற ஆவிகளையும் தன் செல்வாக்கால் கிளப்பிவிடுகிறது.

மூவரும் வெரைட்டியான ஆவிகளிடமிருந்து தப்பித்தார்களா? என்பது நீளக்கதை!

****
கான்ஜூரிங் பட வரிசையில் இது ஏழாவது படம். ஆனபெல் பொம்மைக்கு மூன்றாவது படம். காலாண்டு விடுமுறையில் என் பொண்ணுக்கு முதலாவது படம். 🙂

கான்ஜூரிங் வரிசை படங்களை எல்லாம் பார்ப்பதில்லை. யாராவது நன்றாக இருக்கிறது என சொன்னால் மட்டுமே பார்ப்பதுண்டு.

முதல்பாதி விறுவிறுப்பு இல்லை. இரண்டாவது பாதி நன்றாக போகிறது. கோரமாய், திடீரென முன்வந்து நிற்பது போன்ற பயமுறுத்தும் காட்சிகள் இல்லை என்பது ஒரு ஆறுதல்!

குழந்தைகளை மனதில் கொண்டு எடுத்திருக்கிறார்கள் போல! கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

மேரி ஆலனை ஈர்ப்பதற்காக அந்த டீனேஜ் பையன் செய்யும் செயல்களும், பிறகு கோழி கூட்டிற்குள் ஒளிந்து இருப்பதும் காமெடி கலாட்டா தான்!

வாரன் தம்பதிகளுக்கு வேலையே இல்லை. துவக்கத்திலும், இறுதியிலும் மட்டும் வருகிறார்கள்.

பேய் என்பதே கற்பனை தான். அதில் கற்பனை குதிரையை தட்டி விட்டு எப்படி எல்லாம் எடுக்கலாம்? நாலு படம் எடுத்தால் ஒரு படம் தான் தேறுகிறது. இந்த படம் கொஞ்சம் கல்லா கட்டிவிட்டதால், அடுத்தும் வரும் என்றே நினைக்கிறேன்.

ஒரு முறை பார்க்கலாம்.

ஸ்ரீவித்யா : துயர விழிகளின் தேவதை


- ஜி. ஆர். சுரேந்திரநாத்

I Keep a frozen drop of tear in my soul for Srividya, for ever.
-மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

அக்டோபர் 20, 2006. வெள்ளிக்கிழமை. திருவனந்தபுரம், கரமனா பிராமண சமாஜத்தின் தகன மேடையில், நடிகை ஶ்ரீவித்யாவின் உடலுக்கு அவருடைய சகோதரர் சங்கரராமன் எரியூட்டுவதற்கு முன்பு, கேரள அரசின் சார்பில் 21 குண்டுகள் முழங்க ஶ்ரீவித்யா கௌரவிக்கப்பட்டார். முன்னதாக அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களும், அப்போதைய கேரள எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி அவர்களும் ஶ்ரீவித்யாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். மலையாளிகள் ஒரு தமிழருக்கு செய்த மிகவும் அபூர்வமான மரியாதை அது.

நடிகை ஶ்ரீவித்யா சிறுமியாக சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து தண்ணீர்துறை மார்க்கெட்டுக்கு ரிக்‌ஷாவில் தனது தாத்தா அய்யாசாமி அய்யரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டே சென்றபோது நினைத்திருக்கமாட்டார்… தனது உடல் அரசு மரியாதையுடன் திருவனந்தபுரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று. தன் அம்மா கச்சேரிகளுக்குச் செல்லும்போது, பக்கத்து வீட்டிலிருந்த ‘திருவனந்தபுரம் சகோதரிகள்’(நடிகைகள் பத்மினி, ராகினி, லலிதா) வீட்டில் விட்டுவிட்டுச் செல்லும்போது ஶ்ரீவித்யா நினைத்திருக்கமாட்டார்… தனது இறுதிக்காலத்தை திருவனந்தபுரத்தில் கழிப்போம் என்று.

ஆனால் கலை மிகவும் தனித்துவமானது. அது யார் யாரையோ எங்கெங்கோ கொண்டு போய் சேர்த்து விடுகிறது. இங்கிலாந்தில் பிறந்த சார்லி சாப்ளினை ஸ்விட்சர்லாந்தில் இறக்க வைத்தது. லெபனானில் பிறந்த கவிஞர் கலீல் ஜிப்ரானை, நியூயார்க்கில் இறக்க வைத்தது. சென்னையில் பிறந்த ஶ்ரீவித்யாவை திருவனந்தபுரத்தில் இறக்க வைத்தது.

விழிகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தேவதை இருந்தால், அந்த தேவதை ஶ்ரீவித்யா போலத்தான் இருக்கும். கவிஞர் சுகுமாரன் ஶ்ரீவித்யாவின் விழிகளை, ‘சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்” என்று மகா அற்புதமாக வர்ணித்திருக்கிறார். அவ்வளவு அழகான விழிகளை ஶ்ரீவித்யாவிற்கு படைத்த கடவுள், ஏனோ தெரியவில்லை… சோகம்தான் அந்தக் கண்களை மேலும் அழகாக்கும் என்று நினைத்தார். . “அழாவிட்டால், விழிகள் அழகாக இருக்காது” என்று இத்தாலிய நடிகை சோஃபியா லாரென் சொன்னது ஶ்ரீவித்யாவிற்கு முற்றிலும் பொருந்தியது. தனது வாழ்நாள் முழுவதும் ஶ்ரீவித்யா தனது விழிகளில் சோகத்தை சுமந்தபடியே வாழ்ந்தார்
அந்த சோகத்துடனேதான் அந்த விழிகள் நம்மைப் பார்த்து சிரித்தது. கண்ணீர் விட்டது. வெட்கப்பட்டது, கோபப்பட்டது, ஆதங்கப்பட்டது. சிணுங்கியது. குமுறியது. கொந்தளித்தது. குதூகலித்தது. ஒரு கதாபாத்திரத்தின் அனைத்து மன உணர்வுகளையும், தன் ஒரு துளிப் பார்வையில் நமக்குக் கடத்திவிடும் அபூர்வ ஆற்றலுடனேயே கடைசி வரையிலும் அந்தக் விழிகள் இருந்தது.

புகழ்பெற்ற பாடகி எம்.எல். வசந்தகுமாரிக்கு மகளாக 1953ல் பிறந்த ஶ்ரீவித்யாவிற்கு முதலில் வைத்த பெயர் மீனாட்சி. பின்னர்தான் அது ஶ்ரீவித்யாவானது. 13 வயதில் நடிக்க ஆரம்பித்த ஶ்ரீவித்யா, தொடர்ந்து நாற்பதாண்டுகள், தான் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரையிலும் நடித்துக்கொண்டேயிருந்தார். ஶ்ரீவித்யா ஒரு தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் அவர் கதாநாயகியாக தமிழில் பெரிய தடங்களை பதிக்க இயலவில்லை. என் சிறுவயதில் ஶ்ரீவித்யா கதாநாயகியாக நடித்த ‘ரௌடி ராக்கம்மா’, ‘ஆறு புஷ்பங்கள்’ போன்ற படங்களைப் பார்த்தது மிகவும் கலங்கலாகத்தான் நினைவில் உள்ளது. அபூர்வ ராகங்கள் படத்தில், தனது 22 வயதில், 20 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கும் தில் அவருக்கு இருந்தது. ஆனால் ஒரு கதாநாயகியாக தமிழில் அவர் பெரிய அளவில் எடுபடாமல் போனதற்கு, இதுவே ஒரு காரணமாக இருக்குமோ என்று நான் பலமுறை யோசித்ததுண்டு.

ஶ்ரீவித்யாவின் கவிதை பேசும் கண்கள், தமிழில் கவிதைகள் பேசியிருக்கவேண்டும். ஆனால் அது மலையாளத்தில்தான் கவிதை பேசியது(ஶ்ரீவித்யா தமிழில் 93 படங்கள் மட்டுமே நடித்திருத்திருக்கிறார். மலையாளத்தில் 226 படங்களில் நடித்திருக்கிறார்).அவரின் கண்களில் தொடங்கி, உதட்டில் பயணித்து நமது இதயத்தில் இறங்கும் அந்த வெகு அழகிய புன்னகையை மிகவும் குறைவாகவே தமிழில் பார்க்கமுடிந்தது. குறைந்த காலத்திலேயே தமிழ் சினிமா அவரை நைஸாக அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க வைத்து… தடாலடியாக அம்மாவாக்கி, முப்பது ப்ளஸ் வயதுகளிலேயே ஒரு நிரந்தர அம்மா நடிகையாக்கிவிட்டது. ஆனால் ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அவர் மலையாளத்தில் அந்த வயதுக்குரிய நடுத்தர வயது மனைவி மற்றும் சிறு குழந்தைகளின் தாய் வேடத்தில் பல படங்களில் நடித்தார்.

என் பார்வையில், ஶ்ரீவித்யா மிகவும் அழகாக தோற்றமளித்தது இந்த முப்பது ப்ளஸ் வயதுகளில்தான். இந்த முப்பது ப்ளஸ் வயது பெண்களுக்கு ஒரு தனி அழகைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். இளமையின் ஆர்ப்பாட்டங்கள், ஏக்கங்கள், கனவுகள், கொண்டாட்டங்கள்… பரபரப்புகள்… எல்லாம் ஓய்ந்து தனது உண்மையான நிலையை உணந்த பிறகு வரும் அமைதியின் அழகு அது. இத்துடன் ஶ்ரீவித்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால் அவரது முகத்தில் உருவான சோகம் கலந்த அழகு, அவரது அழகை மற்ற அழகிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.

எனது இளமைக் காலத்தில் தமிழில் அவர் அக்கா, அம்மா வேடங்களில்தான் நடித்துக்கொண்டிருந்தார். எனவே அவர் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் ஶ்ரீவித்யாவை நான் ரசிக்க ஆரம்பித்தது, 1984ல் வெளிவந்த ‘ரஸனா” என்ற மலையாளப்படத்தை பிற்காலத்தில் பார்த்த பிறகுதான். அத்திரைப்படம் என்னை ஶ்ரீவித்யாவிற்கு ரசிகனாக்கியது.

ரஸனா…. மலையாளத்தில் மட்டுமே சாத்தியமான மிகவும் துணிச்சலான முயற்சி. ரஸனா திரைப்படத்தில், எழுத்தாளர் பரத் கோபியின் மனைவி ஶ்ரீவித்யா ஒரு அரசு அலுவலகத்தில் சூப்பர்வைஸராக வேலை பார்ப்பார். அங்கு புதிதாக வேலைக்குச் சேரும் நெடுமுடி வேணு ஒரு கிராமத்து வெகுளி. அவனைப் பற்றி ஶ்ரீவித்யா தனது கணவனிடம் சொல்கிறார். பரத்கோபி, வேணு கேரக்டரை வைத்து கதை எழுதும் யோசனையில். “வேணு ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான கேரக்டர். நாளைலருந்து அவன்கிட்ட கொஞ்சம் நெருக்கமா, ஃப்ரண்ட்லியா பழகுற மாதிரி நடி. அவன் எப்படி ரீயாக்ட் செய்வான்னு பாக்கணும்…” என்கிறார் சிறிது தயக்கத்திற்கு பிறகு ஶ்ரீவித்யா நெடுமுடி வேணுவிடம் நெருங்கிப் பழகுவது போல் நடிக்கிறார். ஶ்ரீவித்யா மேல் காதலாகிறார் வேணு. வேணுவின் நண்பர் மம்முட்டி வேணுவின் ஆசையை மேலும் தூண்டிவிடுகிறார். ஶ்ரீவித்யா வேணுவுடன் ஹோட்டலுக்கு காபி அருந்தவும், சினிமா பார்க்கவும் செல்கிறார்.

சில நாட்களுக்குப் பிறகு ஶ்ரீவித்யா வேணுவிடம், தனது கணவன் ஊரிலில்லை என்று கூறி அவனை உணவுண்ண வீட்டுக்கு அழைக்கிறார். அவனைப் படுக்கையறையில் அமரச் சொல்கிறார். வேணு ஶ்ரீவித்யாவை அணைக்கும் கனவுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு கணவனுடன் வரும் ஶ்ரீவித்யா தனது கணவனை அறிமுகப்படுத்துகிறார். அதிர்ச்சியடையும் வேணு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் இறங்கிச் செல்கிறார். ஶ்ரீவித்யா பரத்கோபியிடம் மிகவும் குற்ற உணர்வுடன் பேச… “வேணு ஒரு அற்புதமான கேரக்டர்” என்கிறார் பரத்கோபி. இன்னும் கொஞ்சம் அவனுடன் பழகுமாறு கூறுகிறார் .இதற்கு ஶ்ரீவித்யா மறுப்பு தெரிவிக்கிறார். வாழ்க்கையே வெறுத்துப்போன வேணு அலுவலகத்திற்கு வராமல் விரக்தியில் இருக்கிறார். பரத்கோபி, வேணுவை நேரில் சந்தித்து உண்மையைக் கூறுகிறார். அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்து ஶ்ரீவித்யாவை பார்க்கும் வேணு, ‘என் வாழ்வில் ஒரே பெண் நீங்கள் மட்டும்தான்” என்று கூறிவிட்டு வருகிறார். ஶ்ரீவித்யா வேதனையுடன் அழுகிறார். பின்னர் க்ளைமாக்ஸில் நெடுமுடி வேணு தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட… ஶ்ரீவித்யா மனநிலை சரியில்லாதவராகிறார்.

ஒரு ஆணின் மனதிற்குள் மிகவும் நுட்பமாக ஊடுருவி பயணம் செய்யும் இந்தக் கதையில், தனது அற்புதமான நடிப்பால் ஶ்ரீவித்யா அசத்தியிருப்பார். இந்தக் கதைக்கு நடுத்தர வயதில், மிகவும் அழகான தோற்றமுடைய ஒரு பெண் வேண்டும். அதே சமயத்தில் அந்த அழகு, ஒரு கிராமத்து வெகுளி நெருங்கவே பயப்படும் ஹைசொசைட்டி அழகாக இல்லாமல், எளிய அழகாக இருக்கவேண்டும். அதற்கு ஶ்ரீவித்யாவை விட்டால் வேறு யாரையும் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

இந்த திரைப்படத்தில், மற்றப் படங்களில் சாத்தியமில்லாத பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு… பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் விழா. படத்தின் பிற்பகுதியில் தனது கணவனிடம், ‘மனைவியை வைத்து தருமன் சூதாடியது போல், ஒரு கதாபாத்திரத்திற்காக நீங்கள் என்னைப் பணயம் வைத்து விளையாடிவிட்டீர்கள்” என்று ஆதங்கத்துடன் பேசும்போது ஶ்ரீவித்யாவின் கண்களில் தெரியும் சோகம்… ஒரு காவிய சோகம்.

இப்படத்தை பார்த்த பிறகு ஶ்ரீவித்யாவின் மலையாளப் படங்களை தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தேன். பரதனின் ‘காட்டெத்தே கிளி கூடு…’ படத்தில் பரத்கோபியின் மனைவியாக நன்கு நடித்திருப்பார். ‘பவித்ரம்’ திரைப்படத்தில் ஶ்ரீவித்யாவின் பெரிய மகனுக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும். இரண்டாவது மகனுக்கு திருமணம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், ஐம்பது வயதில் கர்ப்பமாகிவிடும் மனைவியாக ஶ்ரீவித்யா நடித்திருந்த விதத்திற்கு முன்மாதிரி இல்லை. ஆனால் ஶ்ரீவித்யா அதை மிகச் சிறப்பாக செய்திருப்பார். அதிலும் குறிப்பாக, தான் கர்ப்பமாக இருப்பதை மகன் அறிவதை உணரும்போது காண்பிக்கும் துக்கமும், வெட்கமும் கலந்த உணர்வுகளை அந்த மகத்தான விழிகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ‘தெய்வத்தின்ட விக்ருதிகள்” திரைப்படத்தில்,, ஆங்கிலோ இந்திய பெண்ணாக ஶ்ரீவித்யா நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் எட்டினார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தமிழ் சினிமா அவரை வெறும் அம்மாவாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாலும் ‘தளபதி’, ‘கற்பூர முல்லை’, ‘நீ பாதி நான் பாதி’ ஆகிய படங்களில் ஶ்ரீவித்யா தனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது.

இவ்வாறு திரைப்படங்களில் அவர் மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில், ஶ்ரீவித்யா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டிருந்தார். காதல் திருமணம், விவாகரத்து, விவாகரத்தான கணவனிடமிருந்து தான் உழைத்து சம்பாரித்த சொத்துகளை மீட்பதற்கான போராட்டம்… என்று அவரது வாழ்க்கையின் மிகவும் வேதனையான காலகட்டத்தில் இருந்தார். ஆனால் இந்த துயரங்களிலிருந்து கலையே அவரை மீட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் சொத்துகள் அவரது கணவர் கைக்கே செல்ல… ஶ்ரீவித்யா விரக்தி நிலைக்குச் சென்றார். இதே காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அவரை மெல்ல மறக்க ஆரம்பிக்க… தன்னைக் கொண்டாடிய கேரளாவின் திருவனந்தபுரத்திற்கே குடி பெயர்ந்தார். அங்கிருந்தே தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வந்த ஶ்ரீவித்யா, மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் வெற்றிகளை ஈட்டிய ஶ்ரீவித்யா உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக தனது சொத்துகளை மீண்டும் பெற்றார்.

ஆனால் விதிக்கு ஶ்ரீவித்யாவின் அழகிய விழிகளின் மீது ஒரு பொறாமை இருந்திருக்கவேண்டும். அவ்விழிகளில் சந்தோஷத்தின் ரேகைகள் படர்வதை அது விரும்பவில்லை. எனவே இம்முறை அவரை சோகத்தில் ஆழ்த்த விதி ‘புற்றுநோய்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஶ்ரீவித்யா தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார். தனது தொடர் துயரங்கள் குறித்து ஶ்ரீவித்யா, “நான் சந்தோஷப்பட எந்த நினைவுகளும் இருந்துவிடக்கூடாது என்று விதி தீர்மானித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

ஶ்ரீவித்யா போராடி, போராடி களைத்துப்போயிருக்கவேண்டும். 2006 ஆம் ஆண்டு, உடல்நிலை மோசமான ஶ்ரீவித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஶ்ரீவித்யா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரைக் கடைசியாக சந்தித்த மலையாளக் கவிஞரும், ஶ்ரீவித்யாவின் நெருங்கிய நண்பருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, “எங்கள் கடைசி சந்திப்பு கண்ணீரில் மிதந்தது. ஒரு நோயுற்ற ரோஜா போல் உருக்குலைந்திருந்த அவர் தனது அழகை நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தார். தனது வாழ்நாளில் நாம் மீண்டும் சந்திக்கக்கூடாது என்று கூறினார்” என்கிறார்.

ஒரு பெண் வயதாகி, அழகை இழப்பது வேறு. ஒரு நடிகை அழகை இழப்பது வேறு. ஒரு கவிஞன் தனது கவித்துவத்தை இழப்பது போல், ஒரு எழுத்தாளனோ, இயக்குனரோ தனது படைப்புத்திறனை இழப்பது போல் ஒரு ஓவியன் வயதாகி விரல் நடுங்கி வரைய முடியாமல் போவது போல், ஒரு நடிகை தனது அழகை இழக்கும்போது தங்கள் அழகை மட்டுமல்ல. தங்கள் கலையையும் இழக்கிறார்கள். ஒரு கலைஞன் தனது கலைத் திறனை இழக்கும் கணங்கள், வாழ்வின் மிகவும் வேதனையான கணங்கள். அது போல் நடிகைகள் என்பவர்கள், அவர்களுடைய அழகுக்காக வாழ்நாள் முழுவதும் ஆராதிக்கப்பட்டவர்கள். அந்த அழகின் பீடத்திலிருந்து இறங்கும்போது அவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருக்கவே விரும்புவார்கள். எனவே ஶ்ரீவித்யா தன்னை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை. மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான நடிகர் கணேஷ்குமாரும், அவரது தாயாரும் மட்டுமே ஶ்ரீவித்யாவின் அருகில் இருந்து அவரைக் கவனித்துக்கொண்டனர்.

ஶ்ரீவித்யா இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்ற கமல்ஹாசன் ஶ்ரீவித்யாவை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். அங்கு ஶ்ரீவித்யாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்த கமல், அவரை சிகிச்சைக்காக எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் ஶ்ரீவித்யா மறுத்துவிட்டார்.

ஶ்ரீவித்யாவின் இறுதி நாட்களில் அவரைச் சந்தித்த இன்னொரு நபர், மலையாள இயக்குனர் ஶ்ரீகுமாரன் தம்பி. ஶ்ரீவித்யா கடைசியாக நடித்துக்கொண்டிருந்த ‘அம்மா தம்புராட்டி” என்ற மெகா சீரியலின் இயக்குனரான குமாரன் தம்பி, “இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் ஶ்ரீவித்யா வாழ்க்கையை நேசித்தார். வாழவேண்டும் என்று விரும்பினார். ஶ்ரீவித்யாவின் மரணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு நான் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, அவருக்கு ரத்த மாற்று சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்திலும் அவர் வீட்டுக்குச் செல்வது குறித்தும், நல்ல உணவுகளை உண்பது குறித்தும் பேசினார். ஶ்ரீவித்யா தனது இறுதி நாட்களில், தனது நோய் குறித்து வெளியே கூறி அனுதாபம் ஈட்டவோ, விஐபிகளால் அல்லது ரசிகர்களால் மருத்துவமனை நிரம்பி வழியவேண்டும் என்றோ விரும்பவில்லை” என்று கூறினார்.

தனது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருந்த அந்த சோகத்தின் தேவதை, தனது ஐம்பத்து மூணாவது வயதில், 2006, அக்டோபர் 19 ஆம் தேதி இரவு திருவனந்தபுரம் ஶ்ரீஉத்தராட திருநாள் மருத்துவமனையில் தனது விழிகளின் உயிர்ப்பை, புன்னகையின் உயிர்ப்பை, அழகின் உயிர்ப்பை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது.

ஶ்ரீவித்யா இறந்த பிறகும் அவரைக் குறித்த சர்ச்சைகள் ஓயவில்லை. ஶ்ரீவித்யாவிற்கு சிகிச்சை அளித்த புற்றுநோய் மருத்துவர் திரு. எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் தனது சுய வரலாற்று நூலில், “அனைத்துப் பெண்களையும் போல, ஶ்ரீவித்யாவும் மருந்துகளின் பக்கவிளைவால், தனது தோற்றம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று மிகவும் அஞ்சினார். எனவே மருத்துவர்கள் குறைந்தளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் புதிய மருந்துகளை அளிக்க முடிவு செய்தனர். ஒரு இன்ஜெக்‌ஷன் ஒரு லட்ச ரூபாய் என்ற விபரத்தை மருத்துவர்கள் ஶ்ரீவித்யாவிடம் தெரிவித்தனர். அதற்கு ஶ்ரீவித்யா தனது அனைத்து சொத்துகளையும் தனது பெயரிலான அறக்கட்டளைக்கு மாற்றிவிட்டதாகவும், அந்த அறக்கட்டளையிடமிருந்து சிகிச்சைக்கான செலவைப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார். மருத்துவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை இதற்காகக் தொடர்புகொண்ட போது, அவ்வளவு விலை உயர்ந்த மருந்துகளுக்கான செலவை ஏற்கமுடியாது என்றும், வேறு சிகிச்சை அளிக்குமாறும் கூறினார்கள்” என்று கூறியது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அறக்கட்டளையின் தலைவரும், நடிகரும், முன்னாள் அமைச்சருமான கணேஷ்குமார் தரப்பினர், “இக்குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்” என்று கூறினர்.

இது மட்டுமின்றி, கணேஷ்குமாருக்கு எதிரான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில், காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்த ஶ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமன், “ஶ்ரீவித்யாவின் உயில் உண்மைதானா என்றே தனக்கு சந்தேகமிருப்பதாகவும், இன்று வரையிலும் கணேஷ்குமார், ஶ்ரீவித்யா தனது உயிலில் தெரிவித்த எக்காரியங்களையும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார். அதே போல் நடிகர் கமல்ஹாசனும் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், ஶ்ரீவித்யாவுடன் இறுதி நாட்களில் இருந்தவர்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில், அந்த துயரங்களின் தேவதை இறந்துவிட்ட பிறகு, இந்த சர்ச்சைகள் எல்லாம் அர்த்தமே இல்லாமல் ஆகிவிடுகிறது.

ஶ்ரீவித்யா இறந்தபோது எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் உயிரோடு இருந்தபோது ஒரு முறை நான் ஶ்ரீவித்யாவை நேரில் பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை, வாணி மஹாலில் நடைபெற்ற ஒரு ஆர்கெஸ்ட்ராவுக்கு எனக்கு பாஸ் கிடைத்தது. ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு நடுவே, திடீரென்று நடிகை ஶ்ரீவித்யா மேடையில் தோன்றினார். பச்சை நிற புட்டுப்புடவையில் அளவான மேக்கப்போடு வந்திருந்தார். மேடையில் சில நிமிடங்கள் பேசினார். சிறிது நேரத்தில் அவர் கிளம்ப… விழா ஏற்பாட்டாளர்கள் அவரோடு வெளியே சென்றனர். நானும் சென்றேன். நான் சென்றது ஶ்ரீவித்யாவைப் பார்க்க அல்ல. ‘ரஸனா…” சாரதாவை. ‘’காட்டெத்தே கிளிகூடு’ சாரதாவை(இரண்டு படங்களிலும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சாரதாதான்).

நான் வராண்டாவிற்கு வந்தபோது ஶ்ரீவித்யாவைச் சுற்றி நான்கைந்து பேர் பேசிக்கொண்டிருந்தனர். நான் இரண்டு தலைகளுக்கிடையே தெரிந்த ஶ்ரீவித்யாவைப் பார்த்தேன். பார்க்கும்போதெல்லாம் ஒரு சோகத்தின் ராகத்தை என்னுள் இசைக்கும் அழகிய விழிகளையும், புன்னகையையும் நேரில் கண்டேன். ஏதாவது பேசலாமா என்று நினைத்தேன். தயங்கிக்கொண்டே நின்றேன்.

கடைசியில் அவர் அனைவரிடமும் வணக்கம் கூறி விடைபெற்றபோது நான், “மேடம்… ரஸனா படத்துல நீங்க ரொம்ப அற்புதமாக நடிச்சிருந்தீங்க…”என்றவுடன், வாணி மஹால் வராண்டா விளக்கு வெளிச்சத்தில், பச்சை நிறப் பட்டுப்புடவையில் தனது அகன்ற விழிகள் விரிய, ஒரு பரிசுத்தமான புன்னகையுடன், “தேங்க்ஸ்…” என்ற ஶ்ரீவித்யா இப்போதும் என்னுடன் இருக்கிறார். ஏனெனில் ஶ்ரீவித்யாவின் அந்தப் புன்னகை… எனக்கான புன்னகை.

- ஜி.ஆர். சுரேந்திரநாத்

நன்றி : சொல்வனம்

வசந்தம் வருவதை தடுக்கமுடியாது!

நீங்கள் அத்தனை மலர்களையும் நசுக்கலாம்! - ஆனால்
வசந்தம் வருவதை
தடுக்கமுடியாது! 

- கவிஞர் பாப்லோ நெரூதா

பேய்களும், முனிகளும்!

முன்குறிப்பு : இது கொஞ்சம் பழைய கதை. இப்போதும் ஊருக்கு போனால், இரண்டு பேய் கதைகள் சொல்கிறார்கள்.

முன்பெல்லாம் பேய் துரத்தும் பொழுது, ஓட முடியாமல்... பேய் நெருங்கி வரும் பொழுது, வேர்த்து விறுவிறுத்து முழிப்பு தட்டிவிடும். பிறகு உயிரோடு தான் இருக்கிறோம் என நிம்மதியாகி, தூங்கிவிடுவேன்.

பல ஆண்டுகளாக பேய் ஏதும் கனவில் வருவது இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பாக, ஒரு பேய் கனவில் வந்தது. திரில்லிங்காக இருந்தது.

எப்போதும் சமூக எதார்த்த கனவுகளே வந்தால் போரடிக்காது! 

உங்களுக்கு ஏதும் அனுபவம் உண்டா!
****

ஊரில் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ஊருக்கு போய், 4 நாட்கள் தங்கி, உடல் நலம் கொஞ்சம் தேறியதும் கிளம்பிவந்தேன்.

அதற்கு பிறகு, அண்ணன் தான் இருந்த வீட்டை காலி செய்துவிடலாம் என புதிய வீடு ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். இப்பொழுது தானே புதிய வீட்டிற்கு போனீர்கள்? இந்த வீட்டில் என்ன பிரச்சனை என்றேன். இந்த வீட்டில் ’பேய்’ இருக்கிறது என்றார்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்றதற்கு ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டு போனவர்கள் பக்கத்தில் சொல்லி சென்றிருக்கிறார்கள். நானும் ஜாதகம் பார்த்தேன் ”இந்த வீட்டில் இருக்கவேண்டாம் கிளம்பி விடுங்கள் என சொன்னார்கள்” என்றார். ’அந்த பேய்தான் அம்மாவை தாக்கிவிட்டது’ என்றார்.

அம்மாவிற்கு 25 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள் அம்மாவின் உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுவிட்டன. வயதும் 65ஐ தாண்டிவிட்டது. உடல் தரும் தொல்லையிலிருந்து விடுபட அம்மா இனி வாழும் காலம் வரைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என முடிவெடுத்துவிட்டார். அதனால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார். அதனால் தான் இவ்வளவு சிக்கல்! இப்படி விளக்கம் கொடுத்தாலும், பேய் கண்ணுக்கு முன்னாடி பயமுறுத்தியதே தவிர, அறிவுபூர்வமான விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை அண்ணனுக்கு!

இருக்கும் சொந்த வீட்டை விட்டு விட்டு, இப்படி வாடகை வீடுகள் தேடி அலைவதற்கும் பின்னாலும் ஒரு அமானுஷ்ய முன்கதை ஒன்று இருக்கிறது.

எங்க அம்மாவின் பெரியம்மா ஒருவர் 98 வயது வரை உயிரோடு இருந்தார். அம்மாவின் அம்மா அம்மாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், பெரியம்மா தான் அம்மாவிற்கு திருமணமே செய்து வைத்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எல்லோரும் ஆசி பெறும் பொழுது, எங்க அண்ணனும் போயிருக்கிறார். கிழவி ஆசி மட்டும் வழங்காமல், ”அம்மா குடியிருக்கும் அந்த வீட்டை இப்பொழுது எடுத்துக்கட்டாதே! உனக்கு தொல்லைகள் வரும். அம்மா இருக்கும் வரைக்கும் அந்த வீட்டில் இருக்கட்டும். அம்மாவின் காலத்திற்கு பிறகு, அந்த வீட்டை புதுப்பித்துக்கட்டி நீ குடிபோ!” என சொல்லியிருக்கிறார்.

நான் வீட்டை பழுது பார்க்கலாம், எடுத்துக்கட்டலாம் இந்த 6 மாதத்தில் இரண்டொரு முறை பேசும் பொழுதெல்லாம் அண்ணன் தட்டிக்கழித்தார். துருவி துருவி கேட்ட பொழுது, இந்த அமானுஷ்ய கதையை சொன்னார். தலையில் அடித்துக்கொண்டேன்.

இருக்கிற வீட்டை காலி செய்துவிடுகிறேன் என சொல்லி, புதிய வீடும் கிடைக்காமல் அண்ணன் ஏகமாய் மாட்டிக்கொண்டார். கடைசி நேரத்தில், ஒருவீடு பார்த்து குடியேறினார்.

கடந்த மாதம் அண்ணிக்கு திடீரென உடல்நலம் சரியில்லை. நடு மண்டையிலிருந்து நடு முதுகு வரை அப்படி ஒரு வலி. நான்கு நாட்களாக தூக்கமே இல்லாமல், ஒரே அழுகை. நகரின் முக்கிய சிறப்பு மருத்துவரை பார்த்து, பீஸ் எல்லாம் நிறைய கொடுத்து, ஸ்கேனெல்லாம் எடுத்து பார்த்ததில் ஒன்றுமேயில்லை என சொல்லிவிட்டார்கள்.

அதற்கு பிறகு அண்ணி அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அங்கேயே இருந்தார். சந்தேகம் வந்து, போனமுறை ஊருக்கு சென்ற பொழுது, இந்த வீட்டில் ஏதும் பிரச்சனை இல்லையே! என்றேன். இந்த வீட்டில் ‘முனி’ இருக்கிறது என்றார். எப்படி? என்றதற்கு, உங்க அண்ணிக்கு உடல் நலம் சரியில்லை என்றதும், மூன்று ஜாதக்காரர்களை பார்த்துவிட்டேன். மூவருமே முனி இருக்கிறது என்கிறார்கள். நான் ஜாதகம் பார்த்த மறுநாள் இந்த வீட்டின் உரிமையாளர் ‘இந்த வீட்டில் ஒரு தெய்வம் இருக்கிறது! செவ்வாய், வெள்ளியில் விளக்கு போடுங்கள்!” என சொல்லிவிட்டு சென்றார்.

இந்த வீட்டையும் காலி செய்ய போகிறீர்களா? என்றேன். மூன்று அறைகளில் பின்னாடி உள்ள அறையில் சமைக்கிறோம். அங்கு சமைக்கவேண்டாம். முன் அறையில் சமையுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். அதை செய்ய போகிறேன் என்றேன்.

இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டே தூங்கிப்போனேன். கனவில் முனியும், பேயும் கடுமையான சண்டை போட்டார்கள். யார் ஜெயிப்பார்கள் என வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த பொழுது, அலாரம் அடித்து பகீரென்று எழுந்தேன். கும்மிருட்டு. விடிகாலை 6.30க்கு வைகை என்பதால், 4.30 மணிக்கு எழ நான் தான் அலாரம் வைத்திருந்தேன்.

சமையல் கட்டு அறையில் தான் குளியலறையும் இருந்தது. குளிக்கும் பொழுது, முனி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக ஒரு பிரமை வந்தது. வெட்கம் வந்தது.

பேய்களுடனும் முனிகளின் நினைவுகளுடனும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

சார் 2 நிமிடங்கள் - ‍ குறும்படம்

கால அளவு : 6 நிமிடங்கள்

கதை. பத்தி விற்கும் மனிதர் 2 நிமிடம் சொல்வதை கேட்க கெஞ்சுகிறார். அது ஒரு தொடராக நீள்கிறது. மீண்டும் பத்தி விற்பவரிடமே வந்து முடிகிறது.

***

மனிதர்கள் சக மனிதர்களை சார்ந்துதான் வாழ்கிறார்கள். 2 நிமிடம் நின்று கேட்பதற்கு கூட நேரம் ஒதுக்கமுடியாமல், வாழ்வின் தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை நின்று கேட்டால், பையில் எஞ்சி இருக்கும் பணத்திற்கும் ஆபத்துவந்துவிடும் என்ற பதட்டம் தான்!

மனிதர்களின் துயரை சொல்லும் குறும்படம். நிறைய விருதுகளை வென்றிருக்கிறது. நகைச்சுவை வகையில் சேர்த்திருப்பது பார்ப்பவர்களின் 6 நிமிடங்களை ஈர்க்கத்தான்! இதுவும் துயரம் தான்.