> குருத்து: பூவே பூச்சூடவா (1985) - சில குறிப்புகள்

May 27, 2021

பூவே பூச்சூடவா (1985) - சில குறிப்புகள்


“ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்

நீயும் நெய்யாக வந்தாய்!
இந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.!
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்”

ஞாயிறன்று கே அலைவரிசையில் ”பூவே பூச்சூடவா” போட்டார்கள். எந்த காட்சியில் இருந்து பார்த்தாலும், அப்படியே நம்மை உள்ளிழுத்து இறுதிவரை பார்க்க செய்கிற படங்களில் இதுவும் ஒன்று. பாட்டிக்கும் பேத்திக்குமான உறவை இயல்பாய், அடர்த்தியாய் சொன்ன படம். பலமுறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம். இன்றைக்கும் சில இரவுகளில் “பூவே பூச்சூடவா” பாடல் எங்களை தாலாட்டுகிறது. பூங்காவனத்தம்மாளும், சுந்தரியும் நினைவில் வந்து போவார்கள்.

படம் குறித்து தேடும் பொழுது, மலையாளத்தில் தான் பாசில் இயக்கத்தில் “நோக்கத்த தூரத்து கண்ணும் கூட்டு” என முதலில் 1984ல் எடுக்கப்பட்டிருக்கிறது, அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்று, படம் கேரள அரசு விருதையும், நதியா பிலிம்பேர் விருதையும் வென்றிருக்கிறார். நதியாவிற்கு முதல்படம். எஸ்விசேகர் பாத்திரத்தில் மோகன்லால். இன்னும் சில பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். முக்கிய விசயம். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு, ’பப்பியம்மா’ என செல்லமாய் அழைக்கப்படுகிற பத்மினியம்மாள் குஞ்ஞினும்மா தாமஸ் (Kunjoonjamma Thomas) என்ற கிருத்துவ மதம் சார்ந்தவராக அங்கு வருகிறார். வீட்டில் இருக்கும் பொழுது நைட்டியில் இன்னும் இயல்பாக வருகிறார்.

தமிழில் பிசிஸ்ரீராம் ஒளிப்பதிவில், இளையராஜாவும் சேர படம் களைகட்டியிருக்கிறது. தமிழிலும் மிகப்பெரிய வெற்றி. தமிழில் பூங்காவனத்தம்மாளாக பத்மினியும், தமிழிலும் முதல்முறையாக நதியா அறிமுகமாகி சுந்தரியாக வாழ்ந்திருக்கிறர்கள். பாசில் படங்களில் வெளிப்படும் கொஞ்சம் மலையாள வாடை இந்தப் படத்திலும் அடிக்கும். இந்த படம் வெளியான சமயத்தில் தான், ரேவதிக்கு மெளனராகம் வெளிவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த படத்தில் நதியாவை விட ரேவதியை நடிக்க வைத்திருந்தால், இன்னும் அருமையாக வந்திருக்கும் என இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் படித்த பொழுது புன்னகைதான் வந்தது.

தமிழில் கிடைத்த வெற்றியில், தெலுங்கு பக்கமும் பயணித்திருக்கிறது. Muddula Manavaraalu ல் சுகாசினி நடித்திருக்கிறார். பத்மினி பாத்திரத்தில் பானுமதி அம்மா நடித்திருக்கிறார். தமிழில் பூங்காவனத்தம்மாளுக்கும் (மகள்) மருமகன் உறவில் உள்ள முரணை போகிற போக்கில் வார்த்தையில் சொல்லியிருப்பார்கள். அதை கொஞ்சம் சொல்லியிருக்கலாம் என்று கூட படம் பார்க்கையில் தோன்றியது. தெலுங்கில் சரத்பாபு, ஜெயசுதாவை வைத்து அந்த முரணை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றதா என தெரியவில்லை.

படம் பற்றி யோசித்தால், பாட்டி, பேத்தி உறவை அழகாய் சொல்லியப்படம் என்றாலும், சிங்கிள் பேரண்ட் தனது பிள்ளையின் மீது வைத்திருக்கும் அளப்பரிய பொசசிவ்வான அன்பை புரிந்துகொள்ளும் படமாகவும் புரிந்துகொள்ளமுடியும்.

படத்தின் இறுதிக்காட்சியில் பூங்காவனத்தம்மாள் தன் பேத்தி நலம் பெற்று வருவாள் என்ற நம்பிக்கையில், அந்த அழைப்பு மணியை மீண்டும் தனது வீட்டு சுவரில் வெளியே மாட்டுவார். நாமும் மனதிற்குள் அந்த மணியை நம்பிக்கையாய் மாட்டிக்கொள்கிறோம் ”இது போல உறவுகளின் அடர்த்தியை சொல்லும் படம் விரைவில் வரும் என!”

0 பின்னூட்டங்கள்: