> குருத்து: Time to Kill (1996) Court Drama Film

May 27, 2021

Time to Kill (1996) Court Drama Film


கதை. இரு வெள்ளையின இளைஞர்கள் ஒரு பத்து வயது கருப்பினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். தொழிலாளியான அந்த சிறுமியின் தந்தை கோபத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழுது பலர் முன்னிலையில் அந்த இருவரையும் சுட்டுக்கொல்கிறார். உடன் அழைத்துவந்த போலீசின் காலில் தவறுதலாக சுட்டதில் அவருக்கு ஒரு காலை எடுக்க வேண்டியதாகிறது.


தொழிலாளி கைதுசெய்யப்படுகிறார். அவருக்காக அவருக்கு பழக்கமான நாயகனான வெள்ளையின வழக்கறிஞர் ஆஜராகிறார். ”தூக்கில் போடு!” என வெள்ளையினத்தை சேர்ந்த ஆட்கள் நீதிமன்ற வாசலில் முழக்கம் போடுகிறார்கள். தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ‘விடுதலை செய்’ என கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் போராடுகிறார்கள்.

வழக்கறிஞர் அந்த வழக்கை கைவிட மிரட்டுகிறார்கள். மறுக்கிறார். வீட்டிற்கு முன் ஒரு சிலுவையை கொளுத்திப்போடுகிறார்கள். அவருடைய பெண் உதவியாளர் வீடு புகுந்து அவருடைய கணவரை மோசமாக தாக்குகிறார்கள். வழக்கறிஞரின் வீட்டை கொளுத்துகிறார்கள்.

முக்கியமான வழக்கு என்பதால், மனிதன் படத்தில் பிரகாஷ்ராஜ் போல ஒரு பிரபல வழக்கறிஞர் எதிர்தரப்புக்கு ஆஜராகிறார். நீதிமன்றத்தில் வாத பிரதி வாதம் தொடங்குகிறது.

அந்த தொழிலாளிக்கு மரண தண்டனை கிடைத்ததா? விடுதலையானாரா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

ஒரு நீதிமன்ற வழக்கு படம் இத்தனை விறுவிறுப்பாக இதற்கு முன்பு பார்த்ததில்லை. 1989ல் John Grisham நாவலாக எழுதி புகழ்பெற்று, 1996ல் படமாக்கி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே பார்க்கவேண்டும் என தேடி கிடைக்காமல் இப்பொழுது தான் கிடைத்தது.

படம் நடக்கிற பகுதி அமெரிக்காவின் தென்பகுதி மாநிலமான மிஸ்ஸிஸிப்பி மாநிலம். அமெரிக்காவின் வட பகுதியை விட தென் பகுதிகளில் இன வெறி இன்று வரைக்கும் அதிகம். Green Book படம் பார்த்தவர்கள் அதை உணரலாம்.
அமெரிக்காவில் இனவெறி நம்மூரில் உள்ள சாதிவெறிக்கு ஒப்பிடலாம். ஜனநாயக உணர்வுள்ள வெள்ளையினத்தை சேர்ந்த வழக்கறிஞர் நியாயத்தின் பக்கம் நிற்கிறார். அதைத்தான் வெள்ளையின வெறியர்களால் தாங்க முடியாது. அவருக்கு அவ்வளவு தொல்லைகள் கொடுப்பார்கள். இருப்பினும் உறுதியாக நிற்பார்.

ஒரு கட்டத்தில் வழக்கில் தோற்றுப்போவோம் என்ற நம்பிக்கையற்ற நிலையில் அந்த கருப்பின தொழிலாளி “என்ன இருந்தாலும் நீ வெள்ளையினத்தை சேர்ந்தவன் தானே! உன் பிள்ளையும் என்பிள்ளையும் சேர்ந்து விளையாடுவது சாத்தியப்படுமா?” என்பார். கடுமையாக ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் கண்ணோட்டம்.. வழக்கறிஞர் அந்த சமயத்தில் கோபப்பட்டாலும் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வார்.

கால் இழந்த வெள்ளை போலீஸ் அதிகாரியும் சாட்சி சொல்லும் பொழுது, தொழிலாளிக்கு ஆதரவாக பேசுவார். ”காரணம் எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு” என்பார். இப்படி தன்னை போல மற்றவர்களையும் நினைக்கிற ஜனநாயக உணர்வு கொண்டோர் தான் இந்த இனவெறியை சாய்க்க முடியும்.

அது போல தான் பிறப்பால் ஆதிக்க சாதியினத்தை சார்ந்த சாதி மறுப்பாளர்கள், முற்போக்காளர்கள் ஜனநாயக உணர்வு கொண்டோர்கள் ஒடுக்கப்பட்டவர்களுடன் ஒன்று சேர்ந்து போராடும் பொழுது தான் சாதி வெறியையையும் ஒழிக்கமுடியும். சாதியையும் ஒழிப்பதற்கான வேலைகளை செய்யமுடியும். களத்தில் சாதியைப் பிரச்சனையை எதிர்கொள்பவர்களால் இதை புரிந்துகொள்ளமுடியும்.

படத்தில் எல்லா பாத்திரங்களும் நன்றாக செய்திருப்பார்கள். பல விருதுகளையும் பெற்றபடம்.. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: