கொரானா இரண்டாவது அலையில், பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது, எரிந்து கொண்டிருக்கும் வயிறுகள் கண்டுகொள்ளப்படவில்லை.
தில்லியில் உள்ள ஒரு பகுதி ரேசன் கடையில் மக்கள் வந்து பொருட்களை கேட்டு செல்வதும், கடை அலுவலர் இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தில்லியில் அந்த பகுதியில் உள்ள மொத்தம் 110 ரேசன் கடைகளில் மே 15 முதல் மே 20 வரைக்கும் 44 கடைகளில் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்தார்கள். மீதிக்கடைகளில் இன்னும் ஏதும் விநியோகிக்கவில்லை. மாதத்தின் முதல் வாரத்திலேயே விநியோகித்துவிடுவது வழக்கம். ஆனால், இன்னும் விநியோகிக்காததற்கு காரணம் மாநில ரேசன் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மத்திய அரசு தரும் ரேசன் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை. மாநில பொருட்களுக்கு ஒருமுறையும், மத்திய அரசின் பொருட்களுக்கு ஒரு முறையும் இரண்டாவது அலையின் கடும் நெருக்கடியில் இருமுறை கொடுக்க முடியாது அல்லவா! ஆகையால் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒன் நேஷன். ஒன் ரேசன் கார்டு திட்டம் இன்னும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவில்லை என்பது தனியாக எழுதவேண்டிய விசயம்.
கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவுக்கே வழியில்லாமல் நடந்தே பல லட்சம் பேர் நடந்தே சொந்த ஊர் போய் சேர்ந்தார்கள். இந்த பயணத்தில் பசியிலும், பட்டினியிலும், கொடுமையான வெய்யிலிலும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செத்துபோனார்கள். அந்த அனுவத்தில் இந்த முறை சுதாரித்து ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். ஆகையால் பல வீடுகள் இப்பொழுது பூட்டிக்கிடக்கின்றன. ஆனால் சிலரால் அப்படி கிளம்ப முடியவில்லை. ”ஊருக்கு போனாலும் அங்கும் சாப்பிடுவதற்கு பணம் வேண்டுமே! தில்லியில் உள்ள வீட்டிற்கும் வாடகை கொடுக்கவேண்டுமே!” என்பது தான் காரணம்.
இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லை. அப்படி அறிவித்தால், மாநில அரசுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமே! ஆகையால் மத்திய அரசு அந்த பொறுப்பிலிருந்து கழன்று கொண்டது. ஆனால், மாநில அரசுகள் நிலவரத்தின் தீவிரத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கின்றன. தில்லியில் ஐந்தாவது வாரம் ஊரடங்கு தொடர்கிறது. மும்பையில் ஆறாவது வாரம். கொல்கத்தாவில் மூன்றாவது வாரம். சென்னையில் இரண்டாவது வாரம்.
தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. சிறு சிறு நிறுவனங்களிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களையும் மக்களின் உயிர்களை காக்க அரசு எடுத்துக்கொண்டு போய்விட்டது. அவர்களுக்கு வருமானத்திற்கு மாற்று வழிகள் இல்லை.
கடந்த ஆண்டாவது பெண்களின் கணக்கில் அரசு ரூ. 500 போட்டது. தொழிலாளர்களுக்கு சில திட்டங்களை அறிவித்தது. இந்த ஆண்டு இதுவரை எதையும் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழக அரசு நான்காயிரம் நிவாரண நிதியாக தருவதாக அறிவித்ததில் முதல் தவணையாக மே மாதம் ரூ. 2000 ரேசன் அட்டைதாரர்களுக்கு தந்திருக்கிறார்கள். இதெல்லாம் ரேசன் அட்டைதாரர்களுக்கானது! ரேசன் அட்டை இல்லாதவர்களும் இங்கு ஒவ்வொரு பகுதியிலும் லட்சங்களில் உண்டு. அவர்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது?
சென்னையில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதித்து இருக்கிறார்கள். அத்தியாவசிய தொழிற்சாலைகள் திறக்க அனுமதித்திருக்கிறார்கள். பொதுப்போக்குவரத்து இல்லை. வாடகை, மருத்துவம் என அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?
கடந்த அலையின் பொழுது சிவில் சமூகம் தன் சக்திக்குட்பட்டு உணவு தந்து, பொருட்கள் தந்து ஏதுமற்றவர்களை காப்பாற்றியது. இந்த அலை கடந்த அலையை விட தாக்கம் பெரிது. சிவில் சமூகமும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. இப்பொழுது தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஊரடங்கு காலத்திலாவது மக்கள் சிலரிடம் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. இப்பொழுது கடனை வாங்கி வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
அசிம்பிரேம்ஜியின் பல்கலை கழகம் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்ததில் மக்கள் வருமான இழப்பால் தங்கள் சாப்பிடும் அளவும், சத்தின் அளவும் குறைந்திருக்கிறது. 230 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றிருக்கிறார்கள். முறைசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பாதிபேர் முறைசார் தொழிலாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். வருமான இழப்பு, வாழும் முறை எல்லாம் மாறியிருக்கிறது.
மும்பையில் முன்பு ஒரு அறையை பகிர்ந்துகொண்டு வாழ்ந்த ஒருவர், இப்பொழுது அறை வாடகை கொடுக்கமுடியாமல் இப்பொழுது தெருவில் தூங்குகிறார். கடலில் குளிக்கிறார்.
இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்காக மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 பணமாக கொடுக்கப்படவேண்டும் எனவும் அசிம்பிரேம்ஜி பல்கலை கழக ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் இந்த அவல நிலையை மத்திய அரசு புரிந்துகொண்டு நடக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுவதும் குறுக்கும் நெருக்குமாய் மக்கள் அலைந்த பொழுதே கண்டுகொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காக மட்டுமே சிந்திக்கும் நம் பிரதமர் இதையெல்லாம் கண்டுகொள்வாரா?
தொழிலாளி வர்க்கம் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். வறுமையில் சாவதா? உரிமைகளுக்காக போராடுவதா என!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment