> குருத்து: The Court - மராத்தி (2014)

May 27, 2021

The Court - மராத்தி (2014)


தலித்துகளின் வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதில் செத்துப் போகலாம் என மனம் கொதித்து பாடல் எழுதி மேடைகளில் பாடுகிறார் ஒரு நாட்டுப்புற பாடகர். தலித்துகள் மத்தியில் எழுச்சி வந்துவிடும் என பயந்து, “அவர் பாடியதால் ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்” ஆகையால் தற்கொலைக்கு தூண்டியதாக என ஒரு பொய்வழக்கை போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.


அந்த வழக்கை கையாளும் அரசு தரப்பு வழக்கறிஞர், பாடகரின் விடுதலைக்காக போராடும் ஒரு வழக்கறிஞர், நீதிபதி, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அதன் இயல்புகளோடு காட்டுகிறார்கள். பிறகு அவர் விடுதலையானாரா என்பதை முழுப்படமும் விவரிக்கிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொரு முறை வழக்காடும் பொழுதும், சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி பெயில் கிடைக்காமல் செய்கிறார். அவர் தன் வேலையை ஒரு வழக்கமான அலுவல் வேலையாக பார்க்கிறாரே தவிர ஒரு மனிதன் வாழ்க்கை தன் கையில் உள்ளது என்ற பொறுப்புணர்ச்சி அவரிடம் சிறிதும் இல்லை.

பாடகரின் தரப்பு வழக்கறிஞர் பொறுமையாக போராடுகிறார். கோபப்பட்டோ அவசரப்பட்டோ ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அவர் கற்ற அனுபவம் அவருக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஒரு நீதிபதி பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. இந்த அரசின் ஒரு பகுதி தானே நீதிமன்றமும். அதுவும் நமது அடக்குமுறை சட்டங்கள் எல்லாம் காலனிய அரசின் பிரதிகளே. ஆகையால் அரசு தரப்பு என்ன விரும்புகிறதோ அதையே தீர்ப்பாக வழங்குகிறார். ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் கை இல்லாத (sleeveless) ஆடை உடுத்தி வந்தார் என, விதி அனுமதிக்காது என வழக்கை இன்னொரு தேதிக்கு மாற்றி வைக்கிறார்.

சாக்கடை அள்ளும் தொழிலாளியாக பணிபுரியும் ஒருவருக்கு தற்காப்புக் கவசங்களோ, தேவையான கருவிகளோ அரசு தருவதில்லை என வழக்கு விசாரணையில் வரும். அதைப் பற்றி நீதிபதியோ, அரசு தரப்பு வழக்கறிஞரோ கண்டுகொள்ளவோ, கவலைப்படவோ மாட்டார்கள். நம்நாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிற மனநிலையை தான் வெளிப்படுத்துவார்கள்.

இறந்தவரின் மனைவியை விசாரிக்கும் பொழுது, தன் கணவர் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள தினமும் குடித்துவிட்டு தான் சாக்கடைக்குள் இறங்குவார் என சர்வ சாதாரணமாக சொல்வார். முகத்தில் துயரத்தின் சாயலே இல்லாமல் இயந்திரத் தன்மையுடன், தனது கணவரின் வாழ்க்கையையும், விபத்தையும் விவரிக்கும் பொழுது துயரின் தாக்கத்தை நம்மால் நன்றாக உணரமுடியும்.

ஒரு ஆவணப்படம் போல படம் நகருகிறது. பாடகர் மீது குற்றம் இல்லை என நிரூபித்து பெயில் வாங்கவே பல மாதங்கள் ஆகின்றன என்ற நீதிமன்றத்தின் மெத்தன இயல்பு தன்மையே நம்மை பதட்டம்கொள்ள வைக்கிறது. கோபம் கொள்ளவைக்கிறது.

இது மகாராஷ்டிரத்தின் ஒரு நீதிமன்றத்தின் நடவடிக்கை அல்ல! நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் கதை. உலகம் இரண்டாக இயங்குகிறது. இதில் முதல் உலகத்தை சேர்ந்தவர்கள் பணம் படைத்தவர்கள்; அதிகார வர்க்கங்களின் செல்வாக்கு படைத்தவர்கள்; ஆகையால் நீதிமன்றம் பெரும்பாலான சமயங்களில் அவர்களுக்கு சேவை செய்கிறது. இன்னொரு உலகத்தை சேர்ந்தவர்கள் ஏதுமற்றவர்கள்; ஒடுக்கப்பட்டவர்கள்; அவர்கள் தான் இந்திய சிறைகளில் நிரம்பி வழிகிறார்கள்; அவர்களுக்காக பாடுபடுவர்களும் இப்பொழுது சிறையில் வதைபடுகிறார்கள். போராட்டம் தவிர வேறும் ஏதும் குறுக்குவழிகள் இல்லை.

சமூக அக்கறை கொண்ட படம். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

0 பின்னூட்டங்கள்: