> குருத்து: Varane Avashyamund (மணமகன் தேவை) 2020 மலையாளம்

May 24, 2021

Varane Avashyamund (மணமகன் தேவை) 2020 மலையாளம்


கதை. ஒரு அபார்ட்மெண்ட். நாயகியும், அவளுடைய நடுத்தர வயது அம்மாவும் வசிக்கிறார்கள். நாயகிக்கு தொடர்ச்சியாக வரன் தேடுகிறார்கள். அம்மா பிரெஞ்ச் கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறார்.


இன்னொரு வீட்டில் இராணுவ மேஜர் ஒருவர் நடுத்தர வயதில் குடிவருகிறார். அவருக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை. அவருக்கு முன்கோபம் அதிகம். அதற்காக மருத்துவம் பார்த்து வருகிறார்.

இன்னொரு வீட்டில் நாயகன், தன் தம்பியுடனும், பாட்டியுடனும் வசித்து வருகிறார். நாயகனின் பள்ளி காலத்திலேயே அப்பா, அம்மாவும் ஒரு பைக் விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். வெளிநாட்டில் போய் செட்டிலாகவேண்டும் என்பது கனவு. அது நிறைவேறாதது என தெரிந்ததும், நாயகனை விட்டு விலகுகிறார்.

இதில் நடுத்தர வயது அம்மாவும், மேஜரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள். இதனால், மகளுக்கு ஒரு வரன் அமையும் பொழுது தட்டிப்போய்விடுகிறது. அதனால், அம்மா மீது கோபம் கொள்கிறாள்.

பிறகு என்ன ஆனது என்பது கதை?

****

படம் தமிழில் வெளிவந்த “ஒரு நாள் கூத்து” படத்தை நினைவுப்படுத்தியது. இப்பொழுது திருமணங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. படத்தில் நாயகியே மேட்ரிமோனியல் தளத்தின் உதவியுடன், வரன்களை வரச்சொல்வதும், பேசுவதும், இயல்பாக காட்டியிருக்கிறார்கள். நடுத்தர வயது பெண் இயல்பாய் காதல் கொள்வதும், அதை பெரிய சிக்கல் இல்லாமல், இறுதியில் மகள் அதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதும் அழகு. படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் துல்ஹர் தான். தனக்கென முக்கியத்துவம் கொடுத்துக்கொள்ளாமல், கதைக்கு தேவையான பாத்திரத்திற்கு உள்ள தன்மையுடன் அடக்கத்துடன் வருவது அழகு. தமிழில் இந்த பாத்திரத்தை நாயகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மற்றபடி, ஷோபனா, ஊர்வசி, சுரேஷ்கோபி என நன்றாக பொருந்தியிருக்கிறார்கள். கல்யாணி பிரியதர்சன் இந்தப் படத்தில் தான் அறிமுகம். அவரும் அழகாக பொருந்தியிருக்கிறார்.

படத்தின் களம் சென்னையில் தான் நடக்கிறது. முக்கிய கதாப்பாத்திரங்கள் தவிர பலரும் தமிழ் பேசுகிறார்கள். பார்த்தே ஆக வேண்டிய படம் என சொல்லமாட்டேன். நிறைய நேரமிருந்தால், பாருங்கள்.

மற்றபடி, மிலிட்டரி வைத்திருக்கும் நாய் ஒன்றுக்கு பிரபாகரன் என பெயர் வைத்து அழைத்து, அது சர்ச்சையாகி துல்ஹர் மன்னிப்பு கேட்டதெல்லாம் தனிக்கதை.

0 பின்னூட்டங்கள்: