கதை. நாயகன் ஒரு தீயணைப்புவீரன். தீப்பற்றி எரியும் ஒரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்ற மாடியில் இருந்து குதிக்கிறான். கயிற்றில் தீப்பற்றியதால் கயிறு அறுந்து அடிபட்டு இறந்துவிடுகிறான்.
இறந்த பிறகான இன்னொரு உலகத்திற்கு அவன் உயிரை எடுத்துச் செல்ல இரண்டு ஆண் தேவதைகளும், ஒரு சிறுமி தேவதையும் அவனை அழைத்து செல்கிறார்கள். தான் செத்துவிட்டதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செய்யவேண்டிய கடமைகள் அவனை அழுத்துகின்றன. அம்மாவை கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என கதறி அழுகிறான்.
கொலை, வன்முறை, பக்தி, கொலை, சகிப்புத்தன்மை, வஞ்சகம், அநீதி என ஏழு நீதிமன்றங்களில் அந்தந்த கடவுளின் முன்பு அவன் வாழ்வில் நடந்துகொண்ட விதம் குறித்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. அந்த மூன்று தேவதைகளும் அவனை காப்பாற்ற அவனுக்காக வாதாடுகிறார்கள்.
இதில் எந்த நீதிமன்றத்திலாவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவன் வதைக்கப்படுவான். கொல்லப்படுவான். ஏழு நிலைகளில் தேறிவிட்டால் அவனுக்கு மறுபிறவி உண்டு என்கிறார்கள்.
தேறினானா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****
தெலுங்கில் இப்படி சொர்க்கம், நரகம் என அவ்வப்பொழுது நகைச்சுவையாகவும், பேண்டசியாகவும் படம் எடுப்பார்கள். அது போல புத்த மதம் சொல்லக்கூடிய கருத்துகளை கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வாத பிரதிவாதம் சுருக்கமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. உணர்வுபூர்வமாகவும் படத்தை கொண்டு செல்கிறது.
நமக்கு என்ன கேள்வி என்றால்?
மதம் வாழும் வரை ஒரு உலகம். வாழ்ந்த பிறகு ஒரு உலகம் என இரண்டாக பிரிக்கிறது. இயல்பில் வாழும் பொழுதே இங்கு உலகம் இரண்டாக தான் இயங்குகிறது. ஒரு குறிப்பிட்ட சொற்ப பிரிவினர்களுக்கு முன்னூறு நானூறு தலைமுறைக்கு முரட்டு சொத்து இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு உழைத்தால் தான் அடுத்த வேளை உணவு என்ற நிலை இருக்கிறது.
இதற்கு காரணம். இங்கு எல்லா மக்களும் சேர்ந்து உழைக்கிறோம். அதன் லாப பங்கீடு மட்டும் அராஜகமாக இருக்கிறது. இதன் விளைவு தானே உலகம் இங்கு இரண்டாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஐம்பது பெரும் பணக்காரர்களின் சொத்தை பகிர்ந்தளித்தாலே, கல்வி, மருத்துவம், இருக்க இடம் என அடிப்படை தேவைகள் அத்தனையையும் செய்துவிடலாம் என அடித்து சொல்கிறார்கள்.
மதங்கள் முதல் உலகத்தின் பஞ்சாயத்துகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், இரண்டாம் உலகத்தை காட்டியே பெரும்பாலான மக்களை மயக்கத்தில் வைத்திருக்கிறது. மதம் உடைமை வைத்திருக்கும் சொற்ப பிரிவினர்களுக்கு சேவையும், பெரும்பாலான மக்களுக்கு அநீதியும் இழைக்கிறது.
ஆக, வாழும் வரை நரகம். செத்தப் பிறகு சொர்க்கம் கிடைப்பதில் என்ன பிரயோஜனம்? வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை படைப்போம் என்பது தான் சரியானது. அதற்காக சிந்திப்போம். செயல்படுவோம் என்பது தான் சரியானது.
மற்றபடி நல்ல படம். பாருங்கள். நெட் பிளிக்சில் கிடைக்கிறது. இந்த படத்தின் வெற்றியில் இரண்டாவது பாகமும் எடுத்திருக்கிறார்கள். பார்த்த ஒருவர் அதை சுமார் என்கிறார்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment