வழக்கறிஞர் ஸ்ரீஜா மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்னெடுக்கும் மக்கள் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். அவருடைய சகோதரிக்கு திருமணம் என அழைப்பு விடுத்திருந்தார். மணமக்களுக்கு பரிசளிக்க மூன்று புத்தகங்களுடன் நானும் என் பொண்ணும் போயிருந்தோம்.
திருமணம் சில ஆச்சரியங்களை எங்களுக்காக வைத்திருந்தது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் காதல் இணைத்திருக்கிறது. இருவரும் வேறு வேறு சாதி. இருவரும் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால், தாலியை தவிர்த்துவிட்டார்கள். வரதட்சணை இல்லை. சடங்குகள் அற்று சீர்த்திருத்த திருமணமாக நடைபெற்றது ஆச்சர்யம்.
பெண்ணின் கல்லூரி ஆசிரியரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலரும் வாழ்த்திப்பேசினார்கள்.
மணமக்கள் இருவரும் தனித்தனியாக ”இன்னாரின் மகன்/மகளை மனம் உவந்து ஏற்கிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி களைந்துகொள்வோம். பிற்போக்குதனம் இல்லாமல் வாழ்வோம். சுயநலம் இன்றி, பொது நலம் பேணி வாழ்வோம். பிள்ளைகளை சமூக பொறுப்புடன் வளர்க்க உறுதி ஏற்கிறோம்” என அறிவித்தார்கள். வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்கள்.
பெற்றோர்கள் மாலை எடுத்து தர, இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். கீழிருந்து உறவினர்களும், நண்பர்களும் கைத்தட்டி உற்சாகப்படுத்த திருமணம் இனிதே முடிந்தது.
காதலும், சமூக உணர்வும் தான் இப்படிப்பட்ட திருமணங்களுக்கு அடிப்படை. இப்படிப்பட்ட சீர்த்திருத்த திருமணங்களை தான் பா.ஜனதா வெறுக்கிறது. ஒற்றுமையாய் வாழும் மக்களிடையே வெறுப்பு அரசியலை பரப்பி, அதில் குளிர்காய்கிறது.
****
மாணவிகள் உள்ள வகுப்பறைக்குள் நான் நுழைந்த பொழுது ஒரு பெண் இன்னொரு பெண்ணின் தலையை சீவிக்கொண்டிருந்தார்.
பேராசிரியராக நான் நுழைந்த பிறகு கூட, அவர்கள் வேறு திசையில் திரும்பியிருந்ததால், என்னை கவனிக்கவில்லை. நான் உடனே சத்தம் போட்டு "இதென்ன வகுப்பறையா? உங்க வீடா?" என திட்டவில்லை. "வெளியே போங்கள்!" என சொல்லவும் இல்லை.
அவர்களை அழைத்து….
"இந்த கூந்தல் தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது. துவக்கத்தில் ஆணும், பெண்ணும் இருவருமே கூந்தல் வைத்திருந்தார்கள். சமூகம் நவீனம் ஆக ஆக, ஆண்கள் தங்களது கூந்தலை வெட்டிவிட்டனர். பெண்ணுக்கு கூந்தல் அழகு என புகழ்ந்து புகழ்ந்து அடிமைப்படுத்தினார்கள்.
உயிரினங்களில் சேவல் சோம்பேறி. ஆனால் கொண்டையோடு இருக்கும். கோழியோ நல்ல உழைப்பாளி. சிங்கங்களில் கூட பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். பிடரியோடு இருக்கிற ஆண் சிங்கம் சோம்பேறி. வெட்கமில்லாமல் பிடுங்கித் தின்னும். இப்படி எல்லா உயிரிங்களையும் பாருங்கள். மனித இனத்திலும் பெண்கள் கடுமையான உழைப்பாளி. வெளியே போய் வெளியே வேலை செய்து, வீட்டிலும் கடுமையான வேலை செய்கிறாள்.
ஆகையால், பெண் அழகு. கூந்தல் அழகு என சொல்லி சொல்லித்தான் ஆண் பெண்களை அடிமைப்படுத்தினான். இதையெல்லாம் பெண்கள் என்றைக்கு விடுகிறீர்களோ அப்பொழுது தான் விடுதலைக்கான வழிபிறக்கும்” என பொறுமையாக விளக்கினேன்.
வேறு ஏதும் அந்த பெண்கள் சொல்லவில்லை. அமைதியாய் கேட்டுக்கொண்டார்கள்.
அடுத்த நாள் காலையில் கூந்தலை முழுவதும் வகுப்புக்கு சென்றேன்.
அந்த பெண்னிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அவளே புரிந்துகொண்டு சொன்னாள். ”கூந்தலை வெட்டிட்டேன் சார். இப்ப சரியா இருக்கிறேனே?” என கேட்டாள். என்னால் நம்ப முடியவேயில்லை.
அந்த பெண் வேறு யாருமில்லை. சாதி மறுத்து, சடங்குகள் மறுத்து திருமணம் செய்திருக்கிற இந்தப் பெண் தான்! இன்னும் சமூக உணர்வுடன் பயணிக்கவேண்டும். மென்மேலும் வளரவேண்டும். மணமக்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment