இந்தியா மாதிரி தேசத்தில் புத்தகம் வாசிப்பது ஒரு Luxury. புத்தகம் வாங்க பணம் இருக்கணும் அல்லது பொறுமையாக உட்கார்ந்து வாசிக்க நேரம் இருக்கணும். படிப்பதற்கு ஏற்ற வாழ்விடம் இருக்கணும். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அன்றாட உணவுக்காகவும் பிழைப்புக்காகவும் தினமும் 12 மணிநேர உடல் உழைப்பை கொட்டுகிறவருக்கு உழைப்பு சுரண்டல் சகஜமாகிவிட்ட நாட்டில் வாசிப்பெல்லாம் கூடுதல் உழைப்புதான்.
இவை இரண்டையும் தாண்டி உழைத்து உழைத்து சோர்ந்து போகாமல் உடலில் வாசிப்பதற்கான அயர்வு இல்லாமல் இருக்கணும். அதனாலேயே தமிழ்நாட்டில் வாசிப்பு பழக்கம் என்பது குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே வாய்க்கிற ஒன்றாக இருந்திருக்கிறது. அதனாலேயே பலருக்கும் அது இன்னமும் எட்டாக்கனிதான். அதனாலேயே நிறைய புத்தகம் வாசிப்பதை குறிப்பாக அதிக உழைப்பை கோருகிற இலக்கியங்களை வாசிப்பதை இயற்றுவதை பெருமையாக சொல்லிக்கொள்வதை மேட்டுக்குடித்தனமாகவே பார்க்கிறேன்.
தன்னை அறிவுரீதியாக உயர்ந்த இனமாக காட்டிக்கொள்ளவே பலருக்கும் வாசிப்பு பயன்படுகிறது. அதனாலேயே புத்தகம் வாசிக்கிறவர்கள் எல்லாம் மேன்மையானவர்கள் வாசிக்காதவர்கள் எல்லாம் கீழ்மையானவர்கள் என்கிற கருத்துகளை வெறுக்கிறேன்.
எல்லா பழக்கங்களையும் போலவேதான் புத்தகவாசிப்பும். யார் வாசிக்கிறார்கள் எதை வாசிக்கிறார்கள் என்பதை பொறுத்தே அது பலன்தருகிறது. அனேகம் நூல்களை படித்து குவித்துவிட்டு இன்னமும் சனாதனத்திற்கும் மதவெறிக்கும் பாஸிஸத்திற்கும் ஆதரவாக நிற்கிற எத்தனையோ பேரை அன்றாடம் பார்க்கிறோம். எதுவுமே வாசிக்காமல் தான் எடுக்கிற எல்லா முடிவுகளிலும் சகமனிதன் மீதான அக்கறையை கருணையை வெளிப்படுத்துகிற எத்தனையோ கோடி மனிதர்களையும் பார்க்கிறோம்.
உடற்பயிற்சி போல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போல வாசிப்புப்பழக்கமும் ஒரு நல்ல பழக்கம் அவ்வளவுதான். ஆனால் அது ஒன்றே மனிதனை மேன்மையானவனாக மாற்றிவிடாது. அதுவும் உதவும். நிறைய வாசிக்க வாசிக்க அறிவு மேம்படும். ஆனால் அடிப்படையான அற உணர்ச்சியை அடுத்தவர்களின் அனுபவங்களின் வழியிலான வாசிப்பு கொடுத்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
வாய்ப்புள்ளோர் நிறைய புத்தகங்கள் வாசியுங்கள். வாய்ப்பில்லாதோர் குற்றவுணர்வு கொள்ளத்தேவையில்லை.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment