> குருத்து: The Gangster, the Cop, the Devil (2019) தென்கொரியா

May 25, 2021

The Gangster, the Cop, the Devil (2019) தென்கொரியா

கதை. இரவு வேளைகளில் ஆள் அரவமற்ற சாலையில் தனியாக காரில் செல்லும் காரை பின்னாடியே போய் இடித்து, கீழே இறங்கி பேசும் பொழுது, சாகும்வரை கத்தியால் குத்தி கொல்வது அந்த சீரியல் கொலையாளியின் பாணி.


அப்படி ஒரு கொலை நடக்கிறது. வழக்கு குறித்து விவாதிக்கும் பொழுது, போலீசு அதிகாரி ஏற்கனவே வேறு பகுதிகளில் இதே பாணியில் கொலைகள் நடந்திருக்கிறது. ஆகையால் சீரியல் கொலையாளி என்கிறான். இவன் மீது வேறு ஒரு கடுப்பில் இருக்கும் உயரதிகாரியோ ’இதெல்லாம் உன் கற்பனை. நம்ம ஊர்ல சீரியல் கொலையாளியா? வாய்ப்பேயில்லை’ என தட்டிக்கழிக்கிறான்.

ஊரில் பிரபல கேங்கஸ்டரில் ஒருவனையே சீரியல் கொலையாளி கொல்ல முயல்கிறான். அவன் வலுவானவன் என்பதால், கொலையாளியிடமிருந்து பெருங்காயங்களுடன் தப்பிவிடுகிறான். வெளியே சொன்னால், தனது அந்தஸ்து பாதிக்கப்படும் என இந்த கொலை முயற்சியை போலீசிடம் சொல்லாமல் மறைக்கிறான்.

தனது துறையே ஒத்துழைக்க மறுக்கிறது. கொலையாளியைப் பார்த்த ஒரே சாட்சி கேங்க்ஸ்டர். அவனோடு தனியே ஒரு ஒப்பந்தம் போட்டு, இருவரும் பரஸ்பரம் தகவல் பரிமாறிக்கொண்டு கொலையாளியை தேடுகிறார்கள். பிறகு அந்த கொலையாளியை பிடித்தார்களா என்பதை பரபர என மீதி முக்கால்வாசிப் படத்தில் சொல்லிமுடிக்கிறார்கள்.
****

படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்கிறார்கள். போலீசு + கேங்க்ஸ்டர் தனது தொழிலை தொல்லை செய்யாமல் இருக்க கூட்டு என்பது வழக்கமாக எல்லா ஊரிலும் இருப்பது போல அங்கும் இருக்கிறது. படத்தில் இருவரும் கூட்டுச் சேர்ந்து கொலையாளியை தேடுவது தான் புதுசாக இருக்கிறது. ’என்னிடம் சிக்கினால் போட்டுத்தள்ளிவிடுவேன் என்கிறார் கேங்க்ஸ்டர். ’சட்டப்படி தான் தண்டிக்கவேண்டும்” என பிடிவாதமாய் இருக்கிறார் போலீசு அதிகாரி. பிடிச்சு ஒப்படைச்சா, பதவி உயர்வு, புகழ் என யோசிப்பது இயல்பு தானே!

’இதென்ன அமெரிக்கான்னு நினைச்சியான்னு!’ என ஒரு வசனம் உண்டு. அமெரிக்கா படுமோசம்னு கொரியாக்காரங்க நினைப்பாங்க போல!

படத்தில் நடித்த போலீசு அதிகாரி, கேங்க்ஸ்டர், சீரியல் கொலையாளி எல்லோருமே நன்றாக சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கம் முதல், இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது. ஆக்சன் திரில்லர் விரும்பி பார்ப்பவர்கள் பாருங்கள்.

அமேசானில் கிடைக்கிறது. கைவசம் நல்ல பிரிண்ட் இருக்கிறது. ஆங்கில சப் டைட்டில் தேடினால், 12 கிடைத்தது. ஆனால் எதுவும் பொருந்தவில்லை. வேறு வழியில்லாமல் சுமாரான பிரிண்டில் யூடியூப்பில் பார்த்தேன். பெரும்சோகம்.

0 பின்னூட்டங்கள்: