> குருத்து: My little Bride (2004) தென்கொரியா ‍ அருமையான படம்.

May 25, 2021

My little Bride (2004) தென்கொரியா ‍ அருமையான படம்.


கதை. தாத்தா தன்னுடைய இராணுவ நண்பனுடன் சம்பந்தம் செய்து தன் உறவினராக்க ஆசைப்படுகிறார். இருவருக்குமே பிறந்தது பையன்களாகி விட, அடுத்த தலைமுறையான இருவருடைய‌ பேரன், பேத்தியையாவது திருமணம் செய்துகொள்ளவேண்டும் அதுவும் தான் உயிருடன் இருக்கும் பொழுதே என அடம்பிடிக்கிறார்.

பேத்திக்கு 15 வயது. பள்ளியில் படிக்கிறாள். பேரன் கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கிறான். இருவருக்குமே சிறுவயதில் இருந்தே அறிமுகம். இருவருக்குமே இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்வதிலும் விருப்பமில்லை. ஒருத்தருக்கு மற்றவர் மீது விருப்பமுமில்லை. ஆகையால் இருவருமே மாட்டேன் என‌ அடம்பிடித்தாலும், தாத்தாவின் பிடிவாதம் ஜெயிக்கிறது. திருமணம் நடக்கிறது.
இருவருமே தங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்கள். அதனால் ஏகப்பட்ட குழப்பங்கள். திருப்பங்கள். படம் முழுவதும் ஏக கலாட்டா. பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துகொண்டார்களா? பிரிந்தார்களா என்பது மீதி முக்கால்வாசி கதை.
*****
தாத்தா செய்த கலாட்டாவில் இளம் வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். பெற்றோர்களுக்கு பெரிய சங்கடம். அந்த பெண் பள்ளி, கல்லூரி முடித்த பிறகு தான் மத்தது எல்லாம் என ஜாடை மாடையாக சொல்லிப்பார்க்கிறார்கள். அந்த பெண்ணோ "என்ன சொல்கிறீர்கள்?" என புரியாமல் கேட்கிறது. அவனிடம் சொன்னால், "கட்டாயம் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சிட்டீங்க! என் பொண்டாட்டி. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என கலாய்க்கிறான்.
நாயகி பள்ளியில் தன்னுடன் படிக்கும் சீனியர் விளையாட்டு வீரனை காதலிக்கிறாள். அவனும் விரும்புகிறான். இவளுக்கு திருமணம் முடிந்த விவரம் வகுப்பு தோழிக்கு தெரியும். ஒருமுறை அழுதுகொண்டே சொல்வாள். "உனக்கு கணவனும் இருக்கிறான். காதலனும் இருக்கிறான். எனக்கு தான் யாருமே இல்லை."

நாயகி சிறுமிதான். ஆகையால், அந்த பொண்ணு எது செய்தாலும் பிடித்துப்போய்விடுகிறது. அவனும் அருமையாக பொருந்தியிருக்கிறான்.

அயல்மொழி படங்கள் பல காலம் பார்த்து வந்தாலும், கொரிய படங்கள் நிறைய பார்த்தது கடந்த ஆண்டு ஊரடங்கில் தான். கணவன் மனைவி என்பதால் கொஞ்சம் விரசமாய் எடுக்க வாய்ப்பிருந்தாலும், எடுக்காமல் தவிர்த்துவிட்டார்கள். அதனாலேயே படம் அத்தனை பிடித்துவிட்டது. இனி கொரிய காதல் படங்களை தேடிப்பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

இந்த படம் இதற்கு முன்பு "my wife is 18" என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்கிறார்கள். அந்தப் படத்தை விட இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. கொரியாவில் பெண்ணுக்கு 15 வயதில் சட்டப் பூர்வமாக திருமணம் முடிக்க முடியாமா? என்ன? ஆச்சர்யமாய் இருக்கிறது.

படம் யூடியூப்பில் ஆங்கில சப்டைட்டில்களுடன் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: