> குருத்து: collateral (2004) ஆங்கிலம் – ஒரு நல்ல ஆக்சன் திரில்லர்

May 25, 2021

collateral (2004) ஆங்கிலம் – ஒரு நல்ல ஆக்சன் திரில்லர்


ஒரு நாள் இரவு நடக்கும் கதை. நாயகன் வாடகை கார் ஓட்டுனர். போக்குவரத்து நெரிசல் இல்லை; பதட்டம் இல்லை. கொஞ்சம் கூடுதலாக டிப்சும் கிடைக்கும். என இரவுகளில் மட்டும் ஓட்டுகிறான். அவனுக்கு ஒரு நல்ல கார் வாங்கி, சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது கனவு.


அன்றிரவு ஒரு டிப் டாப்பான மனிதர் காரில் ஏறுகிறார். ”ஒரு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக சில இடங்களுக்கு போகவேண்டும். மொத்தம் 600 டாலர். முன்பணமாக 300 டாலர் தருகிறேன்” என்கிறார்.. முதலில் மறுக்கும் நாயகன் பிறகு ஒப்புக்கொள்கிறார். முதல் இடத்திற்கு போய், அவர் போன சிறிது நேரத்தில் மாடியிலிருந்து ஜன்னலை உடைத்துக்கொண்டு காரில் பொத்தென ஒரு ஆள் வந்து விழுகிறான். பதட்டமடைந்து பார்த்தால், டிப்டாப் ஆசாமி கூலாக அந்த இடத்திற்கு வருகிறான். அப்பொழுது தான் புரிகிறது. அந்த ஆள் காசுக்கு கொல்லும் கொலைகாரன் என! (Hit Man).

பதட்டம் கூடி, "ஆளை விடுப்பா! காரை நீயே எடுத்துட்டு போ!" என சொன்னால், அவன் மாட்டிக்கொள்வான் என இவனையும் உடன் அழைக்கிறான். இரண்டாவது இடத்தில் இவனை காரில் கையை கட்டிப்போட்டு விட்டு, போகிறான். ஹாரன் அடித்து தூரத்தில் செல்லும் ஆட்களை உதவிக்கு கூப்பிட்டால், அவர்கள் வழிப்பறிக்காரர்கள் இவனிடமுள்ளதை திருடிக்கொண்டு போகிறார்கள். கொலைகாரன் அவர்கள் இருவரையும் சுட்டுக்கொல்கிறான்.

இதெல்லாம் துவக்க சில நிமிடங்கள் தான். ஒருபக்கம் போலீஸ் துரத்த, நாயகன் அந்த தேர்ந்த கொலைகாரனிடமிருந்து தப்பித்தானா என்பதை விறுவிறு என சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒரு சாதாரண மனிதன் ஒரு கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் கதை. அதை எடுத்த விதத்தில் கலக்குகிறார்கள். தொடர்ந்து ஆக்சன் காட்சிகள் மட்டுமில்லாமல், காட்சிகளிலும், வசனங்களிலும் ஈர்க்கிறார்கள்.

இயக்குநர் Michael Mann ஐ இந்த மாதிரி திரில்லர் படங்களில் தேர்ந்தவர் என பாராட்டுகிறார்கள். பல ஆக்சன் படங்களில் கலக்கிய டாம் க்ரூஸ் தான் இந்த படத்தில் கொலைகாரனாக வந்து துரத்தி துரத்திக் கொல்கிறார். கார் ஓட்டுனராக வரும் Jamie Foxx யும் நன்றாக பொருந்தியிருக்கிறார்.

படம் நன்றாக கல்லாவும் கட்டியிருக்கிறது. 2006ல் இதே படத்தைச் சுட்டு இந்தியில் The Killer என சுமாரான படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். யூடியூப்பிலும், அமேசானிலும் கிடைக்கிறது. பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: