> குருத்து: "திரையரங்கில் படம் பார்க்க மக்கள் வரவில்லை என்ற விவரம் பிரபல நடிகர்களுக்கு தெரியவில்லை!: - தயாரிப்பாளர் தேனப்பன்

May 25, 2021

"திரையரங்கில் படம் பார்க்க மக்கள் வரவில்லை என்ற விவரம் பிரபல நடிகர்களுக்கு தெரியவில்லை!: - தயாரிப்பாளர் தேனப்பன்


நேற்றிரவு தூக்கம் வராத நிலையில், டூரிங் டாக்கீஸில் தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி கண்ணில்பட்டது. பார்த்தேன். திரைத்துறை சார்ந்து பல விசயங்களை வெளிப்படையாக பேசுகிறார்.


திரைப்படம் குறித்த எந்த பிரமிப்பும் இல்லாமல் தான் திரைத்துறைக்குள் வந்தேன் என்கிறார். பத்தாவது வென்றிருக்காவிட்டால், வங்கியில் பியூன் வேலை கிடைத்திருக்கும். தப்பித்தவறி தேறியதால், என் பாதை மாறிவிட்டது என்கிறார்.

பணம் கையாள்வதில் உள்ள நேர்மையும், கறார் தன்மையும் தயாரிப்பாளர்களுக்கு நிறைய மிச்சப்படுத்தி கொடுத்ததால், மிகவும் பிடித்தமானவராக இருந்திருக்கிறார். ஆகையால், பல படங்களுக்கு தயாரிப்பு மேலாளராக இருந்திருக்கிறார். எந்த துறையிலும் நேர்மையாய் இருந்தால் வாழவைக்கும் என்பதை அழுத்தமாய் சொல்கிறார்.

கே.எஸ். ரவிக்குமாருக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார். அவருடைய பல படங்களுக்கு தயாரிப்பு மேலாளராக வேலை செய்திருக்கிறார். இதில் முக்கிய படங்கள் முத்து, படையப்பா.

கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இந்தியில் சாசி (Chachi) 420 துவங்கி, சில படங்கள் வேலை செய்ததின் மூலம், கமலுக்கு பிடித்தமானவராக இருந்திருக்கிறார். அவரை ”காதலா! காதலா!” மூலம் தயாரிப்பாளராக்கி, சம்பாதிக்க உதவியிருக்கிறார்.

அதற்கு பிறகு நிறைய படங்கள் தயாரித்திருக்கிறார். ஒவ்வொரு படமும் ஏழு கடல், ஏழு மலை தாண்டித்தான் வெளிவருகிறது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. அவருடைய அறை நண்பர் பாலா “நான் கடவுள்” படத்தின் மூலம் தொல்லை செய்திருக்கிறார். பிறகு பஞ்சாயத்து செய்து, படத்தை கைமாற்றிவிட்டு நட்டத்திலிருந்து தப்பித்திருக்கிறார்.

இதில் கேட்கவே கடுப்பாய் இருப்பது. ‘வல்லவன்’ படத்தின் பொழுது சிம்பு செய்த காரியங்கள். தயாரிப்பாளர் சங்கம் ஒற்றுமையாய் இருந்திருந்தால், சிம்புவை எப்பவோ வீட்டில் உட்கார வைத்திருப்பார்கள் என்று மட்டும் தெரிகிறது.

தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இப்பொழுது ஐந்து சங்கங்களாக சிதறி கிடக்கிறது என வருத்தப்படுகிறார். அந்த சங்கங்களில் ஓட்டு கட்சிகள் செல்வாக்கு செலுத்துகிறது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிறைய பணம் விளையாடுகிறது. பொறுப்பில் இருந்துகொண்டு, திரைத்துறைக்கு ஏதும் நல்லது செய்ய முடியாது. தங்கள் பிரச்சனையை சரிசெய்துகொள்கிறார்கள் என்கிறார்.

திரையில் இருக்கும் பிரபல நடிகர்கள் தான் அடுத்தப் படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார்? என தீர்மானிக்கிறார்கள் என்கிறார். நாமாக போய் யாரிடமும் கேட்கமுடியாத நிலை இப்பொழுது என்கிறார்.

திரையரங்கு நுழைவுக்கட்டணம், தின்பண்டங்கள், காபி, பார்க்கிங் என எல்லாம் மிக அதிகமாயிருக்கிறது. இதைக் குறைக்காமல் மக்கள் திரையரங்கிற்கு வருவது சாத்தியமில்லை என்பதையும் ஏற்கிறார்.

கொரானா ஊரடங்கிற்கு பிறகு இன்னும் மக்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்ற செய்தி பிரபல நடிகர்களுக்கு போய்சேரவில்லை. அப்படி சேர்ந்திருந்தால் இன்னேரம் தங்களது அதிக சம்பளத்தை குறைத்திருப்பார்கள் என சொல்லும் பொழுது ஆச்சர்யமாயிருக்கிறது. நமது நாயகர்களுக்கு இந்த செய்தி கூட தெரியாமல் இருக்கிறது? கஷ்டம். கஷ்டம்.

அவருடைய பேட்டியை படித்த பிறகு, இன்னும் சில வருடங்களுக்கு திரைத்துறை எழுந்து ஓடுவதற்கு வாய்ப்பேயில்லை என உணரமுடிகிறது. திரைத்துறையை வீழ்த்துவதற்கு வெளியில் இருந்து யாரும் முயலவேண்டாம். அவர்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்வார்கள் என அறிய முடிகிறது.

0 பின்னூட்டங்கள்: