> குருத்து: Perfume (2006) ஒரு கொலைகாரனின் கதை

May 25, 2021

Perfume (2006) ஒரு கொலைகாரனின் கதை


”இதுவரை மனிதன் கண்டுபிடித்த 12 வகையான வாசனைகளின் அடிப்படையில்தான் அனைத்து நறுமணங்களையும் உருவாக்கினான் எனவும் பிரபஞ்சத்தின் எல்லா பூதங்களுக்கும் (Element ) கண்ணுக்குப் புலப்படாத ஓர் பரிமாணம் (Dimention ) இருப்பதுபோல் வாசனைகளுக்கும் மனிதன் கண்டுபிடிக்காத ஒன்று இருக்கலாம் எனவும் இருந்தால் அதுவே 13வது வாசனையாக இருக்கவேண்டும்”

- யா. பிலால் ராஜா (மிகச்சிறந்த இத்தாலிய வாசனை திரவிய வல்லுனரும் வியாபாரியுமான கியூசெப், படம் குறித்த விமர்சனத்திலிருந்து…!)
*****

18ம் நூற்றாண்டு கதை. சிறையில் இருக்கும் அந்த இளைஞனை அடித்தும், இழுத்தும் வருகிறார்கள். மக்கள் அவன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு மரண தண்டனையை அறிவிக்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அவன் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே அவன் அம்மா தூக்கிலேற்றப்படுகிறாள். அவனுக்கு அபாரமான நுகரும் திறன் இருக்கிறது. அனாதை இல்லத்தில் வளர்கிறான். சிறுவனாய் இருக்கும் பொழுதே தோல் பதனிடும் தொழில் செய்பவனிடம் விற்கப்படுகிறான். பிறகு பாரிஸ் நகரத்திற்கு வந்து சேர்கிறான். அங்கு வாசனை திரவியங்கள் தயாரித்து விற்கும் ஒருவரிடம் வந்து சேர்கிறான். தொழிலில் நொடித்து போயிருந்தவருக்கு அவனின் அபாரத்திறன் நிறைய சம்பாதித்து கொடுக்கிறது.

வாசனைத் திரவியங்களை எப்படி தயாரிப்பது என்பதை அவரிடம் கற்றுக்கொள்கிறான். அவனுக்கு அதெல்லாம் போதவில்லை. உலகத்தில் ஒரு சிறந்த வாசனைத் திரவியத்தை உருவாக்கி புகழடையவேண்டும் என நினைக்கிறான்.

பாரிஸ் வந்த புதிதில் ஒரு இளம்பெண்ணின் உடலில் இருந்து அழகான நறுமணம் வர, அவன் பின்தொடர்கிறான். தற்செயலாய் அவள் ’இறந்து’விட, அவள் உடலின் மணத்தை நன்றாக நுகர்கிறான். அவனுக்கு இப்பொழுது நறுமணத்தை எப்படி சேகரிப்பது என்ற தொழில்நுட்பமும் தெரிந்துவிட்டது. இளம்பெண்களை கொன்று வாசனை திரவியம் உருவாக்க துவங்குகிறான்.

பிறகு அவன் நினைத்தப்படி அந்த ‘சிறந்த’ வாசனைத் திரவியத்தை உருவாக்கினானா? தண்டிக்கப்பட்டானா? என்பதை மீதி பாதி கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
*****

ஒரு சாதனைக்காக மனிதநேயமற்று நடந்துகொள்வது அடிப்படையில் தவறு. அதனால் சரியாக ஒரு கொலைகாரனின் கதை என வைத்திருக்கிறார்கள்.

அவனின் மோப்பத் திறன் எப்படிப்பட்டது என்பதை நமக்கு ஒளிப்பதிவின் வாயிலாக
அருமையாக
புரிய வைத்திருக்கிறார்கள். அவனைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருக்கிறது. ஏனென்றால், எனக்கு வாசனை என்பது சில வருடங்களாக தெரியாது. மிகவும் தூக்கலாக யாராவது வாசனை திரவியம் போட்டிருந்தாலோ, குப்பை வண்டி கடந்து சென்றாலோ தான் என்னால் உணரமுடியும்.

வரலாற்று வழியில்… காடுகளில் வாழ்ந்த பொழுது மிருகங்களுக்கு இருக்கும் மோப்பத்திறன் மனிதர்களுக்கும் தேவைப்பட்டது. ஆனால், நகரத்தை நோக்கி நகர்ந்து வாழும் பொழுது, அதன் தேவை குறைந்தது என்கிறார்கள். (அப்ப இது என் பிரச்சனை மட்டும் கிடையாது! 🙂

படத்தில் நிர்வாண காட்சிகளும், படத்தின் இறுதியிலும் சில காட்சிகளும் வரும். ஆனால் அதில் துளி கூட ஆபாசம் இருக்காது. இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முக்கிய பாத்திரங்கள் அனைவருமே சிறப்பு. குறிப்பாக நாயகன் வெகுசிறப்பு.

நாவலாக எழுதப்பட்டு, புகழ்பெற்ற சிறந்த இயக்குநர்கள் இயக்க ஆசைப்பட்டு, இறுதியில் Run lola Run இயக்குநருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவரே இசையும் அமைத்திருக்கிறார். படம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. நிறைய விருதுகளையும் வென்றிருக்கிறது.

அமேசன் பிரைமில் இருக்கிறது. பாருங்கள். இந்தப் படத்தை முன்பு ஆங்கிலத்தில் பார்த்துள்ளேன். யூடியூப்பில் வேறு ஒன்றை தேடும் பொழுது, தமிழ் டப் செய்யப்பட்ட பிரதியும் கண்ணில்பட்டது. ஈழத்துத் தமிழில் ஒரு அருமையான படத்தை ஏன் இவ்வளவு சுமாரான வடிவத்தில் மொழிபெயர்க்கிறார்கள் என தெரியவில்லை. சரியான பட்ஜெட் கிடைப்பதில்லையா? தெரியவில்லை.

0 பின்னூட்டங்கள்: