> குருத்து: Joji (2021) மலையாளம்

May 25, 2021

Joji (2021) மலையாளம்


கதை. கேரளத்தின் ஒரு வளமான காட்டுப் பகுதியில் தனியாக ஒரு பெரியவீடு. ஒரு தந்தை தனது மூன்று மகன்களுடன் கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வருகிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி, விவாகரத்தாகி, உயர்நிலைபள்ளி செல்லும் வயதில் ஒரு பையன் இருக்கிறான். இரண்டாவது மகன் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்துவருகிறார். மூன்றாவது மகன் திருமணமாகாமல் விடலைத்தனத்துடன் இருக்கிறார்.


வீட்டில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் தந்தை தன்னிடம் வைத்துக்கொண்டு, மூன்று பிள்ளைகளையும் தன்னிடம் வேலை செய்கிற ஆட்களாய் நடத்திக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரும் தனித்தனியான கனவுகளுடன், தேவைகளுடன் இருக்கிறார்கள். எல்லாவற்றிக்கும் அப்பா கையை எதிர்ப்பார்த்து இருப்பது அவர்களுக்குள்ளே கசப்பை உருவாக்குகிறது..

இந்த சமயத்தில் தந்தை உடல்நிலை சரியில்லாமல், படுத்தப்படுக்கையாகிறார். புகைச்சலோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்குள் இருக்கிற மன விகாரங்கள் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் விரிவாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

****

17ம் நூற்றாண்டின் சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்களில் மேக்பத்தும் (Macbeth) ஒன்று. உலகம் முழுவதிலும் பல ஆயிரம்முறை நாடகங்களாகவும், பல திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில் இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஒரு நிறுவனம். அது போலவே குடும்பமும் ஒரு நிறுவனம். இரண்டிலும் அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும். ஜனநாயகப்படுத்தப்படவேண்டும். இல்லையெனில், அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்து இருக்கும் பொழுது எல்லா கோளாறுகளும் துவங்கிவிடுகின்றன. (ஜெயா, மோடி என பலரும் நினைவுக்கு வந்து போனார்கள்) படத்தில் அதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

மகேசிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் திருக்சாட்சியும் இரண்டு படங்களின் கதாசிரியர், இயக்குநர், நடிகர் கூட்டணி தான் இந்த படமும். மூன்றாவது வெற்றிப்படம் என்கிறார்கள். உண்மை தான்.

படத்தில் குறைவான பாத்திரங்கள் தான். எல்லோருமே அளவாக, அடக்கமாக செய்திருக்கிறார்கள். இதில் திடகாத்திரமான, ஆணவம் பிடித்த தந்தையாக வருபவரும், உடல் இளைத்து, விடலைத்தனங்களுடன் மூன்றாவது மகனாக வரும் பகத்தும் மிகவும் ஈர்க்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் படத்தை கூடுதலாக தாங்கி பிடித்திருக்கின்றன.

நல்ல படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: