> குருத்து: ஆசிரியரும் பனானா கேக்கும்!

May 27, 2021

ஆசிரியரும் பனானா கேக்கும்!

 


நேற்று முடிவெட்ட வழக்கமான கடைக்கு போயிருந்தேன். அதே கடைக்கு தொடர்ச்சியாக செல்வதால், அவரோடு பொதுவிசயங்கள் பேசுகிற வழக்கம் வந்திருந்தது.


அவரின் இரு பிள்ளைகள் ஒரு பிரபல பள்ளியில் படித்து வருகிறார்கள். கட்டணத்தை கட்ட சொல்லி, அடிக்கடி நச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றார்.

ஆனால், அதே பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் ஒருவர் தன் கடைக்கு தொடர்ந்து வருவார் என்றார்.

அவர் நேற்று கடைக்கு முடிவெட்ட வந்திருந்தார். அவர் ஒரு விசயம் சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது.

"1998ல் ஆசிரியராக 1500 ரூ. சம்பளத்தில் சேர்ந்தேன். கடந்த 23 வருடங்களில், கொஞ்சம் கொஞ்சமா சம்பளம் கூடி கொரானா ஊரடங்கிற்கு முன்பாக, 45000 ரூ. சம்பளம் வாங்கினேன்.

ஊரடங்கு அறிவித்த பிறகு, ஏப்ரல் மாதத்தில் இருந்து ரூ. 9000 மட்டும் தான் சம்பளம் தந்தார்கள். இந்த ஜனவரியில் இருந்து கூட ரூ 3000 சேர்த்து ரூ. 12000 தருகிறார்கள். பற்றாக்குறைக்கு கடன் வாங்கித்தான் வாடகை உட்பட சமாளிச்சேன்.

கடந்த சில வருடங்களாக என் பொண்ணுக்கு கட்டணம் இல்லாமல் அனுமதித்தார்கள். இப்ப பொண்ணு பத்தாவது படிக்குது. இந்த வருசம் என்னை பள்ளிக்கட்டணம் வேறு கட்ட சொல்கிறார்கள். ரூ. 50000 க்கு எங்கே போறது?

என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போனேன். இப்ப தாம்பரம் வரைக்கும் போய் ஒரு பேக்கரியில் பனானா கேக்குகளை வாங்கி தேநீர் கடைகளில் போட்டுக் கொண்டிருக்கிறேன். அதிலயும் பெரிசா ஒண்ணும் கிடைக்கல.

பள்ளியில் பேசினா... பார்த்தா பாருங்க! உங்க சம்பளத்தில் நாங்க மூணு பேரை நியமிச்சருவோம்! என மூஞ்சில் அடிச்ச மாதிரி சொல்லிவிட்டார்கள்.

ஆசிரியர் தொழிலை விட்டுட்டு வேறு தொழில் செய்யலாம்னு இருக்கேன்" என அழாத குறையாக சொல்லி சென்றிருக்கிறார்.

"என்ன அநியாயம் பாருங்க சார்! நம்மகிட்டமொத்த கட்டணத்தில் 75% வசூலிச்சுட்டு, பல வருசமா வேலைப் பார்த்த ஆசிரியர்களை தெருவில் விட்டுட்டாங்க!" என்றார் கோபமாய்!

கொரானா கொடியது! தனியார்மயம் அதை விட கொடியது! என்பதை தொடர்ந்து கேட்கும் உண்மை கதைகள் நிரூபித்து வருகின்றன.

இனி, கடைகளில் பனானா கேக்குகளை பார்க்கும் பொழுதெல்லாம் அந்த ஆசிரியரும் தவறாமல் நினைவுக்கு வந்து போவார்!

- முகநூலில்... 03/03/2021 அன்று எழுதியது!

0 பின்னூட்டங்கள்: