> குருத்து: The Hidden Face (2017) துருக்கி

May 27, 2021

The Hidden Face (2017) துருக்கி


கதை. நாயகன் இசைக்குழு நடத்துநர். ஒரு பெண்ணை விபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதற்கு பிறகான நாட்களில் இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கும் பொழுது, வேலைக்காக தனது சொந்த ஊருக்கு போகிறேன் என சொல்கிறான். முன்னாள் காதலி மூலம் கிடைக்கும் வேலை என்பதால் இவள் தயங்குகிறாள். இருவரும் சேர்ந்தே போவோம் என சொல்லுவதை சந்தோசமாக ஏற்கிறாள்.


அங்கு போன பிறகு முன்னாள் காதலி அவனுடன் நெருக்கமாக பழகுகிறாள். இதைப் பார்த்ததும் இவள் கடுப்பாகிறாள். இதற்கிடையில் இவள் கர்ப்பமடைகிறாள். தாங்கள் இருக்கும் வீட்டின் சொந்தக்கார பாட்டியிடம் நாயகன் மீதான சந்தேகத்தைப் பற்றி கேட்கும் பொழுது, அவள் ஒரு சிக்கலான ஆலோசனை சொல்வதை ஏற்று அமுல்படுத்துகிறாள். அவனை விட்டுவிட்டு பிரிவதாகவும், தன்னை தேடவேண்டாம் எனவும் ஒரு கேமராவில் பதிவு செய்துவிட்டு காணாமல் போகிறாள்.

அவன் தேடுகிறான். போலீசு தேடுகிறது. இதெல்லாம் துவக்க சில நிமிட கதை. பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

******

பொதுவாக பெண்கள் தன் காதலன்/கணவன் மீதான அதீத அன்பும், சந்தேகமும் அவர்களுடைய பாதுகாப்பின்மையில் (Insecurity) தான் எழுகிறது. அதனாலேயே வேறு பெண் தொடர்பும் இல்லாமல் இருந்தால் கூட சந்தேகப்பட்டு, கணவன், மனைவி என இருவரது வாழ்க்கையை ரணமாக்கிகொள்வார்கள். பல சமயங்களில் இந்த டார்ச்சர் தாங்கமுடியாததாக இருக்கும், இதனாலேயே உறவு சிக்கலாகி விவாகரத்து வரை கூட போகும். இதில் பெண்களை மட்டும் குற்றம் சாட்ட இயலாது. இது எப்பொழுது தீரும்? சமூகம் மாறினால் தான் தீரும். பெண்கள் பொருளாதார ரீதியில் வலுவடையும் பொழுது, ஆண் வழியான உடைமை சமுதாயம் என பல அம்சங்கள் மாறும் பொழுது தான்! அதுவரை இந்த பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

மூவர் தான் முக்கிய பாத்திரங்கள். மூவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். பார்க்க கூடிய திரில்லர். யூடியூப்பில் இந்த துருக்கி படம் ஆங்கில சப் டைட்டில்களுடன் இலவசமாகவே கிடைக்கிறது.

படத்தை இறுதிவரை சுவாரசியமாகவும், உணர்வுபூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்தப் படம் முதலில் ஸ்பானிஷ் மொழியில் 2011ல் எடுக்கப்பட்டு, பிறகு இந்தியில் மர்டர் 3 - 2013ல் இந்தியில் எடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு துருக்கியிலும், மெக்சிகோவில் 2019லும் பயணப்பட்டிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: