> குருத்து: The Beach (2000)

May 24, 2021

The Beach (2000)



கதை. நாயகன் அமெரிக்காவை சேர்ந்தவன். தாய்லாந்துக்கு ஊர் சுற்ற தனியாக வருகிறான். வழக்கமான பாணியில் ஊர் சுற்றுவதை விரும்பாதவன். அவன் தங்கியிருக்கும் விடுதியில் அடுத்த அறையில் ஒருவன் இவனுக்கு பழக்கமாகிறான். அவன் ”ஒரு அழகான கடற்கரை கொண்ட ஒரு தீவு. அங்கு வழக்கமான எதுவும் இருக்காது” என இன்னும் பலவற்றை சொல்லி ஆர்வமூட்டுகிறான். அடுத்த நாள் அவன் அறையில் தற்கொலை செய்துகொள்கிறான்.


நாயகனுக்கு அவன் சொன்ன தீவுக்கு செல்ல ஒரு மேப் கிடைக்கிறது. பக்கத்து அறையில் இருந்த ஒரு பிரெஞ்ச் ஜோடியிடம் பேசி, ஏற்கவைத்து மூவரும் அந்த தீவுக்கு கிளம்புகிறார்கள். சாலையிலும், கடலிலும் பல கி.மீ பயணம். பிறகு இரண்டு கிமீட்டருக்கும் மேலாக நீச்சல் அடித்து போய்சேருகிறார்கள். தீவுக்குள் போனால் கஞ்சா செடிகள் ஏகமாய் வளர்ந்து நிற்கிறது. துப்பாக்கி ஏந்திய ஆட்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் தப்பித்து, வேறு இடத்திற்கு போனால், ஒரு 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் வெளியுலகத்திற்கு தெரியாமல் அங்கே (Secret Society) வாழ்கிறார்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்களே விளைவித்து கொள்கிறார்கள். மிகவும் அவசியமானால், மட்டும் வெளியுலகம் போய் வாங்கி வருகிறார்கள்.

அந்த குழுவில் மூவரும் ஐக்கியமாகிறார்கள். வெளி உலக தொடர்பு இல்லாமல் தனித்து வாழ்வதால் வரக்கூடிய பிரச்சனைகளை அந்தக் குழு ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லி முடிக்கிறார்கள்.

******
டைட்டானிக் நாயகன் Leonardo DiCaprioa நடிக்க கூடிய படங்கள் கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கிறதே என நம்பிப் பார்த்தேன். ஒரு நாவலை சின்ன சின்ன மாற்றங்களுடன் எடுத்திருக்கிறார்கள்.

Into the wild நாயகனும் சமூகத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு காட்டுக்குள் செல்வான். கையில் உள்ள உணவுப்பொருள் தீர்ந்த பிறகு, ஒவ்வொரு வேளை உணவே தட்டுப்பாடாகிவிடும். கடந்து வந்த நீண்ட பாதையில் மனித சமூகத்தின் அறிவும், மனிதர்களின் கூட்டுழைப்பின் அவசியத்தை உணர்வான்.

அது போல சமூகத்தில் இருந்து தன்னை துண்டித்துக்கொள்ளும் இந்த மனிதர்களும் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அவ்வப்பொழுது வெளியே போய்வந்துவிடுவதால், அதில் கொஞ்சம் சமன் செய்துகொள்வார்கள். இருப்பினும் சில விசயங்கள் எதிர்கொள்ள முடியாதவை. படம் பாருங்கள். புரியும்.

படத்தில் நடித்த அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தில் காண்பிக்கப்படும் அந்த கடற்கரை உண்மையிலேயே அசத்தல். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: