> குருத்து: டெடி (2021)

May 25, 2021

டெடி (2021)


கதை. நாயகன் நல்ல நினைவாற்றல், எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் என உடையவர். தன்னுடைய நினைவாற்றலால் பங்குச்சந்தையில் நிறைய சம்பாதிக்கமுடியும் என்றாலும், அளவாக சம்பாதித்து வாழும் நல்ல மனிதர். தன்னுடைய இளம்வயதில் அப்பாவை இழந்த பாதிப்பால், உறவு என்றாலே கசப்பு என வாழ்பவர்.


நாயகி படம் துவங்கியதும் ஒரு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் இருந்து, உறுப்பு திருட்டுக்காக நாடு கடத்தப்படுகிறார். மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் பொழுது, உயிர் ஒரு கரடி (Teddy) பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. கரடி பொம்மை நாயகனை அடைந்து உதவி கேட்கிறது.

தனது சகல திறமைகளையும் பயன்படுத்தி நாயகியின் உடலோடு, உயிரையும் இணைத்தாரா என்பது மீதி முக்கால் வாசி படம்.

*****

இப்படி ஒரு பேண்டசி படத்திற்கு முக்கியமான தேவை. ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையும், வலுவான திரைக்கதையும். இரண்டிலும் கவனம் செலுத்தவில்லை. காட்சிகளில் மட்டும் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆகையால் அத்தனை உழைப்பும் வீணாகியிருக்கிறது.

முன்பெல்லாம் வெளிநாடு சார்ந்த படம் என்றால், கதை கொஞ்சூண்டும், மிச்சத்தை சில பாடல்களை வைத்து ஊர் சுற்றிக்காட்டுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இந்தப்படத்திற்கு வெளிநாடு போகவேண்டிய தேவையேயில்லை. இங்கிருக்கிற மும்பைக்கு போயிருந்தாலே போதுமானது. வெளிநாடுகளில் எங்கெங்கோ போய் அலைகழிக்கிறது.

மூன்றாவது பிரச்சனை. ஆர்யா. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு படம் முழுவதும் அவர் மட்டுமே வருகிறார். செம கடுப்பாய் இருக்கிறது. நாயகி கோமா என்பதால், பாவம் காட்சிகளே இல்லை. படத்தை கொஞ்சூண்டாவது பார்க்க வைப்பது அந்த கரடி பொம்மை செய்கிற செயல்கள் மட்டுமே!

என் பொண்ணுக்காகவும், மிருதன், டிக் டிக் டிக் படங்களின் இயக்குநர் என்பதால், கொஞ்சம் நம்பி பார்க்கலாம் என பார்த்தால் ஏமாற்றம் தான். ‘என் இனிய தனிமையே’ பாடல் மட்டும் உதடுகளில் தொற்றிக்கொண்டது.

0 பின்னூட்டங்கள்: