> குருத்து: Dragula Untold (2014)

May 27, 2021

Dragula Untold (2014)



கதை. 15ம் நூற்றாண்டு. துருக்கியின் பேரரசன் தனது பெரும்படைகளை கொண்டு போர் தொடுத்து, தன் எல்லைகளை விரிவுப்படுத்திக்கொண்டே போகிறான். தன் ஆளுகைக்குட்பட்ட ஒரு சிற்றரசன் ஒழுங்காக கப்பம் கட்டி வருகிறான். சிற்றரசனின் மகனையும் சேர்த்து 1000 சிறுவர்களை தன் படைக்கு கொடு! என மிரட்டுகிறான். அந்த உத்தரவை நிறைவேற்றினால் பேரிழப்பு. உத்தரவை மீறினாலும் பேரரசன் படைகளை அனுப்பி துவம்சம் செய்துவிடுவான். ஒரு அரசனாய், ஒரு தகப்பனாய் அனைவரையும் காப்பாற்றியாகவேண்டும்.


இதற்கிடையில், அவனுடைய ஆட்சிப் பகுதியின் எல்லையில் ஒரு இருண்ட குகைக்குள் வித்தியாசமாக ஒரு சக்தி இருப்பதை உணர்கிறான். தனது அரசவை மதவாதிகளிடம் கேட்டால், டிராகுலா ஒரு சாபத்தால், அந்த குகையில் அடைந்து கிடக்கிறான் என்கிறார்கள்.

தலைக்கு மேல் தொங்கும் அபாயத்தை எதிர்கொள்ள, அந்த குகைக்குள் செல்கிறான். டிராகுலாவிடம் ஒப்பந்தம் போடுகிறான். டிராகுலாவின் ரத்தம் குடித்தால், அவனுக்கு டிராகுலாவின் மிகப்பெரிய சக்தி கிடைக்கும். அதைக்கொண்டு எதிரிகளை வெற்றிக்கொள்ள போராடலாம் என கணக்கு போடுகிறான். ஆனால் மூன்று நாட்களுக்குள் எதிரியை வென்றே ஆகவேண்டும். இல்லையெனில், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

துருக்கியின் பெரும்படைகள் வந்துகொண்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் அந்த படைகளை முறியடித்தானா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

டிராகுலா சம்பந்தமாக ஒன்றிரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன். டிராகுலா பின்புலத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான படம் எடுத்திருப்பது ஆச்சர்யம்.

நடிகர்களின் நடிப்பு, எங்கும் தொய்வில்லாமல் சென்ற திரைக்கதை, பெரும் படைகளின் பிரமாண்டம், சண்டை என எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக இருந்தன.

டிராகுலா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: