கதை. நாயகன் அடிக்கடி காலவழிப்பயணம் (Time Travel) மேற்கொள்கிறவன். பயணத்தின் நோக்கத்தை, கால அளவை அவனால் தீர்மானிக்க முடிவதில்லை. ஆகையால், திடீர் திடீரென காற்றில் கரைவதும், எங்கோ ஒரு காலத்தில், எங்கோ ஒரு இடத்தில் ஒட்டுத்துணியில்லாமல் இருக்கிறான். அவனுக்கு ஆடை தேடுவதே முதல் வேலையாகிறது.
காலவழிப் பயணத்திற்கு ஊடாகவே நாயகி சிறுவயதில் இருந்து நாயகனுக்கு பழக்கமாகிறாள். அவனை விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள்.
திருமணம் செய்த பிறகு, அவனின் அருகாமை தேவைப்படும் பொழுதெல்லாம் திடீர் திடீர் என காணாமல் போவதும், பிறகு சில நாட்கள் கழித்துவருவதும் அவளுக்கு கசப்பாகிறது.
அவளுக்கு கரு உருவாவதும், பிறகு கலைவதுமாக இருக்கிறது. நாயகனின் பிள்ளை என்பதால், கருவில் உள்ள குழந்தையும் காலவழிப்பயணம் செய்வதால், கலைகிறதோ என சொல்லும் பொழுது நமக்கு பகீரென இருக்கிறது.
அதற்கு பிறகு, கணவன், மனைவி இருவருக்கும் இடையே உணர்வு மோதல்கள் தான் மீதி பாதி கதை!
*****
காலவழிப்பயணத்தின் வழியே சாகசப் படங்கள், அறிவியல் படங்கள், நகைச்சுவைப் படங்கள் என பார்த்திருக்கிறேன். முதன்முறையாக கணவன் மனைவி காதல் உறவைப் பற்றிய படத்தைப் பார்க்கிறேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த பாத்திரங்களை இருவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
இந்த கதையை நாவலாக எழுதி மிகவும் புகழ்பெற்று, பிறகு படமாக எடுத்திருக்கிறார்கள். படமும் நன்றாக ஓடியிருக்கிறது. காலவழிப் பயணப் படங்களில் சில இடங்கள் குழப்பங்கள் இருக்கும். அது போலவே இந்த படத்திலும் இருக்கின்றன.
மற்றபடி, படம் பார்த்த பிறகு மனதில் ஓடிய ஒரு விசயம். கொரானா நெருக்கடியில் அரசு அறிவித்த சமூக ஊரடங்கின் பொழுது, இந்தியர்களும் தமிழர்களும் தங்களுடைய கல்வி, வேலை, தொழில் என பல தேவைகளுக்காக உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறார்கள் என்பது நன்றாக தெரிய வந்தது. இந்தியாவிலே சிதறி கிடக்கிறார்கள் என்பதையும் பார்க்கத்தான் செய்தோம்.
பெரும்பாலான மக்கள் வெளிநாட்டிற்கு சென்றால், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தங்கள் குடும்பங்களைப் பார்க்கிறார்கள். மம்முட்டி நடித்த பத்தேமாறி (Pathemari) என மலையாள படத்தில், நாயகன் இளைஞனாய் இருக்கும் பொழுது வளைகுடா செல்வார். பிறகு பல்வேறு குடும்ப சிக்கல்களுக்காக மீண்டும் மீண்டும் துபாய் பயணித்து அவர் ஆயுள் முழுவதும் அங்கேயே இருந்து, அங்கேயே இறந்தும்விடுவார். அவருக்கு தன் உறவுகளோடும், சொந்த மண்ணிலும் தான் வாழ அத்தனை ஆசைப்படுவார். ஆனால், அவருக்கு சாத்தியப்படவே செய்யாது.
படத்தில் நாயகனைப் போல தான் இங்கு பலரும் வாழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பமும் நினைவுக்கு வந்து போகிறது.
அமேசானில் கிடைப்பதாக இணையம் சொல்கிறது. படம் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment