கதை. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் பல வகையான ஆட்கள் குடியிருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஒரு பள்ளி மாணவி, தந்தையுடன், தனது புது சித்தியுடன் வாழ்ந்து வருகிறாள். பக்கத்து வீட்டில் ஒரு சீரியல் கொலையாளி இருக்கிறான். அவன் ஒரு நாள் திட்டமிட்டு அந்த மாணவியை வீட்டிற்குள் அடைத்து கொன்றும்விடுகிறான்.
பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு கொலை. உடற்பாகங்களை வெட்டி ஒரு சூட்கேசிற்குள் போட்டு, பொது இடத்தில் தூக்கிப்போட்டுவிடுகிறான். செய்திகளில் வருகிறது.
கொலையாளி 10 நாட்களுக்கு ஒருமுறை ஒரு சூட்கேஸ் ஒரு குறிப்பிட்ட கடையில் தான் வாங்குகிறான். அவன் மீது கடைக்காரருக்கு சந்தேகம் எழுகிறது. போலீசுக்கு சொல்லலாம் என யோசிக்கும் பொழுது, “வியாபாரம் கெட்டுவிட்டும்” என அவரின் மனைவி அவரை அமைதியாக்கிவிடுகிறாள்.
அந்த கொலையாளி தான் கடத்தி வைத்திருக்கும் நபருக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பிட்சா ஒரு குறிப்பிட்ட கடையில் தான் வாங்குகிறான். அந்த இளைஞனுக்கு கொலையாளியின் நடவடிக்கையும், தேதிகளும் ஒத்துபோகின்றன. அவன் போலீசில் சொல்லலாம் என நினைக்கும் பொழுது, ”தவறாக சொல்லிவிட்டால், உனக்கு பிரச்சனையாகிவிடும்” என செக்யூரிட்டி பயமுறுத்த அவனும் அமைதியாகிவிடுகிறான். போலீசு விசாரணை வேறு ஒரு ஆளை சம்பந்தமில்லாமல் விசாரித்துக்கொண்டிருப்பார்கள்.
இப்படி சுற்றி உள்ளவர்கள் எல்லாம் அமைதியாக இருக்க, கொலையாளி அங்கிருந்து வீட்டை காலிசெய்து கிளம்ப முயற்சிக்கிறான். பிறகு என்ன ஆனது என்பதை பர பர காட்சிகளுடன் சொல்லிமுடிக்கிறார்கள்.
****
ஒரு கொலையாளி. தொடர் கொலைகள் செய்கிறான். ஆனால், அண்டை வீட்டுக்காரர்கள் நமக்கு ஏன் பொல்லாப்பு என சுயநலம், அறியாமை போன்ற காரணங்களால் ஒதுங்கி போகிறார்கள். நம் வீடு. நம் குடும்பம் என்று மட்டும் வாழக்கூடாது. பொதுநலத்தையும் கவனிக்கவேண்டும். இல்லையெனில், நாம் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற கருத்தை நன்றாகவே சொல்லியிருக்கிறது படம்.
படத்தில் நடித்த அனைவருக்குமே சம வாய்ப்புகள். யாரும் நாயகன், நாயகி என முக்கியத்துவப்படுத்தவில்லை. எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் ஹாரரையும் மெல்லிதாய் தூவியிருக்கிறார்கள். தென்கொரிய படங்கள் உணர்வுபூர்வமாகவும் எடுப்பார்கள். இந்தப் படமும் அப்படியே!
அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. தென்கொரிய படமென்றால், வன்முறை அதிகம் இருக்கும் என தெரியும். எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதை இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார்கள். அதன்படியே நன்றாகவே வசூலிலும் சாதித்திருக்கிறது.
எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment