> குருத்து: A Frozen Flower (2008) தென்கொரியா

May 27, 2021

A Frozen Flower (2008) தென்கொரியா


கதை. கொரியாவின் ஒரு பகுதிக்கு இளம் சிற்றரசன். அவனுக்கு குழந்தை இல்லை. ஆள்வதற்கு அடுத்த வாரிசு வேண்டும் என பேரரசரிடமிருந்து அழுத்தம் வருகிறது. குழந்தை ஏன் இல்லையென்றால் அரசன் தன்னை பாதுகாக்கும் மெய்காவலர் இளம் படைத்தளபதியுடன் காதலில் இருக்கிறான் (Homosex).


இந்த வாரிசு நெருக்கடியை தீர்க்க தனக்கு பிடித்த தளபதியின் மூலம் ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறான். தளபதியையும், இராணியையும் அழைத்து ”இருவரும் இணைந்து ஒரு பிள்ளை பெற்றுத்தாருங்கள். இருவருக்குள்ளும் காமம் இருக்கலாம். காதல் இருக்கவே கூடாது” என நிபந்தனை விதிக்கிறான். அரசரின் உத்தரவைத் தட்ட முடியாமல் இருவரும் வேண்டா வெறுப்பாய் இணைகிறார்கள். அதில் ஒரு திருப்பம். அதற்கு பிறகான நாட்களில் இருவருக்குள்ளும் காதலும் பற்றிக்கொள்கிறது. பொதுவாக காதல் பிறகு காமம். இங்கோ முதலில் காமம். பிறகு காதல். (Interesting) அரசனுக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள்.

இதற்கிடையில் அரசனுக்கு எதிராக உள்ளூரில் சதிவேலைகள் நடைபெறுகின்றன. தளபதிக்கும் இராணிக்கும் இடையேயான காதலும் தெரிய வர பயங்கர கோபமடைகிறான். அதற்கு அவன் கொடுக்கும் தண்டனை பயங்கரம். அதன் பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி முடிக்கிறார்கள்.
****

தமிழிலும், பிற மொழிகளிலும் முக்கோண காதல் கதைகள் நிறைய பார்த்திருக்கிறோம். அரசன், இராணி, தளபதி என படத்தின் பின்புலம் இருந்தாலும், இதுவும் உணர்ச்சிப்பூர்வமான முக்கோண காதல் கதை தான். ஒரு நெருக்கடியான காட்சியில், “என் மீது உனக்கு காதல் இல்லையா?” என அரசன் கேட்க, படைத்தளபதி “இல்லை” என்று சொல்லும் பொழுது அரசன் நொறுங்கி போகிறான்.

காதலையும், காமத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு காதல் படத்தில் இவ்வளவு படுக்கையறை காட்சிகள் தேவையில்லை. இயக்குநர் கல்லா கட்டணும் என்ற முடிவில் எடுத்திருப்பார் போல! எதிர்ப்பார்த்தது போலவே செமத்தியாக கல்லாவும் கட்டியிருக்கிறது படம்.

நேரம் இருந்தால் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: