கொரானா தொற்றை முன்வைத்து, அரசு அறிவித்த ஊரடங்கு முடிந்து ஒரு வருடத்தை கடந்துவிட்டோம். கொரானாவின் இரண்டாவது அலை இன்னும் புதிய வீரியத்துடன் பரவி வருகிறது என கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் சொல்லிவருகிறார்கள். இன்று தில்லி, சண்டிகார், சட்டிஸ்கரில் இரவில் நடமாட்டம் இருக்க கூடாது என சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே மகாராஷ்டிரம் பல அறிவிப்புகளை கொடுத்தப்படி தான் இருக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு, ”முழித்துக்கொண்டு” தமிழக அரசும் பல அறிவிப்புகளை இன்று அறிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றமும், தேர்தல் வரை அமைதியாய் இருந்துவிட்டு, கவனமாகவே இல்லையே? என கண்டித்திருக்கிறது.
இந்த அறிவிப்புகளுடன் இன்று திருப்பதி தேவஸ்தானம் தனது பக்த கோடிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறது. வருகிற 11ந் தேதியிலிருந்து இலவச தரிசனம் ரத்து. ஏற்கனவே இணையம் வழியாக ரூ. 300 மதிப்பு கொண்ட டிக்கெட்டுகள் தினமும் 30,000 விநியோகிக்கப்படுவது மட்டும் தொடரும் என அறிவித்திருக்கிறது.
கடந்த 50 நாட்களுக்கு முன்பாக, அண்ணன், அக்கா குடும்பம் திருப்பதியை பார்க்க டிக்கெட் புக் பண்ணி தரச் சொல்லி, கேட்டிருந்தார்கள். மாத இறுதியில் இணையத்தில் திறக்கும் பொழுதே டிக்கெட்கள் ரயில் டிக்கெட்டை விட பரபரவென விற்றுத்தீர்ந்துவிட்டன. யாரோ ஒரு உறவினர் இலவச தரிசனத்திற்கு இப்பொழுது அனுமதிக்கிறார்கள் என்று சொன்னவுடன், உடனே ஒரு வேனைப் பிடித்து திருப்பதி கிளம்பிவிட்டார்கள். நானும் திருப்பதியை பார்த்திராததால், பார்க்கலாம் என சென்னையில் இருந்து கிளம்பி அவர்களுடன் இணைந்துகொண்டேன்.
2021 பிப்ரவரி இரண்டாவது சனிக்கிழமை. கீழ்த்திருப்பதியை அடைந்து, இலவச தரிசனத்திற்கான டோக்கன் தருகிற இடத்தை அடையும் பொழுது. காலை 11 மணி. மிக நீண்ட வரிசை. மாஸ்க் இல்லை. தனிநபர் இடைவெளி இல்லை. ஒரு மணி நேரம் நின்று எல்லோருக்கும் தனித்தனியாக டோக்கன் வாங்கினோம். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு 25000 பேர் அனுமதி.
இலவச தரிசனத்திற்கு அனுமதி 25000. இணையத்தின் வழியே 25000. இது தவிர கீழ்த்திருப்பதியிலிருந்து நடந்து செல்லும் இரண்டு வழிப்பாதைகள் வழியாக செல்லும் பக்த கோடிகளின் எண்ணிக்கை தனி. அந்த தரிசனத்துக்கு இலவச தரிசனம் என்ற பெயர் இல்லை. 3800 படிகள் வழியாக நடந்து செல்வதால் திவ்ய தரிசனம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சற்று ஏறக்குறைய 60000 பக்த கோடிகள்.
எண்ணிக்கை எல்லாம் தெரிந்து தானே விடுகிறார்கள். மேலே போய் அறை எடுத்துக்கொள்ளலாம் என சொந்த வேனில் ஞாயிறு மாலை மலையேறினோம். அங்கே போனால், அறைக்காக பெருங்கூட்டம் புதுப்படத்திற்கு திரையரங்கில் நெருக்கியடித்து வரிசையில் நிற்கிறார்கள். அங்கும் பெரும்பாலோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. சானிடைசரும் எங்கும் வழங்கப்படவில்லை. நிறைய கூட்டம் கூடியதும், ஒரு போலீஸ் மரியாதையே இல்லாமல் ”இங்கு வரிசையில் நிற்பவர்களுக்கே அறை கிடைப்பது சாத்தியமில்லை. ஆகையில் மற்றவர்கள் உடனே கலைந்து செல்லுங்கள்” என போலீஸ் பக்த கோடிகள் மீது மரியாதையே இல்லாத தொனியில் அறிவித்தார். பிறகு முனகிகொண்டே கலைந்து சென்றார்கள்.
கட்டணம் இல்லாமல் தங்கும் மிகப்பெரிய தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிற ஹால்கள் பற்றி விசாரித்து, அன்றிரவு தங்கினோம். இரவு 10 மணிக்கு இடப்பிரச்சனையில் இரண்டு மொழிக்காரர்கள் கடுமையாக சண்டைப்போட்டுக்கொண்டார்கள். பிறகு சுற்றியிருப்பவர்கள் சமாதானம் செய்துவைத்தோம்.
காலையில் மாசி முதல் வாரம் என்பதால் நன்றாக பனி இருந்ததால், நன்றாக குளிர் இருந்தது. அதிகாலையில் 5 மணிக்கு போய் இலவச தரிசன வரிசையில் போய் நின்றோம். எங்களுக்கு முன்பும், பின்பும் பல நூறு கணக்கில் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். திரையரங்கு கவுண்டர் போல கொஞ்சம் அகலமாய் கவுண்டர்கள் வழியாக செல்ல ஆரம்பித்தோம். 20 அடிக்கு ஒருமுறை மாஸ்க் அணியுங்கள். தனிநபர் இடைவெளியை கடைப்பிடியுங்கள் என அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தார்கள். ஆனால், ஓட்டமும் நடையுமாய் போய் மக்கள் நெருக்கமாய் போய்க்கொண்டே இருந்தார்கள். பிறகு 8 மணி வாக்கில் 300 பேர் வரை உட்கார்ந்து ஓய்வெடுக்கும் அளவிற்கு அறையில் அடைத்து வைத்தார்கள். இப்படி இலவச தரிசன பக்தர்கள் போய்க்கொண்டிருக்கும் பொழுதே, வேறு ஒரு வரிசையில் இருந்து ரூ. 300 கட்டணம் பெற்றவர்களும் இணைந்துகொண்டார்கள். ஜே ஜே ஒரே திருவிழா கூட்டம்.
பாலாஜியை பார்க்கவேண்டும் என்ற பக்தி பரவசத்தில் ஒரு நான்கு வயது பையனை விட்டுவிட்டு பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துவிட்டார்கள். அவன் பரிதாபமாய் அழுதுகொண்டு நின்றுக்கொண்டிருந்தான். தேவஸ்தான ஊழியர்கள் அவனை பாதுகாத்தார்கள். கால்மணி நேரம் கழித்து எதிர் திசையில் அந்த பையனை தேடி பெற்றோர்கள் பதட்டமாய் வந்துகொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக திருப்பதி பாலாஜியை நெருக்கத்தில் பார்த்த பொழுது, காலை 9.30 மணியாகிவிட்டது. என்னருகே வந்த பக்தர் ஐந்து செகண்ட்டுக்கு மேல் நின்று பார்த்துவிட்டார் என்பதற்காக, ஒரு ஊழியர் கடுமையாக அவர் கையை பிடித்து இழுத்து, போகிற வழிப்பக்கம் தள்ளிவிட்டார். காலை 5 மணியிலிருந்து 9.30 மணி வரை கிட்டத்தட்ட 7 கிமீக்கு மேலேயே நடந்திருப்போம். இந்த நான்கு மணி நேரத்தில் ஒரே இடத்தில் மட்டும் ஒரு 20 வயது பெண் ஊழியர் கிருமிநாசினியை கையில் அடித்தார். பிறகு வேறு எங்குமே கிருமிநாசினி தரவேயில்லை.
அன்னதானம் போடுமிடத்திற்கு வரும் பொழுது காலை 10 மணியை தாண்டிவிட்டது. டிபன் நேரம் முடிந்ததால், சோறு போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே நேரத்தில் அந்த ஹாலில் நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கமாய் அமர்ந்து தான் சாப்பிட்டார்கள்.
நிற்க. இதை ஏன் விரிவாக சொல்கிறேன் என்றால், மாஸ்டர் படம் வந்த பொழுது, பிரபல நடிகருக்கு ரசிகர்கள் மேல் கொஞ்சமும் அக்கறையின்றி திரையரங்கில் 100% இருக்கைகளுக்கு அரசிடம் அனுமதி கோரினார். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ உடனே அரசு மக்கள் மீது எந்தவித அக்கறையும் இன்றி, 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி என்பதை 100%யாக உத்தரவை அளித்தது. அரசை ஊரே காறித்துப்பிய பிறகு, ஒரு மருத்துவர் ”முன்களப்பணியாளர்கள் கொரானா பெருந்தொற்றை எதிர்த்து சண்டையிட்டு, சோர்ந்து போயிருக்கிறோம். அனுமதியை திரும்ப பெறுங்கள்” என உருக்கமாய் ஒரு கடிதம் எழுதி வைரல் ஆனது. பிறகு தான் 100% என்ற உத்தரவை திரும்ப பெற்றது.
இதெல்லாம் திரையரங்கிற்கு தானா? கோயில்கள் என்றால், கொரானா பரவாதா? கொரானாவிற்கு கடவுளை அண்டாதா? அப்படியும் இல்லையே! கொரானா காலத்தில் எல்லா கோயில்களையும் ‘பாதுகாப்பாய்” மூடித்தானே வைத்திருந்தோம். இப்பொழுது இரண்டாவது அலை பெரிதாய் வரும் பொழுது யாரும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை. இப்படி தினமும் 60000த்துக்கு மேல் மக்களை கூட்டம் கூட்டமாக அனுமதிக்கிறோமே? கொத்து கொத்தாக மக்கள் நோய்வாய் படமாட்டார்களா? அதில் பல பக்தர்கள் செத்துப் போய்விட மாட்டார்களா? எவன் எக்கேடு கெட்டா என்ன? எனக்கு கல்லா நிறையனும் என்று நினைக்கிற ஒரு கேடு கெட்ட முதலாளியை போல திருப்பதி தேவஸ்தானம் சிந்திக்கிறதா? அல்லது மக்கள் நலன் மீது ஆந்திர அரசுக்கு அக்கறை இல்லையா?
திருப்பதிக்கு ஆந்திர மக்கள் மட்டுமில்லை. எல்லா மாநிலத்திலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாய் போய்வருகிறார்கள். அங்கு வந்துவிட்டு போனால், பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா பரவதா? மற்ற மாநில அரசுகளும் ஏன் இதை கண்டுகொள்ள மறுக்கின்றன?
தெலுங்கு சண்டைப் படம் என்றால், மூளையை கழட்டிவைத்துவிட்டு தான் படம் பார்க்கவேண்டும் என்பார்கள். கோயில்கள் என்றாலும் அப்படித்தானா? மூளையை கழட்டிவைத்துவிட வேண்டுமா? அறிவுபூர்வமாக சிந்திப்பது நின்றுவிடுமா?
ஊருக்கு போய் வந்த பிறகு, தொழில்முறை நண்பர் ஒரு செய்தியை அனுப்பினார். ஐஆர்சிடிசி நிறுவனம் இணையத்தில் பதிவு செய்து, திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துப் போய், பாலாஜியை பார்ப்பதற்கு, லட்டு வாங்குவதற்கு, ஊரில் வந்து பாதுகாப்பாய் இறக்கிவிடுவது வரை ஒரு கவர்ச்சிகரமான பேக்கேஜை அறிவித்திருந்தது. ”கொரானா காலத்தில் ரிஸ்க் வேண்டாம் சார். உயிர் முக்கியம் என்றதும் “ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான்” என்றார்.
திருப்பதி கோயிலில் ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் மத்தியில் கொரானா பரவியும் இருந்தது நாம் செய்திகளில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். எல்லாம் தெரிந்தும், இப்படி தினமும் 60000த்துக்கும் மேற்பட்டவர்கள் போய் வருவதை எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
இந்த சமயத்தில், தவிர்க்கமுடியாமல், ஊரடங்கு அறிவித்த பொழுது முசுலீம்கள் மீது காட்டிய காழ்ப்பு நினைவுக்கு வருகிறது. ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்ட சமயத்தில், போக்குவரத்து பிரச்சனையால் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்களை கொரானாவை திட்டமிட்டே பரப்பினார்கள் என இந்துத்துவ வெறியர்கள் விசம பிரச்சாரம் செய்தார்கள். உலகம் கொரானாவை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த பொழுது, இவர்கள் அப்பொழுதும் சிறுபான்மையினர் மீது தங்கள் வெறுப்பரசியல் செய்துகொண்டிருந்தார்கள். கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள்.
தப்லீக் ஜமாத் வழக்கு குறித்த தீர்ப்பில் மும்பை நீதிமன்றம் "நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" கூறியது.
பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டியவர்கள் எல்லாம், பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். விளைவு கொரானா நம்மை சுற்றி வளைக்கிறது. கொல்கிறது. இதையே காரணம் காட்டி, ஊரடங்கை அமுல்படுத்துவார்கள். உடைமை உள்ளவர்களுக்கு கவலையில்லை. புதுசு புதுசா சமைத்து, யூடியூப்பில் அப்லோட் செய்வார்கள். இல்லாத பெரும்பான்மை மக்கள் என்ன செய்வார்கள்? இதோ இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் கொளுத்தும் வெயிலில் குடும்பம் குடும்பமாய் நடந்து சென்றவர்களில் எத்தனை பேர் செத்தார்கள் என்ற கணக்கே இல்லை என இந்திய அரசு வெட்கமில்லாமல் உச்சநீதி மன்றத்தில் சொல்லியது!
’பேரரசர்’ நம்மை எல்லாம் தட்டில் சத்தம் எழுப்பி, கொரானவை விரட்ட சொன்னார். நமக்கு வாய்த்த பேரரசரும், மந்திரிகளும் ”மகா புத்திசாலிகள்”.
சிவில் சமூகம் தான் விழிப்போடு இருக்கவேண்டும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment