> குருத்து: Welcome Home (2020) மராத்தி

May 24, 2021

Welcome Home (2020) மராத்தி


"18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள், வன்முறை பிடிக்காதவர்கள் படத்தை பார்க்காதீர்கள் என படத்தின் டிரைலரில் சொல்கிறார்கள். உண்மை தான்."
*****

கதை. நாயகி புனேயிலிருந்து ஒரு பெண் ஆசிரியர் அந்த கிராமப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார். அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிகள் இவருக்கும், இவருடன் வேலை செய்யும் இளம் பெண் ஆசிரியருக்கும் ஒதுக்கப்படுகிறது.

கணக்கெடுப்பு சரிசெய்யும் வேலையை துவங்குகிறார்கள். அதில் ஒரு வீடு மட்டும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னந்தனியாக இருக்கிறது. குறிப்பிட்ட தொலைவிற்கு வேறு எந்த வீடும் இல்லை. ஆங்காங்கே குட்டைகளில் தண்ணீர் தேங்கியும், மரம், செடிகளாக வளர்ந்து இருக்கிறது.

அந்த வீட்டிற்கு போகிறார்கள். ஒரு வயதான அம்மா. அவருடைய நடுத்தர வயது மகன். ஒரு இளம்பெண் நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இன்னொரு வேலைக்காரன் இருக்கிறான். இவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் ஒழுங்காக பதில் சொல்ல மறுக்கிறார்கள். அப்படி சொன்ன பதில்களும் சிக்கலாக இருக்கின்றன. கிளம்பி வந்துவிடுகிறார்கள்.

நாயகிக்கு அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் தோற்றமும், அவள் சொன்ன பதில்களும் உறுத்தலாகவே இருக்கின்றன. மீண்டும் இருவரும் அந்த வீட்டிற்கு கிளம்பி போகிறார்கள். மாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு பிறகு நடப்பது எல்லாம் களேபரம் தான்.

****

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள், வன்முறை பிடிக்காதவர்கள் படத்தை பார்க்காதீர்கள் என படத்தின் டிரைலரில் சொல்கிறார்கள். உண்மை தான். படத்தை ஹாரர் வகையாக சொன்னார்கள். பேய் படமெல்லாம் கிடையாது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். கற்பனை கதையாக எடுத்திருந்தால் கூட இத்தனை வன்முறையாக காண்பித்திருக்க முடியுமா என தெரியவில்லை.

நாயகிக்கு திருமண வேலைகளுக்கு விடுப்பு எடுக்க முடியாத நிலை என்பதை தெரிவிக்கும் பொழுது, நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை எகிறுவார். வேலையை விட்டுவிடு என்பார். நாயகியின் அப்பாவும் மாப்பிள்ளை சொன்னபடி நட என போனில் மிரட்டுவார்.

நாயகியின் உடன் வேலை செய்யும் அந்த இளம் ஆசிரியரின் உடன் பிறந்த அண்ணன் மிகுந்த ஆணாதிக்கத்துடன் நடந்துகொள்வான். அந்த வீட்டில் சிக்கிக்கொண்ட வேளையில் இருவரும் தங்கள் அம்மாவின் ஆளுமைகள் குறித்து பேசிக்கொள்வார்கள். ஆணாதிக்க உலகம் பெண்களை எப்படி வதைக்கிறது என்பதை படத்தின் ஊடாக வலுவாக சொல்லியிருப்பார்கள்

படத்தில் குறைவான பாத்திரங்கள் தான். அனைவருமே நன்றாக நடித்திருப்பார்கள். பார்க்கவேண்டிய படம். SonyLiv ல் இருக்கிறது. பாருங்கள்.

Welcome Home என சமீபத்திய ஆங்கிலப்படம் ஒன்று இருக்கிறது. அந்தப் படத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். செம மொக்கப்படம். 

0 பின்னூட்டங்கள்: