> குருத்து: Pee Mak (2013) தாய்லாந்து Horror

May 25, 2021

Pee Mak (2013) தாய்லாந்து Horror

கதை. 19ம் நூற்றாண்டு. கடுமையான போர்ச்சூழல் காலம். போரில் சிப்பாயாக இருக்கும் நாயகனுக்கு கடுமையான காயம் ஏற்படுகிறது. படைப்பிரிவில் மிகவும் உதவியாக இருந்த நால்வருடன் ஊர் திரும்புகிறான்.


முதலில் நாயகனின் ஊருக்கு கிளம்புகிறார்கள். நாயகனின் இளம் மனைவி
கைக்குழந்தையுடன் ஆவலாய் காத்திருக்கிறார். அனைவரையும் வரவேற்கிறாள். நாயகன் போர் முடியும் வரை இங்கேயே இருங்கள் என நால்வரையும் வலியுறுத்துகிறான். அவர்கள் சம்மதிக்கிறார்கள். நாயகிக்கு அதில் உடன்பாடில்லை.

அடுத்தநாள் ஊருக்குள் இருக்கும் சந்தைக்குள் போனால், இவனைப் பார்த்தாலே பயந்து போய் ஓடுகிறார்கள். ஒரு சொந்தக்காரி மட்டும் ”உன் பொண்டாட்டி செத்துப்போய், பேயாகிவிட்டாள்” என்கிறாள். குழப்பமாய் வீடுவந்து சேர்கிறார்கள்.

பிறகு நண்பர்களுக்கு சந்தேகம் மெல்ல வருகிறது. அதற்கான தடயங்களும் சிக்கி அவள் பேய் தான் என உறுதியானதும் பயபீதி ஆகிறார்கள். அங்கிருந்து ஓடிவிடலாம் என நினைத்தால், நண்பனை விட்டுவிட்டு போக மனது வரவில்லை. நாயகனுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறான்.

அவனையும் அங்கிருந்து அழைத்துக்கொண்டு போக முயற்சி செய்கிறார்கள். ஏக கலாட்டாகிவிடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி முடிக்கிறார்கள்.
****


தாய்லாந்தின் நாட்டுப்புற கதைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு மக்களிடையே இருக்கும் இயல்பான மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களை வைத்துக்கொண்டு கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரங்கள் ஆறு பேர். ஆறு பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

நம்ம ஆட்களுக்கு நிறைய நகைச்சுவை பேய் படங்கள் பார்த்து பேயோடு நாம ரெம்ப பழக்கமாகிவிட்டதால், இந்தப் படம் சராசரியாய் தெரியும். ஆனால் தாய்லாந்தில் செமையாய் கல்லா கட்டியிருக்கிறது. நிறைய விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்தப் படத்தின் அதிரி புதிரி வெற்றியில் இரண்டாம் பாகம் கூட எடுத்திருக்கிறார்கள்.

கணவனுக்காக ஆசை ஆசையாய் காத்திருக்கும் நிறை மாத இளந்தாய், கவனிக்க யாரும் இல்லாததால், இறக்கிறாள். வாழ்வதற்கு பெரும்விருப்பம் இருப்பதால், பேயாக வாழத்துவங்குகிறாள். படத்தின் முடிவு இதுவரை நாம் பார்த்த பேய்படங்களை விட வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் முடித்திருக்கிறார்கள். போர்ச்சூழலையும், பேய்ப்படத்திற்கான சூழலையும் கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும்
அருமையாக
கொண்டுவந்திருக்கிறார்கள்.
பெரிய எதிர்பார்ப்போடு பார்க்காதீர்கள். ஏமாற்றமாகிவிடும். நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: