> குருத்து: Fargo (1996) நல்ல திரில்லர் படம்

May 27, 2021

Fargo (1996) நல்ல திரில்லர் படம்


கதை. நிறைய பணப்பிரச்சனை. என்ன செய்யலாம்? எப்படி சமாளிக்கலாம்? என யோசித்து, தன் பொண்டாட்டியையே கடத்தி, பணக்காரரான தன் மாமானாரிடம் ஒரு பெரிய தொகையை தேத்தி, பிரச்சனைகளிலிருந்து வெளியே வரலாம் என முடிவெடுக்கிறான்.


அவனே இரண்டு கடத்தல்காரர்களை நியமிக்கிறான். திட்டமிட்டப்படி கடத்துகிறார்கள். போகிற வழியில், சந்தேகப்பட்டு போலீசு மடக்க, மாட்டிக்கொள்வோம் என பயத்தில் சுட்டுக்கொல்கிறார்கள். காரில் அந்தப் பக்கம் கடந்த இருவர் பார்த்துவிட, விரட்டிப்போய் அவர்களையும் சுட்டுக்கொல்கிறார்கள்.

ஒரு கடத்தல் நாடகம் எவ்வளவு கொலைகளுக்கு இழுத்துவிடுகிறது என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***

பணப்பிரச்சனை. மாமானாரிடம் வெளிப்படையாக சொல்லி கேட்டிருக்கலாம். தன் மனைவி மூலமாக கேட்டிருக்கலாம். சொல்லி கேட்பதற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கவேண்டுமல்லவா? குறுக்கு வழிகள் எப்பொழுதும் ஆபத்தானவை தான்.

பல தமிழ்ப்படங்களில் கடத்தலை விளையாட்டாகவும், அபத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆளைக் கடத்துவது எவ்வளவு சிரமம் தெரியுமா என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

அரை நாளுக்கு ஒரு வார்த்தை பேசும் ஒரு ஆள், லொட லொடன்னு பேசுகிற ஒரு ஆள். இருவரும் நல்ல காம்பினேசன் தான். இவர்கள் தான் கடத்தல்காரர்கள்.

ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் போலீஸ் ஆபீசர் தான் இந்த கொலைகளை எல்லாம் விசாரிக்கிறார். சுவாரசியமான பாத்திரம். “இவ்வளவு சின்ன பணத்திற்காகவா கொலைகள்?” என இறுதியில் கேட்கும் பொழுது, அமைதியாய் இருப்பான் அந்த கடத்தல்காரன். மெளனகுரு படத்தில் வரும் அந்த பெண் ஆபிசர் பாத்திரம் இந்த படம் பார்த்து கூட யோசனை வந்திருக்கலாம். பனிக்காலத்தில் எடுத்திருக்கிறார்கள். எங்கும் பனி. இந்த சூழலும் படத்திற்கு நல்ல மூடை தருகிறது.

No country for old men படத்தின் இரட்டை இயக்குநர்கள் தான் இந்தப் படத்தின் இயக்குநர்களும்! நல்ல திரில்லர். பல விருதுகளையும் வென்றிருக்கிறது. இதே படத்தின் பெயரில் ஒரு தொலைகாட்சி சீரிஸ்ஸிம் வந்திருக்கிறது. அதுவும் நன்றாக இருப்பதாக ஒருவர் எழுதியிருந்தார்.

0 பின்னூட்டங்கள்: