> குருத்து: ”வெற்றி நடை போடும் தமிழகமும் மாணவன் ரியாசும்”

May 27, 2021

”வெற்றி நடை போடும் தமிழகமும் மாணவன் ரியாசும்”



மூத்த ஆசிரியர்களும், இளைய ஆசிரியர்களும் நேற்று நீயா நானாவில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். விவாதத்திற்கு இடையே, ஊரடங்கிற்கு பிறகு, மாணவர்கள் சிலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்கள். திரும்பவே இல்லை. அங்கு ஏதாவது வேலையில் சேர்ந்துவிட்டார்கள்.


சென்னையிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி 12ம் வகுப்பு மாணவர்கள் வரை கிடைக்கிற பல வேலைகளில் சேர்ந்துவிட்டனர். பெற்றோர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால், பிள்ளைகளின் வருமானம் குடும்பத்திற்கு பெரிய உதவியாய் இருக்கிறது. தேர்வு மட்டும் எழுதுங்கள். தேர்வாகிவிடுவீர்கள் என சொன்னாலும் வர மறுக்கிறார்கள். பெற்றோர்களும் இனி தன் பிள்ளைகள் வரமாட்டார்கள் என உறுதியாக சொல்கிறார்கள்.

இந்த சமயத்தில் பத்தாம் வகுப்பு வந்த ரியாஸ் நினைவுக்கு வருகிறான். கொரானா தொற்றை முன்வைத்து சமூக ஊரடங்கை அரசு அமுல்படுத்தியது. கார்கள் ஓடவில்லை. ரியாசின் தந்தை வேலை இழந்தார். வருமானம் இல்லை. குடும்பம் பரிதவித்தது. உழைத்தால் தானே இங்கு பலருக்கும் சாப்பாடு. தற்காலிக தீர்வாக, வீட்டில் டீ தயாரித்து, மண்ணடி பகுதியில் விற்க ஆரம்பித்தார். வீட்டில் தானே இருக்கிறேன் என அப்பா தடுத்தும் ரியாசும் டீ கொடுக்க ஆரம்பித்தான்.

கடந்த ஜூலை மூன்றாம் வாரத்தில், மண்ணடி பகுதியில் அரண்மனைகாயர் தெருவில் புதிதாக கட்டப்படும் வரும் ஏழு மாடி கட்டிடத்திற்கு சென்றான். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டீ கொடுத்துவிட்டு, கவனிக்காமல் லிப்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காலை வைக்க, அங்கிருந்து கீழே மல்லாக்க விழுந்து செத்தே போனான். அப்பொழுது அவனுக்கு வயது 15.

சமூக ஊரடங்கை அறிவித்து வீட்டில் சிறை வைத்த அரசு தானே உயிர் வாழ வழியும் செய்திருக்கவேண்டும். கணக்கிற்காக ரூபாய் ஆயிரம் கொடுத்துவிட்டு பொறுப்பிலிருந்து கை கழுவியது. ஆளும் கட்சியை தவிர மற்ற அனைவரும் குடும்பத்திற்கு 7500 கொடுங்கள் என கோரிக்கை வைத்து போராடினார்கள். கண்டுகொள்ளவேயில்லை.

தேர்தல் வந்ததும், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1500 தருகிறேன். வாசிங் மெஷின் தர்றேன் என ”வெற்றி நடைபோடும் தமிழகமே!” என ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வெட்கமே இல்லாமல் விளம்பரம் போடுகிறார்கள். ரியாசை போல எத்தனை குழந்தைகள் தங்கள் படிப்பை, உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தெருவில் விட்டு மக்கள் வெளுக்கவேண்டும்.

முகநூலில்... 05/04/2021 அன்று எழுதியது.

0 பின்னூட்டங்கள்: