> குருத்து: May 2021

May 30, 2021

அறிவிக்கின்ற கோவிட் சோதனை முடிவுகள் என்பது மூழ்கி இருக்கும் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே!


”அறிவிக்கின்ற கோவிட் சோதனை முடிவுகள் என்பது மூழ்கி இருக்கும் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே! மாநிலத்திற்கென்று சுகாதார துறை அமைச்சர் உடனே நியமிக்கப்படவேண்டும்”

- திரிபுரா பா.ஜனதா எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன்

மக்களிடையே பரந்துபட்ட அளவில் கோவிட் சோதனைகள் செய்யப்படவேண்டியது மிக அவசியம். தடுப்பூசி உரிய நேரத்தில் மக்களுக்கு பரவலாக போடப்படவேண்டும். உள்ளூர் ரயில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பரவலை தடுப்பதற்கான எந்த வசதியும் செய்யப்படவில்லை. ஆகையால், உள்ளூர் ரயில் பயணத்தை உடனே ரத்து செய்யவேண்டும்.

கொரானா நோயாளிக்கு ஒரு நாளைக்கு உணவுக்கென ரூ. 380 ஒதுக்கப்படுகிறது. என்ன உணவு சாப்பிடுவது என வழிகாட்ட உணவு நிபுணர் இல்லை. உணவின் தரம் மிக மோசமானதாக இருக்கிறது. இதை எல்லாம் யாரும் அரசு தரப்பில் கண்காணிக்கப்படுவதும் இல்லை.

மாநிலத்தின் முக்கிய மருத்துவமனையான GB PANT மருத்துவமனை நரகத்திற்கான கதவு போல இருக்கிறது. உள்ளே நோயாளி போனதும் வெளியே போவோமா என சந்தேகம் வந்துவிடுகிறது.

இவ்வளவு சிக்கலான சூழலில் முதல்வரே சுகாதார துறையை கையில் வைத்திருக்கிறார். அவருக்கு இருக்கும் வேலை நெருக்கடியில் சுகாதார துறையை எப்படி முழுமையாக கவனிக்கமுடியும்? ஆகையால், சுகாதார துறைக்கு என ஒரு அமைச்சரை உடனே நியமிக்கவேண்டும்.

இதை சொல்பவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ இல்லை. திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியில் எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன் தான் சொல்கிறார். பா.ஜனதா ஆளும் மத்திய அரசு எப்படியோ, அதன் வழியில் பா.ஜனதா மாநில அரசுகளும் எல்லா கோளாறுகளுடனும் மக்கள் உயிரில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விளைவு மக்கள் கொத்தாய் கொத்தாய் செத்துக்கொண்டிருக்கிறர்கள். எரிப்பதற்கு கூட பல மணி நேரம் வரிசையில் நிற்கிறார்கள்.

சுதீப் ஐந்துமுறை எம்.எல்.ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் எதிர்கட்சி தலைவரும் கூட! ஜூன் இவர் முன்னள் திரிபுரா முதல்வர் சமர் ரஞ்சனின் மகன். 2016ல் காங்கிரசை விட்டு திரிணமூல் காங்கிரசில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து அவரும், இன்னும் ஐந்து திரிணமூல் கட்சி எம்.எல்.ஏக்களும் பா.ஜனதாவில் இணைந்தனர்.

- Wire ல் 25/05/2021 அன்று வந்த கட்டுரையில் இருந்து....

https://thewire.in/politics/tripura-bjp-sudip-roy-barman-biplab-deb-covid-19-gb-pant-hospital

பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது, எரிந்து கொண்டிருக்கும் வயிறுகள் கண்டுகொள்ளப்படவில்லை.


கொரானா இரண்டாவது அலையில், பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது, எரிந்து கொண்டிருக்கும் வயிறுகள் கண்டுகொள்ளப்படவில்லை.

தில்லியில் உள்ள ஒரு பகுதி ரேசன் கடையில் மக்கள் வந்து பொருட்களை கேட்டு செல்வதும், கடை அலுவலர் இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தில்லியில் அந்த பகுதியில் உள்ள மொத்தம் 110 ரேசன் கடைகளில் மே 15 முதல் மே 20 வரைக்கும் 44 கடைகளில் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்தார்கள். மீதிக்கடைகளில் இன்னும் ஏதும் விநியோகிக்கவில்லை. மாதத்தின் முதல் வாரத்திலேயே விநியோகித்துவிடுவது வழக்கம். ஆனால், இன்னும் விநியோகிக்காததற்கு காரணம் மாநில ரேசன் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மத்திய அரசு தரும் ரேசன் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை. மாநில பொருட்களுக்கு ஒருமுறையும், மத்திய அரசின் பொருட்களுக்கு ஒரு முறையும் இரண்டாவது அலையின் கடும் நெருக்கடியில் இருமுறை கொடுக்க முடியாது அல்லவா! ஆகையால் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒன் நேஷன். ஒன் ரேசன் கார்டு திட்டம் இன்னும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவில்லை என்பது தனியாக எழுதவேண்டிய விசயம்.
கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவுக்கே வழியில்லாமல் நடந்தே பல லட்சம் பேர் நடந்தே சொந்த ஊர் போய் சேர்ந்தார்கள். இந்த பயணத்தில் பசியிலும், பட்டினியிலும், கொடுமையான வெய்யிலிலும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செத்துபோனார்கள். அந்த அனுவத்தில் இந்த முறை சுதாரித்து ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். ஆகையால் பல வீடுகள் இப்பொழுது பூட்டிக்கிடக்கின்றன. ஆனால் சிலரால் அப்படி கிளம்ப முடியவில்லை. ”ஊருக்கு போனாலும் அங்கும் சாப்பிடுவதற்கு பணம் வேண்டுமே! தில்லியில் உள்ள வீட்டிற்கும் வாடகை கொடுக்கவேண்டுமே!” என்பது தான் காரணம்.
இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லை. அப்படி அறிவித்தால், மாநில அரசுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமே! ஆகையால் மத்திய அரசு அந்த பொறுப்பிலிருந்து கழன்று கொண்டது. ஆனால், மாநில அரசுகள் நிலவரத்தின் தீவிரத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கின்றன. தில்லியில் ஐந்தாவது வாரம் ஊரடங்கு தொடர்கிறது. மும்பையில் ஆறாவது வாரம். கொல்கத்தாவில் மூன்றாவது வாரம். சென்னையில் இரண்டாவது வாரம்.
தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. சிறு சிறு நிறுவனங்களிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களையும் மக்களின் உயிர்களை காக்க அரசு எடுத்துக்கொண்டு போய்விட்டது. அவர்களுக்கு வருமானத்திற்கு மாற்று வழிகள் இல்லை.
சிறு சிறு தொழிற்சாலைகள் இயங்கினால் தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவார்கள். ஊரடங்கு என தொடர்ந்து இருப்பதால், பணப்புழக்கம் நிறுவனங்களிடமும் இல்லாமல் போய்விடுகிறது. விளைவு வேலைப் பார்த்தத்திற்கான நிலுவை சம்பளத்தை கூட பெற முடிவதில்லை.
கடந்த ஆண்டாவது பெண்களின் கணக்கில் அரசு ரூ. 500 போட்டது. தொழிலாளர்களுக்கு சில திட்டங்களை அறிவித்தது. இந்த ஆண்டு இதுவரை எதையும் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழக அரசு நான்காயிரம் நிவாரண நிதியாக தருவதாக அறிவித்ததில் முதல் தவணையாக மே மாதம் ரூ. 2000 ரேசன் அட்டைதாரர்களுக்கு தந்திருக்கிறார்கள். இதெல்லாம் ரேசன் அட்டைதாரர்களுக்கானது! ரேசன் அட்டை இல்லாதவர்களும் இங்கு ஒவ்வொரு பகுதியிலும் லட்சங்களில் உண்டு. அவர்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது?
சென்னையில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதித்து இருக்கிறார்கள். அத்தியாவசிய தொழிற்சாலைகள் திறக்க அனுமதித்திருக்கிறார்கள். பொதுப்போக்குவரத்து இல்லை. வாடகை, மருத்துவம் என அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?
கடந்த அலையின் பொழுது சிவில் சமூகம் தன் சக்திக்குட்பட்டு உணவு தந்து, பொருட்கள் தந்து ஏதுமற்றவர்களை காப்பாற்றியது. இந்த அலை கடந்த அலையை விட தாக்கம் பெரிது. சிவில் சமூகமும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. இப்பொழுது தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஊரடங்கு காலத்திலாவது மக்கள் சிலரிடம் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. இப்பொழுது கடனை வாங்கி வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
அசிம்பிரேம்ஜியின் பல்கலை கழகம் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்ததில் மக்கள் வருமான இழப்பால் தங்கள் சாப்பிடும் அளவும், சத்தின் அளவும் குறைந்திருக்கிறது. 230 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றிருக்கிறார்கள். முறைசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பாதிபேர் முறைசார் தொழிலாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். வருமான இழப்பு, வாழும் முறை எல்லாம் மாறியிருக்கிறது.
மும்பையில் முன்பு ஒரு அறையை பகிர்ந்துகொண்டு வாழ்ந்த ஒருவர், இப்பொழுது அறை வாடகை கொடுக்கமுடியாமல் இப்பொழுது தெருவில் தூங்குகிறார். கடலில் குளிக்கிறார்.
இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்காக மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 பணமாக கொடுக்கப்படவேண்டும் எனவும் அசிம்பிரேம்ஜி பல்கலை கழக ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் இந்த அவல நிலையை மத்திய அரசு புரிந்துகொண்டு நடக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுவதும் குறுக்கும் நெருக்குமாய் மக்கள் அலைந்த பொழுதே கண்டுகொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காக மட்டுமே சிந்திக்கும் நம் பிரதமர் இதையெல்லாம் கண்டுகொள்வாரா?
தொழிலாளி வர்க்கம் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். வறுமையில் சாவதா? உரிமைகளுக்காக போராடுவதா என!

May 27, 2021

பகுதியில் புது டிபன் கடை


காலை 10.15க்கு போய் இட்லி வாங்கும் பொழுது, "சாம்பார் மட்டும் தான். சட்னி தீர்ந்திருச்சு"

சுதாரித்து நேத்து 9.15க்கு போனேன். திரும்பவும் அதே பதில். இவங்க சட்னி செய்வாங்களா! இல்லையா? சந்தேகம் வந்தது.
இன்று இன்னும் சுதாரித்து... 8.15க்கு போனேன்.
சட்னி இருந்தது. வடை கேட்டேன். தீர்ந்து போச்சு என்றார்கள்.
நமக்கு வடை கிடைக்க வாய்ப்பேயில்லை! 🙂

கொரானா சாவுகளை மூடிமறைக்கும் குஜராத் அரசு!


குஜராத் இந்த ஆண்டு மார்ச் 1ந் தேதி முதல் மே 10 வரை அறிவித்த கோவிட் இழப்புகள் 4218 மட்டும். ஆனால், மக்களிடம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கியதோ 1.23 லட்சம்.


குஜராத்திலிருந்து வரும் சமீபத்திய செய்திகள் கவலைக்குரியதாக இருக்கின்றன. ’திவ்ய பாஸ்கர்’ என்ற செய்தி நிறுவனம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோவிட் உயிரிழப்புகளையும், வழங்கப்பட்ட சான்றிதழ்களிலும் பெரும் எண்ணிக்கை முரண்பாடு இருப்பதாக வெளியிட்ட செய்தியை இப்பொழுது ஸ்கிரோல் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கோவிட் உயிரிழப்புகள் குறித்து குஜராத் முதல்வர் சமாளிப்பதற்கு ஏதோதோ விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எதிர்கட்சிகள் இப்பொழுது இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி இதுகுறித்த விரிவான விசாரணை தேவை என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

குஜராத்தை பல ஆண்டுகளாக ஆண்ட மோடி குஜராத்தை தூக்கி நிறுத்தினார். அதே போலவே இந்தியாவைவும் தூக்கி நிறுத்துவார் என்று தான் பொய்யான பிரச்சாரத்தை நாடு முழுவதும் திட்டமிட்டே பரப்பினார்கள்.

குஜராத்தில் உள்ள பொது சுகாதார கட்டமைப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை இப்போதைய கொரானா உயிரிழப்புகள் பல்லிளிக்க செய்துவிட்டன. குஜராத்தை ஆண்ட மோடி இந்தியாவை எவ்வளவு மோசமாக ஆண்டு கொண்டிருக்கிறார் என்பதை சர்வதேச ஊடகங்கள் கிழித்து தொங்கவிடுகின்றன.

ஒரு மோசமான பிரதமர் இருந்தால், எவ்வளவு உயிர்ச்சேதம் ஆகும் என்பதை கண் முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு மோசமான காட்சிகளை பார்க்க போகிறோம் என்பதை நினைக்கும் பொழுது கதி கலங்குகிறது.

கொலைகார மோடியே,
பதவியிலிருந்து விலகு!

விரிவாக படிக்க....

https://scroll.in/latest/994906/gujarat-is-undercounting-covid-19-deaths-shows-divya-bhaskar-report?fbclid=IwAR0wwW5U2QVhM0uTaSVUcAFtvT0NL27S60NKKahnY2SDW-kbj9KPhEZdvNw

A Day 2017 - தென்கொரியா


நேற்றிரவு இந்தப் படத்தை யூடியூப்பில் பார்த்தேன். டைம் லூப் படம். உணர்வுபூர்வமான படம். இது பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா என தேடும் பொழுது, இந்தப் பதிவு கண்ணில்பட்டது. இதைவிட நன்றாக எழுதிவிட முடியாது. ஆகையால் அதையே பகிர்ந்தும்விட்டேன்.

****

கொரோனா லீவில் எத்தனையோ ஆங்கிலப்படம் பார்த்தாலும் நண்பர்களுக்கு சொல்ல ஒரு படம் கிடைக்காததால் மீண்டும் கொரியக் கரையோரம் ஒதுங்கினேன்.

நீண்ட இடைவேளைப் பின்னர் மீண்டும் A DAY (2017) பார்த்தேன். இது ஒரு டைம் லூப் ஸ்டோரி.

மொதல்ல டைம் லூப்புன்னா என்னான்னு பாக்கலாம்.

காலங்காத்தால திடீர்னு கண்ண முழிப்பீங்க. “மணி ஒன்பதாச்சு எந்திரிக்கலையா”னு மனைவியோட அசரீரி கேட்கும். நீங்க மெதுவா எந்திரிக்கும்போது “கொரோனோவுக்கு இன்னும் ரெண்டு மாசம் லீவு குடுப்பாங்களா”ன்னு பையன் கேட்பான். கெளம்பி வெளிய வந்து தமிழ் மாநில உணவான தோசைய சாப்பிடும்போது “மறுபடி நேத்தோட சாம்பாரான்னு” பொண்ணு கேட்பா. “வெங்காயம், தக்காளி” வேணும்னு மனைவி சொன்னதும் நீங்க வண்டிய எடுத்துட்டு ரோட்ல போகும்போது ஒரு லேடி ரெண்டு காலையும் வெளிப்பக்கம் நீட்டிக்கிட்டு ஸ்கூட்டி ஓட்டிட்டு போவாங்க. போல்ஸ்கார் உங்களை மட்டும் நிப்பாட்டி “கொரோனா டைம்ல எதுக்கு வெளிய வந்தேன்னு” தோப்பு கரணம் போட சொல்வார். வாய் இருக்காம “அந்தம்மாவ என் விட்டீங்க”னு கேட்பீங்க. “அவங்கெல்லாம் சிங்கப்பெண்ணு”னு சொல்வார். “நானும் புலிக் குட்டி தாங்க”ன்னு சொன்னதும் உங்களை அடிச்சி கொன்னுடுவாங்க.

திடீர்னு நீங்க மறுபடியும் காலங்காத்தால எந்திரிப்பீங்க “மணி ஒன்பதாச்சு எந்திரிக்கலையா”னு மனைவியோட அசரீரி அதே மாதிரி கேட்கும். உங்களுக்கு அடிபட்டு செத்தது எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும். பையன் ரெண்டு மாசம் லீவு கிடைக்குமா என்பான், பொண்ணு நேத்து சாம்பாரான்னு சொல்வா. தக்காளி, சிங்கப்பொண்ணு, அடிபட்டு சாவீங்க. மறுபடியும் திடுக்கிட்டு எந்திரிப்பீங்க. எல்லாம் அதேமாதிரி மீண்டும், மீண்டும்.

நீங்க எதை மாத்தி செஞ்சாலும் போலீஸ் அடிச்சி கொல்வாங்க. காலம் உங்களிடம் மட்டும் வட்டமா மாட்டிக்குது. நீங்க இதை மாத்தியாகனும். அடிபட்டு சாவாம.

இந்த கதைய ஹாலிவுட்டில் ஒலகத்தை காப்பாத்த பலவிதத்தில் எடுத்துட்டாங்க.
தமிழில் எடுத்தா காதலியவோ, மச்சினியையோ காப்பாத்த எடுப்பாங்க. நமக்கு சோத்துக்கு வழியில்லன்னாலும் காதல் முக்கியம்.

A DAY வில் ஒரு டாக்டர் வெளிநாடு போயிட்டு திரும்பி வரும்போது பிளானில் கண் விழிக்கிறார். கீழிறங்கியதும் தனது சிறிய பெண் ஆக்சிடெண்டில் சாவதைப் பார்க்கிறார். மீண்டும் கண் விழிக்கிறார். ஆட்டம் ஆரம்பம். பெண்ணை காப்பாத்தணும். எவ்வளவோ அட்டகாசமான ஐடியா பண்ணாலும் பெண்ணு செத்துட்டே இருக்கிறா.
அருமையான
ட்வீஸ்ட்டுகள். பதட்டம். எந்திரிச்சி வெளிய வந்து ஹீரோவிற்கு ஓர் போன் பண்ணி சொல்லலாமான்னு தோணும். மிஸ் பண்ணாதீங்க.

நம்ப செத்து பொறந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா போனாலும் பரவாயில்லன்னு அடுத்த தடவ கொரியாவில் பொறக்கணும். என்னா ஹீரோயின் சாரி படங்கள்…

– அசோக்குமார்

இந்தியாவில் சராசரியாக 1 லட்சம் இந்தியர்களுக்கு 91 மருத்துவர்களே இருக்கிறார்கள்.


இந்தியாவில் சராசரியாக 1 லட்சம் இந்தியர்களுக்கு 91 மருத்துவர்களே இருக்கிறார்கள்.


மாநிலம் வாரியாக இதன் எண்ணிக்கையும் மாறுபடுகிறது.
கர்னாடகாவில் 197 மருத்துவர்கள்.
தமிழ்நாட்டில் 195 மருத்துவர்கள்
இந்துத்துவா மாடல் குஜராத்தில் 101 மருத்துவர்கள் தான்.
இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என ஏற்றத்தாழ்வு நிச்சயம் இருக்கின்றன.

உத்திரப்பிரதேசத்திலோ 37 மருத்துவர்கள் தான். இந்த லட்சணத்தில் தான் உத்திரபிரதேசத்தில் கும்பமேளாவை நடத்தினார்கள்.

மக்களுக்காகவாவது முதல் கோவிட் அலைக்கு பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. மருத்துவர்கள், மருத்துவ துறை சார்ந்த பணியாளர்கள், தூய்மைப்பணி ஊழியர்கள் என அனைத்தும் முன்களப்பணியார்களுக்கோ இன்னும் ஓய்வு இல்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

கோவிட் இரண்டாம் அலை சுனாமி போல அடிக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ மந்த வேகத்தில் செயல்படுகிறார்கள். இடைவெளி காலத்தில் அவர்கள் தயாராகவேயில்லை.

இப்பொழுது ஆங்காங்கே படுக்கைகளை மட்டும் உருவாக்குவதாக நம்மிடம் காட்டுகிறார்கள். ஆனால், மருத்துவர்களை, மருத்துவ பணியாளர்களை நியமிக்காமல் இருக்கும் மருத்துவர்களைத் தான், பயிற்சி மருத்துவர்களைத் தான் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கிறார்கள்.

கோவிட் கொல்வது கொஞ்சம் என்றால், ஆட்சியில் இருப்பவர்களின் அலட்சியமும் அஜாக்கிரதையும் தான் மக்கள் நிறைய பேரை கொன்று கொண்டிருக்கின்றன.

குற்றவுணர்வு கொள்ளத்தேவையில்லை.


இந்தியா மாதிரி தேசத்தில் புத்தகம் வாசிப்பது ஒரு Luxury. புத்தகம் வாங்க பணம் இருக்கணும் அல்லது பொறுமையாக உட்கார்ந்து வாசிக்க நேரம் இருக்கணும். படிப்பதற்கு ஏற்ற வாழ்விடம் இருக்கணும். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அன்றாட உணவுக்காகவும் பிழைப்புக்காகவும் தினமும் 12 மணிநேர உடல் உழைப்பை கொட்டுகிறவருக்கு உழைப்பு சுரண்டல் சகஜமாகிவிட்ட நாட்டில் வாசிப்பெல்லாம் கூடுதல் உழைப்புதான்.


இவை இரண்டையும் தாண்டி உழைத்து உழைத்து சோர்ந்து போகாமல் உடலில் வாசிப்பதற்கான அயர்வு இல்லாமல் இருக்கணும். அதனாலேயே தமிழ்நாட்டில் வாசிப்பு பழக்கம் என்பது குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே வாய்க்கிற ஒன்றாக இருந்திருக்கிறது. அதனாலேயே பலருக்கும் அது இன்னமும் எட்டாக்கனிதான். அதனாலேயே நிறைய புத்தகம் வாசிப்பதை குறிப்பாக அதிக உழைப்பை கோருகிற இலக்கியங்களை வாசிப்பதை இயற்றுவதை பெருமையாக சொல்லிக்கொள்வதை மேட்டுக்குடித்தனமாகவே பார்க்கிறேன்.

தன்னை அறிவுரீதியாக உயர்ந்த இனமாக காட்டிக்கொள்ளவே பலருக்கும் வாசிப்பு பயன்படுகிறது. அதனாலேயே புத்தகம் வாசிக்கிறவர்கள் எல்லாம் மேன்மையானவர்கள் வாசிக்காதவர்கள் எல்லாம் கீழ்மையானவர்கள் என்கிற கருத்துகளை வெறுக்கிறேன்.

எல்லா பழக்கங்களையும் போலவேதான் புத்தகவாசிப்பும். யார் வாசிக்கிறார்கள் எதை வாசிக்கிறார்கள் என்பதை பொறுத்தே அது பலன்தருகிறது. அனேகம் நூல்களை படித்து குவித்துவிட்டு இன்னமும் சனாதனத்திற்கும் மதவெறிக்கும் பாஸிஸத்திற்கும் ஆதரவாக நிற்கிற எத்தனையோ பேரை அன்றாடம் பார்க்கிறோம். எதுவுமே வாசிக்காமல் தான் எடுக்கிற எல்லா முடிவுகளிலும் சகமனிதன் மீதான அக்கறையை கருணையை வெளிப்படுத்துகிற எத்தனையோ கோடி மனிதர்களையும் பார்க்கிறோம்.

உடற்பயிற்சி போல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போல வாசிப்புப்பழக்கமும் ஒரு நல்ல பழக்கம் அவ்வளவுதான். ஆனால் அது ஒன்றே மனிதனை மேன்மையானவனாக மாற்றிவிடாது. அதுவும் உதவும். நிறைய வாசிக்க வாசிக்க அறிவு மேம்படும். ஆனால் அடிப்படையான அற உணர்ச்சியை அடுத்தவர்களின் அனுபவங்களின் வழியிலான வாசிப்பு கொடுத்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

வாய்ப்புள்ளோர் நிறைய புத்தகங்கள் வாசியுங்கள். வாய்ப்பில்லாதோர் குற்றவுணர்வு கொள்ளத்தேவையில்லை.

பத்திரிக்கையாளர்

கொரானா ஒரு புயலைப் போல தாக்குகிறது!


கொரானா ஒரு புயலைப் போல தாக்குகிறது!

மருத்துவமனைகளில் சுவாசிப்பதற்கு ஆக்சிசன் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்!

கொரானா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளது. ஆக்சிசன் இல்லை; படுக்கைகள் இல்லை; மருந்துகள் பற்றாக்குறை; கருப்புச் சந்தையில் பல ஆயிரங்களுக்கு மருந்துகள் விற்பனை; எரிப்ப்பதற்கு கூட பல மணிநேரங்கள் காத்திருக்கவேண்டிய அவலநிலை என செய்திகள் அலறிக்கொண்டு இருக்கின்றன.

500 கொரானா நோயாளிகள் உள்ள தில்லி GTB மருத்துவமனையில் ஆக்சிசன் தீர்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டார்கள். “நாங்கள் எங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆக்சிசன் சிலிண்டர்கள் வந்ததை பார்த்ததும் நாங்கள் ஆனந்த கண்ணீர்விட்டோம்” என்கிறார் ஒரு மருத்துவர் இந்தியா டுடேவிடம்!

சிபிஎம்மும், காங்கிரசும் மேற்கு வங்கத்தில் கொரானா நெருக்கடியை உணர்ந்து தங்களது பரப்புரையை நிறுத்திவிட்டார்கள். ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். இந்த கடும் நெருக்கடியில் உத்திரபிரதேசத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கும் கும்பமேளாவையும் உற்சாகமாக நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

செவ்வாய்கிழமை இரவு “ஆக்சிசன், மருந்துகள் தேவை அதிகரித்துள்ளது. யாரும் பதட்டப்படவேண்டாம். தேவையான எல்லாவற்றின் உற்பத்தியையும் விரைந்து செயல்பட சொல்லி உத்தரவிட்டுள்ளோம்” என ஊடகங்கள் வழியே பிரதமர் அறிவிக்கிறார்.

கொரானாவின் இரண்டாவது அலை கடுமையாக இருக்கும் என பிற ஆய்வுகள் மட்டுமல்ல! மத்திய அரசின் சொந்த ஆய்வு கூட அதையே தான் உறுதிப்படுத்தியது! ஆனால் தலைநகரத்திலேயே கொரானா நோயாளிகள் ஆக்சிசனுக்காக அவர்கள் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்திய கிராமங்களை நினைத்துப் பார்த்தால், சொல்லவே தேவையில்லை!

#படம் : அகமதாபாத்தில் மருத்துவமனையில் நுழைவதற்காக ஆம்புலன்சில் காத்திருக்கிறார்கள்.

The Court - மராத்தி (2014)


தலித்துகளின் வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதில் செத்துப் போகலாம் என மனம் கொதித்து பாடல் எழுதி மேடைகளில் பாடுகிறார் ஒரு நாட்டுப்புற பாடகர். தலித்துகள் மத்தியில் எழுச்சி வந்துவிடும் என பயந்து, “அவர் பாடியதால் ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்” ஆகையால் தற்கொலைக்கு தூண்டியதாக என ஒரு பொய்வழக்கை போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.


அந்த வழக்கை கையாளும் அரசு தரப்பு வழக்கறிஞர், பாடகரின் விடுதலைக்காக போராடும் ஒரு வழக்கறிஞர், நீதிபதி, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அதன் இயல்புகளோடு காட்டுகிறார்கள். பிறகு அவர் விடுதலையானாரா என்பதை முழுப்படமும் விவரிக்கிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொரு முறை வழக்காடும் பொழுதும், சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி பெயில் கிடைக்காமல் செய்கிறார். அவர் தன் வேலையை ஒரு வழக்கமான அலுவல் வேலையாக பார்க்கிறாரே தவிர ஒரு மனிதன் வாழ்க்கை தன் கையில் உள்ளது என்ற பொறுப்புணர்ச்சி அவரிடம் சிறிதும் இல்லை.

பாடகரின் தரப்பு வழக்கறிஞர் பொறுமையாக போராடுகிறார். கோபப்பட்டோ அவசரப்பட்டோ ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அவர் கற்ற அனுபவம் அவருக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஒரு நீதிபதி பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. இந்த அரசின் ஒரு பகுதி தானே நீதிமன்றமும். அதுவும் நமது அடக்குமுறை சட்டங்கள் எல்லாம் காலனிய அரசின் பிரதிகளே. ஆகையால் அரசு தரப்பு என்ன விரும்புகிறதோ அதையே தீர்ப்பாக வழங்குகிறார். ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் கை இல்லாத (sleeveless) ஆடை உடுத்தி வந்தார் என, விதி அனுமதிக்காது என வழக்கை இன்னொரு தேதிக்கு மாற்றி வைக்கிறார்.

சாக்கடை அள்ளும் தொழிலாளியாக பணிபுரியும் ஒருவருக்கு தற்காப்புக் கவசங்களோ, தேவையான கருவிகளோ அரசு தருவதில்லை என வழக்கு விசாரணையில் வரும். அதைப் பற்றி நீதிபதியோ, அரசு தரப்பு வழக்கறிஞரோ கண்டுகொள்ளவோ, கவலைப்படவோ மாட்டார்கள். நம்நாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிற மனநிலையை தான் வெளிப்படுத்துவார்கள்.

இறந்தவரின் மனைவியை விசாரிக்கும் பொழுது, தன் கணவர் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள தினமும் குடித்துவிட்டு தான் சாக்கடைக்குள் இறங்குவார் என சர்வ சாதாரணமாக சொல்வார். முகத்தில் துயரத்தின் சாயலே இல்லாமல் இயந்திரத் தன்மையுடன், தனது கணவரின் வாழ்க்கையையும், விபத்தையும் விவரிக்கும் பொழுது துயரின் தாக்கத்தை நம்மால் நன்றாக உணரமுடியும்.

ஒரு ஆவணப்படம் போல படம் நகருகிறது. பாடகர் மீது குற்றம் இல்லை என நிரூபித்து பெயில் வாங்கவே பல மாதங்கள் ஆகின்றன என்ற நீதிமன்றத்தின் மெத்தன இயல்பு தன்மையே நம்மை பதட்டம்கொள்ள வைக்கிறது. கோபம் கொள்ளவைக்கிறது.

இது மகாராஷ்டிரத்தின் ஒரு நீதிமன்றத்தின் நடவடிக்கை அல்ல! நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் கதை. உலகம் இரண்டாக இயங்குகிறது. இதில் முதல் உலகத்தை சேர்ந்தவர்கள் பணம் படைத்தவர்கள்; அதிகார வர்க்கங்களின் செல்வாக்கு படைத்தவர்கள்; ஆகையால் நீதிமன்றம் பெரும்பாலான சமயங்களில் அவர்களுக்கு சேவை செய்கிறது. இன்னொரு உலகத்தை சேர்ந்தவர்கள் ஏதுமற்றவர்கள்; ஒடுக்கப்பட்டவர்கள்; அவர்கள் தான் இந்திய சிறைகளில் நிரம்பி வழிகிறார்கள்; அவர்களுக்காக பாடுபடுவர்களும் இப்பொழுது சிறையில் வதைபடுகிறார்கள். போராட்டம் தவிர வேறும் ஏதும் குறுக்குவழிகள் இல்லை.

சமூக அக்கறை கொண்ட படம். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையும், திருப்பதியும்!


கொரானா தொற்றை முன்வைத்து, அரசு அறிவித்த ஊரடங்கு முடிந்து ஒரு வருடத்தை கடந்துவிட்டோம். கொரானாவின் இரண்டாவது அலை இன்னும் புதிய வீரியத்துடன் பரவி வருகிறது என கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் சொல்லிவருகிறார்கள். இன்று தில்லி, சண்டிகார், சட்டிஸ்கரில் இரவில் நடமாட்டம் இருக்க கூடாது என சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே மகாராஷ்டிரம் பல அறிவிப்புகளை கொடுத்தப்படி தான் இருக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு, ”முழித்துக்கொண்டு” தமிழக அரசும் பல அறிவிப்புகளை இன்று அறிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றமும், தேர்தல் வரை அமைதியாய் இருந்துவிட்டு, கவனமாகவே இல்லையே? என கண்டித்திருக்கிறது.


இந்த அறிவிப்புகளுடன் இன்று திருப்பதி தேவஸ்தானம் தனது பக்த கோடிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறது. வருகிற 11ந் தேதியிலிருந்து இலவச தரிசனம் ரத்து. ஏற்கனவே இணையம் வழியாக ரூ. 300 மதிப்பு கொண்ட டிக்கெட்டுகள் தினமும் 30,000 விநியோகிக்கப்படுவது மட்டும் தொடரும் என அறிவித்திருக்கிறது.

கடந்த 50 நாட்களுக்கு முன்பாக, அண்ணன், அக்கா குடும்பம் திருப்பதியை பார்க்க டிக்கெட் புக் பண்ணி தரச் சொல்லி, கேட்டிருந்தார்கள். மாத இறுதியில் இணையத்தில் திறக்கும் பொழுதே டிக்கெட்கள் ரயில் டிக்கெட்டை விட பரபரவென விற்றுத்தீர்ந்துவிட்டன. யாரோ ஒரு உறவினர் இலவச தரிசனத்திற்கு இப்பொழுது அனுமதிக்கிறார்கள் என்று சொன்னவுடன், உடனே ஒரு வேனைப் பிடித்து திருப்பதி கிளம்பிவிட்டார்கள். நானும் திருப்பதியை பார்த்திராததால், பார்க்கலாம் என சென்னையில் இருந்து கிளம்பி அவர்களுடன் இணைந்துகொண்டேன்.

2021 பிப்ரவரி இரண்டாவது சனிக்கிழமை. கீழ்த்திருப்பதியை அடைந்து, இலவச தரிசனத்திற்கான டோக்கன் தருகிற இடத்தை அடையும் பொழுது. காலை 11 மணி. மிக நீண்ட வரிசை. மாஸ்க் இல்லை. தனிநபர் இடைவெளி இல்லை. ஒரு மணி நேரம் நின்று எல்லோருக்கும் தனித்தனியாக டோக்கன் வாங்கினோம். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு 25000 பேர் அனுமதி.

இலவச தரிசனத்திற்கு அனுமதி 25000. இணையத்தின் வழியே 25000. இது தவிர கீழ்த்திருப்பதியிலிருந்து நடந்து செல்லும் இரண்டு வழிப்பாதைகள் வழியாக செல்லும் பக்த கோடிகளின் எண்ணிக்கை தனி. அந்த தரிசனத்துக்கு இலவச தரிசனம் என்ற பெயர் இல்லை. 3800 படிகள் வழியாக நடந்து செல்வதால் திவ்ய தரிசனம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சற்று ஏறக்குறைய 60000 பக்த கோடிகள்.

எண்ணிக்கை எல்லாம் தெரிந்து தானே விடுகிறார்கள். மேலே போய் அறை எடுத்துக்கொள்ளலாம் என சொந்த வேனில் ஞாயிறு மாலை மலையேறினோம். அங்கே போனால், அறைக்காக பெருங்கூட்டம் புதுப்படத்திற்கு திரையரங்கில் நெருக்கியடித்து வரிசையில் நிற்கிறார்கள். அங்கும் பெரும்பாலோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. சானிடைசரும் எங்கும் வழங்கப்படவில்லை. நிறைய கூட்டம் கூடியதும், ஒரு போலீஸ் மரியாதையே இல்லாமல் ”இங்கு வரிசையில் நிற்பவர்களுக்கே அறை கிடைப்பது சாத்தியமில்லை. ஆகையில் மற்றவர்கள் உடனே கலைந்து செல்லுங்கள்” என போலீஸ் பக்த கோடிகள் மீது மரியாதையே இல்லாத தொனியில் அறிவித்தார். பிறகு முனகிகொண்டே கலைந்து சென்றார்கள்.

கட்டணம் இல்லாமல் தங்கும் மிகப்பெரிய தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிற ஹால்கள் பற்றி விசாரித்து, அன்றிரவு தங்கினோம். இரவு 10 மணிக்கு இடப்பிரச்சனையில் இரண்டு மொழிக்காரர்கள் கடுமையாக சண்டைப்போட்டுக்கொண்டார்கள். பிறகு சுற்றியிருப்பவர்கள் சமாதானம் செய்துவைத்தோம்.

காலையில் மாசி முதல் வாரம் என்பதால் நன்றாக பனி இருந்ததால், நன்றாக குளிர் இருந்தது. அதிகாலையில் 5 மணிக்கு போய் இலவச தரிசன வரிசையில் போய் நின்றோம். எங்களுக்கு முன்பும், பின்பும் பல நூறு கணக்கில் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். திரையரங்கு கவுண்டர் போல கொஞ்சம் அகலமாய் கவுண்டர்கள் வழியாக செல்ல ஆரம்பித்தோம். 20 அடிக்கு ஒருமுறை மாஸ்க் அணியுங்கள். தனிநபர் இடைவெளியை கடைப்பிடியுங்கள் என அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தார்கள். ஆனால், ஓட்டமும் நடையுமாய் போய் மக்கள் நெருக்கமாய் போய்க்கொண்டே இருந்தார்கள். பிறகு 8 மணி வாக்கில் 300 பேர் வரை உட்கார்ந்து ஓய்வெடுக்கும் அளவிற்கு அறையில் அடைத்து வைத்தார்கள். இப்படி இலவச தரிசன பக்தர்கள் போய்க்கொண்டிருக்கும் பொழுதே, வேறு ஒரு வரிசையில் இருந்து ரூ. 300 கட்டணம் பெற்றவர்களும் இணைந்துகொண்டார்கள். ஜே ஜே ஒரே திருவிழா கூட்டம்.

பாலாஜியை பார்க்கவேண்டும் என்ற பக்தி பரவசத்தில் ஒரு நான்கு வயது பையனை விட்டுவிட்டு பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துவிட்டார்கள். அவன் பரிதாபமாய் அழுதுகொண்டு நின்றுக்கொண்டிருந்தான். தேவஸ்தான ஊழியர்கள் அவனை பாதுகாத்தார்கள். கால்மணி நேரம் கழித்து எதிர் திசையில் அந்த பையனை தேடி பெற்றோர்கள் பதட்டமாய் வந்துகொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக திருப்பதி பாலாஜியை நெருக்கத்தில் பார்த்த பொழுது, காலை 9.30 மணியாகிவிட்டது. என்னருகே வந்த பக்தர் ஐந்து செகண்ட்டுக்கு மேல் நின்று பார்த்துவிட்டார் என்பதற்காக, ஒரு ஊழியர் கடுமையாக அவர் கையை பிடித்து இழுத்து, போகிற வழிப்பக்கம் தள்ளிவிட்டார். காலை 5 மணியிலிருந்து 9.30 மணி வரை கிட்டத்தட்ட 7 கிமீக்கு மேலேயே நடந்திருப்போம். இந்த நான்கு மணி நேரத்தில் ஒரே இடத்தில் மட்டும் ஒரு 20 வயது பெண் ஊழியர் கிருமிநாசினியை கையில் அடித்தார். பிறகு வேறு எங்குமே கிருமிநாசினி தரவேயில்லை.

அன்னதானம் போடுமிடத்திற்கு வரும் பொழுது காலை 10 மணியை தாண்டிவிட்டது. டிபன் நேரம் முடிந்ததால், சோறு போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே நேரத்தில் அந்த ஹாலில் நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கமாய் அமர்ந்து தான் சாப்பிட்டார்கள்.

நிற்க. இதை ஏன் விரிவாக சொல்கிறேன் என்றால், மாஸ்டர் படம் வந்த பொழுது, பிரபல நடிகருக்கு ரசிகர்கள் மேல் கொஞ்சமும் அக்கறையின்றி திரையரங்கில் 100% இருக்கைகளுக்கு அரசிடம் அனுமதி கோரினார். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ உடனே அரசு மக்கள் மீது எந்தவித அக்கறையும் இன்றி, 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி என்பதை 100%யாக உத்தரவை அளித்தது. அரசை ஊரே காறித்துப்பிய பிறகு, ஒரு மருத்துவர் ”முன்களப்பணியாளர்கள் கொரானா பெருந்தொற்றை எதிர்த்து சண்டையிட்டு, சோர்ந்து போயிருக்கிறோம். அனுமதியை திரும்ப பெறுங்கள்” என உருக்கமாய் ஒரு கடிதம் எழுதி வைரல் ஆனது. பிறகு தான் 100% என்ற உத்தரவை திரும்ப பெற்றது.

இதெல்லாம் திரையரங்கிற்கு தானா? கோயில்கள் என்றால், கொரானா பரவாதா? கொரானாவிற்கு கடவுளை அண்டாதா? அப்படியும் இல்லையே! கொரானா காலத்தில் எல்லா கோயில்களையும் ‘பாதுகாப்பாய்” மூடித்தானே வைத்திருந்தோம். இப்பொழுது இரண்டாவது அலை பெரிதாய் வரும் பொழுது யாரும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை. இப்படி தினமும் 60000த்துக்கு மேல் மக்களை கூட்டம் கூட்டமாக அனுமதிக்கிறோமே? கொத்து கொத்தாக மக்கள் நோய்வாய் படமாட்டார்களா? அதில் பல பக்தர்கள் செத்துப் போய்விட மாட்டார்களா? எவன் எக்கேடு கெட்டா என்ன? எனக்கு கல்லா நிறையனும் என்று நினைக்கிற ஒரு கேடு கெட்ட முதலாளியை போல திருப்பதி தேவஸ்தானம் சிந்திக்கிறதா? அல்லது மக்கள் நலன் மீது ஆந்திர அரசுக்கு அக்கறை இல்லையா?

திருப்பதிக்கு ஆந்திர மக்கள் மட்டுமில்லை. எல்லா மாநிலத்திலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாய் போய்வருகிறார்கள். அங்கு வந்துவிட்டு போனால், பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா பரவதா? மற்ற மாநில அரசுகளும் ஏன் இதை கண்டுகொள்ள மறுக்கின்றன?

தெலுங்கு சண்டைப் படம் என்றால், மூளையை கழட்டிவைத்துவிட்டு தான் படம் பார்க்கவேண்டும் என்பார்கள். கோயில்கள் என்றாலும் அப்படித்தானா? மூளையை கழட்டிவைத்துவிட வேண்டுமா? அறிவுபூர்வமாக சிந்திப்பது நின்றுவிடுமா?

ஊருக்கு போய் வந்த பிறகு, தொழில்முறை நண்பர் ஒரு செய்தியை அனுப்பினார். ஐஆர்சிடிசி நிறுவனம் இணையத்தில் பதிவு செய்து, திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துப் போய், பாலாஜியை பார்ப்பதற்கு, லட்டு வாங்குவதற்கு, ஊரில் வந்து பாதுகாப்பாய் இறக்கிவிடுவது வரை ஒரு கவர்ச்சிகரமான பேக்கேஜை அறிவித்திருந்தது. ”கொரானா காலத்தில் ரிஸ்க் வேண்டாம் சார். உயிர் முக்கியம் என்றதும் “ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான்” என்றார்.

திருப்பதி கோயிலில் ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் மத்தியில் கொரானா பரவியும் இருந்தது நாம் செய்திகளில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். எல்லாம் தெரிந்தும், இப்படி தினமும் 60000த்துக்கும் மேற்பட்டவர்கள் போய் வருவதை எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

இந்த சமயத்தில், தவிர்க்கமுடியாமல், ஊரடங்கு அறிவித்த பொழுது முசுலீம்கள் மீது காட்டிய காழ்ப்பு நினைவுக்கு வருகிறது. ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்ட சமயத்தில், போக்குவரத்து பிரச்சனையால் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்களை கொரானாவை திட்டமிட்டே பரப்பினார்கள் என இந்துத்துவ வெறியர்கள் விசம பிரச்சாரம் செய்தார்கள். உலகம் கொரானாவை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த பொழுது, இவர்கள் அப்பொழுதும் சிறுபான்மையினர் மீது தங்கள் வெறுப்பரசியல் செய்துகொண்டிருந்தார்கள். கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள்.

தப்லீக் ஜமாத் வழக்கு குறித்த தீர்ப்பில் மும்பை நீதிமன்றம் "நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" கூறியது.

பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டியவர்கள் எல்லாம், பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். விளைவு கொரானா நம்மை சுற்றி வளைக்கிறது. கொல்கிறது. இதையே காரணம் காட்டி, ஊரடங்கை அமுல்படுத்துவார்கள். உடைமை உள்ளவர்களுக்கு கவலையில்லை. புதுசு புதுசா சமைத்து, யூடியூப்பில் அப்லோட் செய்வார்கள். இல்லாத பெரும்பான்மை மக்கள் என்ன செய்வார்கள்? இதோ இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் கொளுத்தும் வெயிலில் குடும்பம் குடும்பமாய் நடந்து சென்றவர்களில் எத்தனை பேர் செத்தார்கள் என்ற கணக்கே இல்லை என இந்திய அரசு வெட்கமில்லாமல் உச்சநீதி மன்றத்தில் சொல்லியது!

’பேரரசர்’ நம்மை எல்லாம் தட்டில் சத்தம் எழுப்பி, கொரானவை விரட்ட சொன்னார். நமக்கு வாய்த்த பேரரசரும், மந்திரிகளும் ”மகா புத்திசாலிகள்”.

சிவில் சமூகம் தான் விழிப்போடு இருக்கவேண்டும்.